

“பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கதாநாயகன் விஜய் சேதுபதி இசை இளையராஜா.


விஜய் சேதுபதியும் குமாரராஜா தியாகராஜனும்…
இனி…..பாக்கெட் நாவல் ஆசிரியர் ஜி.அசோகன் பேசுகிறார்:
1985-ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் சுவர்களில் பாக்கெட் நாவல் பாக்கெட் நாவல் என போஸ்டர்களாக ஒட்டப் பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் பாக்கெட் நாவல் என்ற பெயரில் பதிப்பக புத்தகங்கள் வரும், அதற்கு இணையாக தமிழில் ஒரு மாத நாவல் அதற்கு பெயரும் பாக்கெட் நாவல்.
கையடக்கமாக இரண்டு ரூபாய்க்கு பளபளப்பான லாமினேஷனோடு ஜி.கே.மூர்த்தி என்ற ஓவியர் வரைந்த அட்டைப்படத்துடன் வெளிவந்தது.
தில்லானா மோகனாம்பாள், துலாபாரம், இருகோடுகள், காதலிக்க நேரமில்லை, தெய்வ மகன், சிவந்த மண் என்று பழமை பண்பாட்டில் அதிகப்பட்சமாக ஸ்டூடியோவிற்கு உள்ளேயே செட் போடப்பட்டு திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் பதினாறு வயதினிலேயே என திரைப்படம் வெளிப்புற படப்பிடிப்பில் வெளிவந்தது.

அதேபோல் பாக்கெட் நாவல் நாவல் உலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
பஸ்சில். ரயில் பயணத்தில், வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் ராணி, கல்கி இவற்றுடன் பாக்கெட் நாவலும் சேர்ந்து கொண்டது.

பி.டி.சாமி என்ற பேய்க்கதை மன்னன் என்னை சந்திக்கும் போதெல்லாம் பாக்கெட் நாவலில் என் நாவல் எப்பபோது வரும் என கேட்பார்.
அசோகன் என்றிருந்த நான் பாக்கெட் நாவல் அசோகன் என்று தமிழ் வாசகர்களின் செல்லப் பிள்ளையானேன்.

2010-ல் தமிழ் திரையுலகில் ஆரிய காண்டம் என் தமிழ் திரைப்படம் வெளிவந்தது.
இதை இயக்கிய இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் அந்த வருடத்தின் சிறந்த அறிமுக இயக்குனர் என்று தேசிய விருது பெற்றார். முதல் படத்திலேயே இந்திய அளவில் சிறந்த இயக்குனர் ஆனார்.
2019-ல் விஜய் சேதுபதி, பகத் பாஸில் நடிக்க சூப்பர் டீலக்ஸ் என்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றி படத்தை இயக்கினார்.
சென்ற மாதம் என் நண்பர் திரைப்பட எடிட்டர் சத்யராஜ் நடராஜன் மூலம் தியாகராஜன் குமாரராஜா தொடர்பு கொண்டு… ‘என் எழுத்துலக செயல்பாடுகளை பாராட்டியதோடு … அவர் இயக்கி, விஜய் சேதுபதி நடிக்க இசைஞானி இளையராஜா இசையமைக்கும் புதிய படத்திற்கு பாக்கெட் நாவல் என பெயரை வைக்க விரும்புகிறேன், உங்களின் ஒப்புதல் வேண்டும். கிடைக்குமா’
என்றார்.

உடனே என் அனுமதியை வாழ்த்துகளோடு தந்துவிட்டேன்
நேற்றைய முன்தினம் தியாகராஜன் குமாரராஜா இயக்கி விஜய்சேதுபதி நடிக்க இசைஞானி இசையமைக்கும் பாக்கெட் நாவல் திரைப்படத்தின் அறிமுக விவரத்தை வெளியிட்டார்.
பாக்கெட் நாவல் திரைப்படத்தின் விவரம் வெளிவந்ததும் எனக்கு வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது.

பாக்கெட்நாவல் என தன் படத்திற்கு பெயர் என்னிடம் முறைப்படி அனுமதி கேட்ட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்களின் பண்பை பாராட்டுவதோடு வாழ்த்துகளையும் தெரிவிப்போம்…!!

ஊசிக்குறிப்பு:- திரைப்படத்தின் விளம்பரம் வந்ததுமே என் நண்பர்கள், வாசகர்கள் பலர் இந்த தலைப்பை எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு சம்மதம் தந்தீர்கள் என கேட்கிறார்கள்,
உண்மையில் தியாகராஜன் குமாரராஜா என்னிடம் நீங்கள் இந்த தலைப்பை என் படத்திற்கு பயன்படுத்திக்கொள்ள எதுவும் எதிர்பார்க்கிறீர்களா, வேண்டுமா என்று கேட்டதும் உண்மை, நான் பதட்டத்துடன் மறுத்ததும் உண்மை… நான் மறுக்க காரணம்… என் மகனுக்கு நல்ல பெண் தான் வேண்டும் நகை நட்டு எல்லாம் வேண்டாம் என்பவர்கள் போல் இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்குவதே எனக்கு பல கோடி கிடைத்ததற்கு சமம் என்றேன்.
……………..
அக்கப்போர் இணைய நாளிதழ் வாசகர்களே..
பாக்கெட் நாவல் ஆசிரியர், என் பத்திரிக்கை உலக குருநாதர் அண்ணன் ஜி.ஏ அசோகன் அண்ணன் பெருந்தன்மையை, படைப்பாளியான இயக்குனரை மதிக்கும் பண்பை நாமும் வாழ்த்தி தலை வணங்குவோம்..
தொகுப்பு:
பாசமிகு தம்பி….
பாக்கெட் நாவல் ஆசிரியர் G.A அண்ணன் ஆயுட்கால வாசகன் பத்திரிக்கையாளன் ஆர்.கே.விக்கிரம பூபதி



