


1971 ஆம் வருடம்!. எனது தந்தையார் எங்கள் கிராமத்தில் நில புலத்துடன் மிக மதிப்பு மிக்கவராக இருந்தார்!ஒரு நான்கு ஐந்து கிராமத்திற்கு முனிசீப்பாகவும், . மிகச் சிறப்பான அந்தஸ்தோடும் ஏனையோர் கௌரவமாக வந்து அவரைச்சந்திக்கும் வண்ணம் வாழ்ந்தார்! அந்த நேரத்தில் நான் கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பில் , PUCபடித்துக் கொண்டிருக்கிறேன். காமராஜர் தலைமையில் ஸ்தாபனக்காங்கிரஸ் திறமாக இருந்த நேரம்! எங்கள் வீட்டிற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் வந்து போவார்கள். அதை ஒட்டிய எனது அரசியல் ஆர்வம் காரணமாக நான் காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றினேன்!! அந்த சமயத்தில் மாணவர் ஸ்தானப காங்கிரஸிலும் எனக்குப் பொறுப்பும் கிடைத்தது!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் டாக்டர் பட்டம் பெற வந்த போது அங்கே மாணவர் உதயகுமார் கொல்லப்பட்டார்! அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என் எஸ் ராமசாமி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது! நான் படித்த பாளையங்கோட்டை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சார்ந்த பிகாம் வகுப்பு மாணவர் லூர்துநாதன் ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்தார்!. லூர்து நாதன் திடகாத்திரமான இளைஞர்!விதவிதமான வண்ணங்கள் ஊடான ஆடைகள் அணிந்து வருபவர்! அவருக்கு நன்றாகக் கிட்டார் வாசிக்கவும் தெரியும்! அந்த மாணவர் அன்று அப்படியாகச் சாகடிக்கப்பட்டார்! அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நாங்கள் சென்னை வரை வந்தோம். ஸ்ரீரங்கத்தில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடேஸ்வர தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் கடுமையாக எதிர்வினை செய்தார்கள். அந்த விஷயத்தில் பழ நெடுமாறன் கருத்திருமன் போன்றவர்கள் கூட காமராஜரின் பின்னணியில் நின்றார்கள் ஆதரித்தார்கள்!
மேற்கண்ட வழக்கை விசாரிக்க ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கோதண்டராம ராஜா கமிஷனும் நியமிக்கப்பட்டது. அதேபோல அன்றைய கலைஞர் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் விடுதியான கிளைவ் ஹாஸ்டலில் போலீசார் உள்ளே நுழைந்து கடுமையாக மாணவர்களைத் தாக்கி அவர்களைத் துவம்சம் பண்ணினார்கள். தலையிலும் உடம்பிலும் ரத்தக் கரையோடு மாணவர்கள் வெளியே ஓடினார்கள் நெடு நாட்களாக அந்தக் கிளைவ் ஹாஸ்டல் தரையிலும் சுவற்றிலும் ரத்தக்கறைகள் உறைந்து போய் இருந்தன. அந்த வகையில் தொடர்ந்து மாணவர் அமைப்பின் மூலம் மூன்று போராட்டங்களை நாங்கள் மாணவர் காங்கிரஸிலேயே நடத்தினோம். பிறகு இந்தத் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவத்திற்கு ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நீதிபதி குப்பண்ணா தலைமையில் விசாரணைக்குழு அமைத்தார்கள்!
இப்படியான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்த நேரத்தில் எனது தந்தையார் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னை அழைத்து “என்னப்பா! இப்படி படிப்பு வீடு உறவு சுற்றம் எதிர்காலம் என்று பார்க்காமல் அரசியலில் ஈடுபட்டு இப்படி போய்க்கொண்டிருக்கிறாயே! சரிதானா? என்று கேட்டார். அரசியலில் உனக்கு விருப்பம் இருந்தால் அதில் ஈடுபட எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை!அது வேறு விஷயம்! ஆனால் படிப்பைத் தான் முதலில் கவனிக்க வேண்டும் என்று அவர் வாழ்வில் இறுதியாக பேசி எனக்கு புத்தி சொன்னார்.
