24 – 02 – 2026

வாழும் ஜீவா தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள்… ! ! பத்திரிக்கையாளர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் நெகிழ்ச்சி…!!

சுதந்திர போராட்ட வீரர், இந்திய அளவில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், ஆன்.என்.கே ( RNK ) என்று தோழர்களால் உரிமையோடு அழைக்கப்படும் ஒப்பற்ற எளிய தலைவர் இவர் !

ஒரு முறை என் நண்பர் ஒருவர் தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய மணல் மாஃபியா முதலாளி ஒருவரை சந்திக்ச் சென்றார்.

நானும் அவருடன் சென்றேன். காரணம் அந்த மாஃபியா பெயர் மட்டுமே கேள்விப்பட்டு இருக்கிறேன், அவருடைய புகைப்படம் கூட நான் பார்த்தது இல்லை.

ஆகையால் நண்பருடன் சென்று அவரை முதல் முறையாக நேரில் பார்த்தேன்.

மிகவும் எளிமையாக இருந்தார், ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி என்று சொன்னால் யாருமே நம்ப முடியாது.

என் நன்பர் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், அதன் பின் அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.

அது சமயம் அவருடைய அலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அந்த எண்ணை பார்த்து விட்டு அந்த மாஃபியா தலைவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து அதே எண்ணில் இருந்து அலை பேசி வந்தது.

பல முறை வர, வெளியில் உள்ள ஒரு உதவியாளரை அழைத்து ” என்ன என்று கேள் ” என்று சொல்லி தன் அலைபேசியை தந்தார்.

அதை வாங்கி பேசிய உதவியாளர் சொன்ன தகவல் கேட்டு நான் வியந்து போனேன்.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கண்டித்து ஒரு தலைவர் நடத்தும் ஆர்பாட்டம் அது. அந்த பாதிப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பக்கு வகிப்பது இந்த மாஃபியாதான்.

அதை கண்டித்து ஆர்பாட்டம் அறிவித்து இருப்பவர் நான் பெரிதும் நம்பும், மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.

இந்த ஆர்பாட்டம் நடத்துவது பற்றி தகவல் சொல்லி அதற்கான அனுமதியும் இவரிடம் அவர் கேட்கிறார் என்பதே என் வியப்பிற்கு காரணம்.

சிறிது யோசித்த பிறகு, சரி நடத்தி கொள்ளட்டும் என்று அனுமதி வழங்கினார் அந்த மாஃபியா.

இதை நேரில் கண்ட என்னால் இதை பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

உங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு உங்களிடம் எப்படி அனுமதி கேட்கிறார் அந்த தலைவர், நீங்கள் எப்படி அதற்கு ஒப்புதல் தருகின்றீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார், உங்களுக்கு அந்த தலைவரை பிடிக்குமா என்று கேட்டார்.

நான் ஆமாம் என்று சொன்னேன்.

உடனே தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்கள் பற்றிய பட்டியலை சொன்னார்.

எந்த எந்த கட்சி, எந்த எந்த தலைவர்கள், ஊடகங்கள், என பல தகவல்களையும் வருமானத்தில் அவர்களும் தரும் பங்குகளை பற்றியும் சொன்னார்.

சில காட்சிகள் தேர்தல் நிதிகளாக பெற்றதையும் என் நன்பர் அவர் முன்பே சொன்னார்.

அவர் சொன்ன தகவல், அவர் குறிப்பிட்ட பட்டியல் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில தலைவர்கள் பற்றி நான் அவர்கள் பெயர் சொல்லியே கேட்டேன்.

அவர் எதுவும் சொல்லாமல் சிரித்தார்.

அப்போது என் நன்பர் ” இவரிடம் பணம் வாங்காதவர்களே இல்லை ” என்று சொன்னார்.

மேலும், இவர் யாரையும் மதிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுவே என்றார்.

உடனே அந்த மாஃபியா ” இல்லை இல்லை, நான் மிகவும் மதிப்பவர் ஒருவர் உள்ளார், இன்று வரை ஒரு பைசா கூட அவர் யாரிடமும் பெற்றது இல்லை, மக்களுக்காக வாழ்ந்து வரும் உண்மையான தலைவர், அவர் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் அவருடைய கொள்கைகளுக்கு எதிராக என் தொழில் அமைந்துவிட்டது, என்னை கேள்வி கேட்கும் தகுதி அந்த பெரியவருக்கு மட்டுமே உள்ளது அவர்தான் தோழர் ஆர். நல்லக்கண்ணு என்றார்.

தோழர் RNK பற்றி பலர் புகழ்ந்து பேசியதை நான் கேட்டு இருக்கிறேன், ஆனால் ஒரு மாஃபியா தலைவர் இவரை புகழ்ந்து பேசியதை கேட்டு வியந்து போனேன்.

அதே சமயத்தில், நாங்கள் கிளம்பும் சமயத்தில் ஊர் மக்கள் சிலர் சில உதவி கேட்டு அந்த மாஃபியா விடம் வந்தார்கள், அதை உடனே ஒப்புக் கொண்டு அவர்களை அனுப்பியதை நான் நேரில் பார்த்தேன்.

தோழர் RNK போல் ஒருவரை அடுத்த தலைமுறை சந்திக்குமா என்பது சந்தேகம்தான்!

அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறோம்.

தோழமையுடன் டி.எஸ்.ஆர். சுபாஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)