செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன்,
புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkapore.news
Akkappore.com /just click now

புதுத்துறை விவசாயி திரு. கணேசன் கண்டுபிடித்த மயில் விரட்டி கருவிகள் – உழவர்களின் பங்கேற்புடன் வயல்வெளி பரிசோதனை, மதிப்பீடு, மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம்…
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன்,
புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkapore.news
Akkappore.com /just click now
பிப்,24,2026
புதுத்துறை விவசாயி திரு. கணேசன் கண்டுபிடித்த மயில் விரட்டி கருவிகள் – உழவர்களின் பங்கேற்புடன் வயல்வெளி பரிசோதனை, மதிப்பீடு, மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம்.


புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கணேசன், தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள் பயிரை சேதப்படுத்தியதால் சுமார் 20 மூட்டைகள் நெல் மகசூலை இழந்தார்.
பயிர் செய்யப்பட்ட நிலத்தில் மயில்கள் நுழைவதைத் தடுக்கவும், பயிர் சேதத்தை குறைக்கவும், வீட்டில் வீணாக இருக்கும் பொருட்களை பயன்படுத்தி குறைந்த செலவில் விவசாயிகளால் பயன்படுத்தக் கூடிய இரண்டு புதுமையான காற்றுச் சுழற்சி ஒலிப்பான் மற்றும் ஒளி மற்றும் ஒலி பிரதிபலிப்பான் கருவிகளை வடிவமைத்து தாமே உருவாக்கினார். அவற்றை ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் நிறுவி, மயில்கள் வயலுக்குள் வருவதைத் தடுத்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை இல்லாமல் செய்து வெற்றி கண்டார்.

அவற்றில், காற்றுச் சுழற்சி ஒலிப்பான் கருவி மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும் போல்டுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காற்றாலை தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கருவி, காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான ஒலியை எழுப்பி, மயில்களை அச்சுறுத்தி வயலுக்குள் வராமல் தடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல், மயில்கள் வயலுக்குள் வருவதைத் தடுக்க மேலும் ஒரு ஒளி மற்றும் ஒலி பிரதிபலிப்பான் கருவி, சூரிய ஒளியை பிரதிபலிக்க கண்ணாடி குவளைகள் மற்றும் வீசும் காற்றைப் பயன்படுத்தி ஒலி எழுப்ப உலோக வளையங்களை கொண்டு அவரால் தயாரிக்கப்பட்டது.
திரு. கணேசன் அவர்களின் மயில் விரட்டி கருவிகளை நேரடியாக களத்தில் பார்வையிட்டு பரிசோதனை, மதிப்பீடு, மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்ய, பிற விவசாயிகள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் 12 மாணவர்கள் மற்றும் 17 மாணவிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னோடி விவசாயிகளான வடக்கு வரிச்சிக்குடி திரு. பாஸ்கர், சேத்தூர் பண்டாரவாடை திரு. ஜெயராஜ், அகலங்கன்னு திரு. பிரபாகரன், சீயாத்தமங்கை திரு. தமிழ்வளவன், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான திரு. தனபால் ராஜேந்திரன், திரு. கைலாசம், திருமதி கஸ்தூரி, திருமதி ராதா ஆகியோர் விவாதங்களில் கலந்துகொண்டு கருத்துகள் தெரிவித்தனர்.
முனைவர் அனந்த்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், விவசாயத்தை வெகுவாக பாதித்தாலும், மயில் தேசியப் பறவை என்பதால் அதை யாரும் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது. அதனால், வயலுக்குள் மயில்கள் வராமல் தடுக்கும் திரு. கணேசன் அவர்களின் காற்றுச் சுழற்சி ஒலிப்பான் மற்றும் ஒளி மற்றும் ஒலி பிரதிபலிப்பான் கருவிகள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனினும், கூடுதலாக ஆராய்ச்சி செய்து அந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம் என்றார்.
இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் பேசுகையில், அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வயலில் நீர் தேங்கி வைத்தல் மயிலின் தாக்குதலைக் குறைக்கலாம். அதற்கு பிறகு சுமார் 10 நாட்கள், மயில்கள் காலை 6:30–8:30 மணி வரை மற்றும் மாலை 3:30–6:30 மணி வரை வயலுக்கு வந்து தானியங்களை உண்ணும் நேரங்களை அறிந்து விரட்டினால், அந்த மயில்கள் மீண்டும் வராது. ஆனால், வேறு மயில்கள் வர வாய்ப்புண்டு. குறிப்பிட்ட நேரங்களில் மயில்களை விரட்டினால், அவற்றை திறம்படக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
மாணவி ஸ்ரீ சத்ய கலா தனது பின்னூட்டக் கருத்தை தெரிவிக்கும்போது, கொன்னக்காவலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கண்ணன் தனது மிளகாய் வயலில் 6 அடி உயர காம்புகளை நட்டு குறுக்கு–நெடுக்கு முறையில் நைலான் கயிற்றை மேலே கட்டி, மயில்கள் பறந்து உள்ளே நுழையாதவாறு செய்து பயிர்களை காப்பாற்றி உள்ளார் என்ற பயனுள்ள தகவலை பகிர்ந்தார்.
மேலும், சீயாத்தமங்கை கிராம விவசாயி திரு. தமிழ்வளவன் பேசுகையில், மயில் விரட்டிக் கருவிகள் இரவிலும் எழுப்பும் ஓசை எலிகளை கட்டுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். திரு. கணேசன் தனது அனுபவங்களின் அடிப்படையில் அந்த கருத்தை ஆமோதித்தார். அதனால், அந்த கருவிகள் மயில் விரட்டி மட்டுமல்ல, எலி விரட்டியும் கூட என்ற கள ஆய்வில் கண்டறியப்பட்டது.
கள ஆய்வின் விவாதங்கள் மற்றும் பரிந்துரைகளை மாணவர்கள் யோகப்பிரியா, லாவண்யா, சந்தியா, தமிழ்மாறன், ஸ்ரீராம் சாம் ஆகியோர் பதிவு செய்து ஆவணமாக்கினர். விவசாயிகளுக்கு உதவும் விதமாக கூட்டக் குறிப்புகளை சிவசக்தி மற்றும் சரோஷ்ணி தயாரித்தனர்.
முன்னதாக மாணவர் சேரன் அனைவரையும் வரவேற்றார். மாணவி அக்க்ஷதா நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் நன்றி உரைத்தார்.
✒️செய்தி ஆசிரியர் ,மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணி வண்ணன்,
புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkapore.news
Akkappore.com /just click now
