ஓபிஎஸ் வந்து…ஒரு வாரம் கூட ஆகலியே…!! அதற்குள் அதிரும் ‘அறிவாலய’ கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை!

திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்ததை திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் ரசிக்கவில்லை என்றும், ஓபிஎஸ் எதிர்பார்க்கிற கட்சி பதவி அவருக்கு கொடுக்கக்கூடாது என்றும் கட்சியின் தலைமைக்கு நெருக்கமான அதிகார மையத்துக்கு தகவல் தெரிவித்தபடி இருக்கின்றனர்.

திமுகவை வலிமைப்படுத்தவும் அதிமுகவை பலகீனப்படுத்தவும் அதிமுகவில் கோலோச்சிய வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் வி.ஐ.பி.க்களை திமுகவில் இணைத்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவிற்கு சமீபத்திய வரவாக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் சீனியர்களில் ஒருவருமான ஓபிஎஸ்சின் வருகை அமைந்தது. அவரை மிக உற்சாகமாக திமுகவில் இணைத்துக் கொண்டார் ஸ்டாலின்.

திமுகவில் ஓபிஎஸ்சுக்கான பதவி என்னவென்பது இன்னும் முடிவாகவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் பஞ்சாயத்து, ராஜ்யசபா தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் முடிந்ததும் ஓபிஎஸ் விவகாரத்தில் கவனம் செலுத்த ஸ்டாலின் தீர்மானித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, திமுகவில் ஓபிஎஸ் இணைக்கப்பட்டதை திமுகவின் சீனியர்கள் மத்தியில் அதிருப்திகள் இருந்து வருகின்றன.

இதுகுறித்து சீனியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ”திமுகவிலிருந்து அதிமுக உருவானது. திமுகவை பரம வைரியாகவே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவகப்படுத்தி அதிமுக தொண்டர்களை அப்படியே வளர்த்தெடுத்தனர். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.

தாய்க்கழகத்தில் இணைகிறார்கள் என்கிற அளவு கோலில் தான் அவர்களின் இணைப்பை திமுகவினர் பார்த்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த அதிமுகவினர் திமுகவின் அதிகார மையத்தோடு நெருங்கியதால் அவர்களுக்கான முக்கியத்துவமும் அதிகரித்தது.

திமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் விவகாரங்களில் அவர்களின் தலையீடும் இருக்குமளவுக்கு அவர்களின் செல்வாக்கு அதிகரித்தது. அதற்கு தலைமையும் இடம் கொடுத்தது. திமுகவில் ஒரு மா.செ.வின் அனுமதியில்லாமல் மாவட்ட நிர்வாகிகள் அறிவாலயத்துக்குள் நுழைந்து விட முடியாது; மா.செ.க்களுக்குத் தெரியாமல் கட்சியின் தலைவரையோ, மாநில நிர்வாகிகளையோ சந்தித்துவிட முடியாது. மா.செ. க்களுடன் இணைந்துதான் கட்சித் தலைமையை சந்திக்க முடியும். திருமணத்துக்கு தேதி வாங்க வேண்டுமானால் கூட மா.செ.வின் மூலமாகத்தான் கட்சி தலைமை அணுக முடியும். அந்தளவுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். திமுகவின் சிஸ்டமும் அப்படித் தான் இருந்தது.

ஆனால், அதிமுக விஐபிக்கள் திமுகவுக்குள் நுழைந்தப்பிறகு இந்த கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல உடைக்கப்பட்டு, இன்றைக்கு அவர்கள் வைத்துதான் சட்டம் என்கிற அளவுக்கு சிஸ்டம் மாறிவிட்டது. அதிமுகவின் வி.ஐ.பி.க்கள், கட்சி தலைமையையும் தலைமையின் அதிகார மையத்தையும் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியும்; தொடர்பு கொள்ளவும் முடியும். ஆனால், திமுகவின் முக்கியஸ்தர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை. மேலும், அதிமுகவில் இணைந்தவர்களுக்குத்தான் தேர்தல் அரசியலிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கிடைக்கிறது.

அந்த வகையில், 2026-தேர்தலில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், 200 இடங்கள் எனும் இலக்கை அடைய வேண்டுமென்பதற்காகவும் திட்டமிட்டு அதிமுக வி.ஐ.பி.க்களை அறிவாலயத்துக்குள் சேர்த்து வருகின்றனர். ஆனால், அவர்களால் எந்த பலனும் திமுகவுக்கு கிடைக்கப்போவதில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ்சை இணைத்துள்ளனர். தேர்தல்னு வருகிற போது தான் அதிமுகவினரிடம் வருகை திமுகவுக்குள் அதிகரிக்கிறது. ஏற்கனவே திமுகவில் இணைக்கப்பட்டு, திமுகவில் அதிகாரமாக வலம் வரும் பலரது பின்னணிகளை ஆராய்ந்தால் அவர்கள் எல்லோருமே ஏதேனும் ஒரு தேர்தலை மையப்படுத்தியே அறிவாலயத்திற்கு வந்தவர்களாக இருப்பார்கள். இதே ஓபிஎஸ், தேர்தல் வரவில்லை எனில் திமுகவுக்கு வந்திருக்க மாட்டார்.

தற்போது, முன்னாள் முதலமைச்சராக அவர் இருந்தார் என்பதற்காக அவர் எதிர் பார்க்கும் சலுகைகளை கொடுக்க முன் வருகின்றனர். மேலும், அவரது மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், கட்சியில் உரிய, உயரிய பொறுப்பும் வழங்கப்பட திட்டமிடப்படுகிறது. அப்படியானால், அவர்களுக்கு கிடைக்கிற தேர்தல் வாய்ப்பும், கட்சி பதவியும் திமுகவினருக்கு கிடைக்க வேண்டியவை. அந்த வாய்ப்பும் பதவியும், அதிமுகவினரின் வருகையால் பறிபோகிறது. இதுதான் ஆதங்கமாகவும் விரக்தியா கவும், அதிருப்தியாகவும், புலம்பல்களாகவும் வெடிக்கின்றன.

அந்த வகையில் ஓபிஎஸ்சை இணைத்ததை சீனியர் நிர்வாகிகள் யாருமே ரசிக்கவில்லை ; விரும்பவில்லை. திமுகவிலிருந்து பிரிந்தவர்கள் தாய்க்கழகத்தில் இணைகிறார்கள் என சொல்லப்படுகிறது. அந்த இணைப்பு திமுகவை வலிமைப்படுத்தினால் பிரச்சனை இல்லை. மாறாக, திமுகவை கபளீகரம் செய்து திமுகவின் அடையாளத்தை இழக்கச் செய்து அதிமுகவாகவே மாறும் தோற்றம் உருவாகி வருகிறது என்பதுதான் எங்களின் ஆதங்கம்” என்று தங்களின் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த விரக்தி தற்போது மௌனமாக இருந்தாலும் தேர்தல் சமயத்திலேயோ அல்லது தேர்தல் முடிந்தோ பகிரங்கமாக வெடிக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top