
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் ஒரு தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனான ஆலோசனையின் போது கோவையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கினால் மட்டுமே போட்டியிடுவேன் என்று அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு அறிவுறுத்திய நிலையில், மொடக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்றும் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. பாஜக சார்பாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சில வாரங்களுக்கு முன்பே அண்ணாமலை கடிதம் அனுப்பி இருந்தார். அதேபோல் பிஎல் சந்தோஷ் முன்னிலையிலேயே வெறும் ஒரு மாதத்தில் ஒரு தொகுதியில் பணியாற்றி எப்படி வெல்ல முடியும் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இருந்தாலும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அப்போது புதுச்சேரியில் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலை, அவசரமாக அழைக்கப்பட்டார்.
இதனால் ஹெலிகாப்ட்டரில் சென்னை வந்த அண்ணாமலை, பாஜகவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பாஜக மேலிடம் சொன்ன தகவலை பியூஷ் கோயல் பகிர்ந்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதன்பின் அண்ணாமலை தரப்பில் கோவை தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுகிறேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் கோவையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அந்த தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன் ஆயத்தமாகி வருகிறார்.
இதனால் மொடக்குறிச்சி, ராமநாதபுரம் அல்லது திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதியில் போட்டியிட முடியுமா என்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக அண்ணாமலை இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன் என்பதில் கவனமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.