



எழுத்தாளர் பாலகுமாரனை வருத்தம் கொள்ளச் செய்த நான் எடுத்த “தாய்” நேர்காணல்…!! பாடலாசிரியர் பழநி பாரதி நெகிழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இனி …தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் பழநி பாரதி பேசுகிறார்:
நான் ‘தாய்’ பத்திரிகையில் பணியாற்றிய எண்பuதுகளில்
ஒரு நாள் காலை
பதினொரு மணியிருக்கும்.
என் கட்டுரை ஒன்றிற்குப் பிழைதிருத்திக்கொண்டிருந்தேன். ‘நான் பழநிபாரதியைப் பார்க்க வந்திருக்கிறேன்…’ என்றொரு குரல்…
நான் திரும்பிப் பார்த்தபொழுது பாலகுமாரன் நின்றிருந்தார்.
அந்த வார இதழில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் செ.யோகநாதனிடம் நான் எடுத்த பேட்டி வெளியாகி இருந்தது.
சாண்டில்யன் தலையணை தைக்கிறவர்…
பாலகுமாரன்
நவீன அருணகிரிநாதர்…
இப்படி சில எழுத்தாளர்கள் குறித்து யோகநாதன் அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தார். அது பாலகுமாரனை வருத்தப்படுத்தியிருக்கிறது. ஆனால் அதை அவர் அங்கே வெளிப்படுத்தவில்லை.
“பழநி… நீ சாய்ங்காலம்
என் வீட்டுக்கு வரணும்.
நான் உன்னோட பேசணும்” என்றார்.
மாலை அவர் இல்லத்தில் நுழைந்த போது, போளி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வா பழநி என்று உள்ளழைத்து… “அம்மா பழநிபாரதிக்கு ரெண்டு போளி கொண்டாம்மா” என்றார் துணைவியாரிடம்.
நல்ல காபியுடன் எங்கள் உரையாடல் தொடர்ந்தது… “பழநி, பேட்டி பார்த்தேன். நல்லாருந்தது. யோகநாதனுக்கு நான் பதில் சொல்றேன். அதை நீயே என்னைப் பேட்டியாக எடுத்து எழுதணும்” என்றார்.
நான் ஒரு பேட்டி எடுத்து, அதற்கான மறுப்பையும் நானே பேட்டியாக எடுப்பது முறையல்ல. உங்கள் மறுப்பை நீங்களே எழுதிக் கொடுங்கள். ஆசிரியரிடம் சொல்லி பிரசுரிக்கிறோம்” என்றேன்.
என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சரி வேண்டாம் என்று இயல்பான பேச்சுக்குத் திரும்பிவிட்டார்.
பிறகு நீண்ட கால இடைவெளியில்…
பத்திரிகையாளரான நான் பாடலாசிரியராகி இருந்தேன்.
2002 ஆம் ஆண்டு என நினைவு… இயக்குநர் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படத்திற்குப் பாடல் எழுத என்னை அழைத்திருந்தார். ‘காதலாகி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்தப் படம்தான் பின்னாளில் ‘காதல் கொண்டேன்’ என வெளிவந்தது.
நான் அவரது அலுவலகத்திற்குச் சென்ற பொழுது பாலகுமாரன் அங்கிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்தான் அந்தப் படத்திற்கு வசனம்.
என்னைக் கண்டதும்…
” பழநி உன் பாட்டெல்லாம் நிறைய கேட்கிறேன்மா. நல்லா எழுதுற… ஆனா உன்னால ஏன் முதலிடத்துக்கு வர முடியல?” என்றார்.
நான் பதிலுரைக்க முயற்சித்தபோது…”சாக்கு சொல்லாத. சாக்கு சொல்ல ஆரம்பிச்சா கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் சாக்கு சாக்கா சாக்குக் கிடைக்கும். உழை. நான் எவ்ளோ உழைக்கிறேன் தெரியுமா? நான் எழுதுறத காப்பி எடுத்தாலே முதுகு வளஞ்சிடும். செய்; அல்லது செத்து மடி” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அந்தச் சொற்களுக்கு சாட்சியாக அவரது நூல்கள் அவரைவிட உயரமாக எழுந்து நிற்கின்றன.
1996ல் எனது திருமணத்திற்கு அவரை அழைத்திருந்தேன். வந்திருந்து வாழ்த்தி அவரது சில நூல்களை எனக்குப் பரிசளித்தார். அதில் ஒரு புத்தகத்தின் தலைப்பு மிக அழகானது…
‘அன்புக்குப் பஞ்சமில்லை’


