
விஜய் என் வீட்டில் தான் இருந்தார்.. படம் ரிலீஸ் ஆக நான்தான் உதவினேன்”- உண்மையை போட்டுடைத்த எஸ்.பி.வேலுமணி
“விஜய் பட ரிலீஸ் பிரச்சனையின்போது அவர் என் வீட்டில் இருந்தார்.. நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்” என கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றுப் பேசினார். அப்போது, நடிகரும் தவெக தலைவருமான விஜய் உடனான தனிப்பட்ட நட்பை நினைவு கூர்ந்து பேசிய எஸ்பி வேலுமணி, அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
எஸ்பி வேலுமணி பேசுகையில், “விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர். ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் சிக்கலில் இருந்தபோது, அவர் என் வீட்டில் வந்து தங்கி இருந்தார். என் காரிலேயே அழைத்துச் சென்று, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பேச வைத்து, ரிலீஸ் செய்ய தேவையான உதவிகளை செய்தேன். அது வேறு, நட்பு வேறு, அரசியல் வேறு” என்று பேசினார்.
மேலும், பேசிய வேலுமணி, “கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது, அங்கு செல்லாமல் சென்னை சென்றுவிட்டார் விஜய். ஒரு தலைவன் என்றால் மக்கள் உயிரைக் காக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். அது தான் தலைமைத்துவத்தின் அடையாளம்” என்று விமர்சித்தார்.
மேலும், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பலர் மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக உள்ளனர், உரிய பதவி கொடுத்தால் வந்துவிடுவோம் என கூறுகின்றனர், அதிமுகவில் இருக்கும் மரியாதை வேறு எங்கும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, “கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வரி என்ற பெயரில் வசூலித்து, அதிலிருந்து வெறும் 3 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அது போதுமா?” என்று கேள்வி எழுப்பினார்.