
ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? அரசியல் பின்னணியா.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
சென்னையில் உணவகத்திற்கு சென்றபோது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இது விஜய்யின் தவெகவினரால் தான் நிகழ்ந்திருக்க கூடும் என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதில் அரசியல் தலையீடு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
உணவகம் அருகே உள்ள வீட்டின் வாசலில் காரை நிறுத்தியதால் வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாதபடி ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியதால் கண்ணாடியை உடைத்து இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக்கில், ‘தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை’ என்று பதிவிட்டு இருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் புகார்
தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் உள்ளார். சென்னையில் வசித்து வரும் ஜேம்ஸ் வசந்தன் நேற்று சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றார். அப்போது அவரது காரை உணவகத்திற்கு வெளியே நிறுத்தியிருந்தார். உணவகத்தில் சாப்பிட்டு விட்டு ஜேம்ஸ் வசந்தன் வெளியே வந்தார்.
அப்போது அவரது காரின் பின்பக்க இருக்கை அருகே உள்ள விண்டோ கண்ணாடி உடைந்து இருந்தது. இதனால் ஜேம்ஸ் வசந்தன் அதிர்ச்சியடைந்தார். கார் கண்ணாடியை உடைத்தது யார்? என தெரியாததால், உடனடியாக நீலாங்கரை போலீசில் ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். உணவகத்தின் முன் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அரசியல் தலையீடு இல்லை
இதற்கு இடையே ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில், கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, ”தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணகவத்திற்கு சாப்பிடச் சென்றபோது..” என கூறி இருந்தார். விஜய்யின் தவெகவினர் மீது சந்தேகம் கிளப்பி மறைமுகமாக என விமர்சனம் செய்து உள்ளதாக கூறப்பட்டது.
ஜேம்ஸ் வசந்தனின் இந்த போஸ்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. ஏற்கனவே தவெகவினருக்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் இப்படி பேசி வந்ததால் அவர்களை குறிப்பிட்டே இப்படி பதிவு போட்டிருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் போலீசார் விசாரணையில், உணவகம் அருகே உள்ள வீட்டின் வாசலில் காரை நிறுத்தியதால் வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாதபடி ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியதால் கண்ணாடியை உடைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் விளக்கம்
போலீசார் கூறுகையில், “ஜேம்ஸ் வசந்தன் உணவகம் செல்லும் போது, தனது காரை அப்பகுதியில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி சென்று இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் காரணம் இருக்கலாம் என நினைத்து ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்த நிலையில் அரசியல் காரணம் இல்லை என்பதால் வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில், “என் கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. கல் எறிந்த நபர் எச்சரித்து அனுப்பப்பட்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.