ஆனால் என்னை பொறுத்தவரையில் நான் என்னதான் அரசியலில் ஈடுபட்டாலும் கல்லூரியில் நல்லவகையில் படித்து முதல்நிலை மதிப்பெண்கள் பெற்று விடுவேன்! அந்த வகையில் என் மீது என் தந்தையாருக்கும் நம்பிக்கை இருந்தது! நேர்மையானவனாக இருக்கின்றான்! பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறான்! வீணாகிப் போய்விடக் கூடாது என்ற நிலையில் எனக்கு ஆலோசனைகள் சொன்னார். ஆனால் அவர் இறக்கும்போது நான் அவருடன் இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பேர் சொன்ன வகையில் இறுதியாக கடைசியாக நானும் அவரும் பேசிய வார்த்தைகள் இவ்வளவுதான்.
அன்றிலிருந்து அரசியலில் தொடர்ந்து நீடித்து வருகிறேன்! 54 மேல் வருடங்கள் ஆகிறது! நான் சில கட்சிகள் மாறினேன். ஏன் மாற வேண்டிய நிலைமை வந்தது? நான் ஏதாவது கேள்விகள் கேட்கும் போது சில விஷயங்களில் அவர்களது நடத்தைத் தவறாக போகிறது என்று சொல்லும் பொழுது என்னை அவமானப்படுத்தினால் இப்போதும் சொல்வேன் அங்கே என் சுயமரியாதையைத் தான் முக்கியமாக நினைப்பேன்.
என்றும் என்னளவில் அவர்களுக்காக அக்கறையுடன் உழைத்து உதவி செய்து அவர்களது சிரமங்களை எல்லாம் பக்கபலமாக இருந்து தீர்த்துக் கொடுக்கும் அளவிற்கு வந்த பிறகும் அதை அனுபவித்தவர்களே என்னைப் புறக்கணிக்கும் பொழுது நான் என்னைப் பொருத்தளவில் இருப்பதா?வெளியேறுவதா? என்று முடிவு எடுக்க வேண்டியது தானே நியாயம்! அந்த வகையில் நான் எனது வழக்கமான நம்பிக்கையோடு கட்சிகள் மாறினேன். எங்கு சென்றாலும் முறைகேடுகள். எது எப்படி இருந்த போதும் அங்கே பல வகையில் நான் உழைத்துக் கொடுத்த பிறகு அதிருப்தி அடைந்து மாறிய போதும் கூட அந்தக் கட்சிக்கூடுகளிலிருந்து ஒரு துரும்பைக் கூட எடுத்துக்கொண்டு நான் வரவில்லை! உண்மையில் அந்தக் கூட்டினை கட்டுவதற்கு பலவகையில் உதவி செய்திருக்கிறேன். அதற்குப் பதிலாக நான் இந்த அரசியலில் எதையும் சம்பாதித்ததில்லை. என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும்! அரசியலில் நான் இழந்தது தான் அதிகம்!
அப்படியாகத் தான் பிறகு கல்லூரியில் படிக்கிறேன்! டெல்லியில் போய் சில காலம் ஜே என் யூ வில் படித்தேன். சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனேன்!. வழக்கறிஞர் ஆன பிறகு எனது சீனியர் காந்தி . “என்ன ராதாகிருஷ்ணன்! நானும் காங்கிரஸ்காரன் தான்! இப்படி அரசியலுக்கு என்றே போய்க்கொண்டிருந்தால் தொழிலைக் கவனிக்க வேண்டாமா!?” என்று கேட்பார்! என்றாலும் எனக்கென்று அங்கே வருகிற வழக்குகள் அதிகம்! அதையும் விட்டு விடாமல் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். எல்லாவற்றுக்கு இடையிலும் எனது அரசியல் மும்முரம் குறையவில்லை!.
விளைவாகத் தேர்தல்களில் நின்று நான் தோற்ற பிறகு தான் அந்த வழக்கறிஞர் பதவியையும் கூட ஏனோ விட்டுவிட நேர்ந்தது! ஒருவேளை அந்த வழக்கறிஞர் பதவியில் நான் நீடித்திருந்தால் இந்த அரசியலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அல்லது நான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைத்திருந்தால் எனக்கு ஐநா சபையில் வேலை கிடைத்த போது உடனே போயிருப்பேன். அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் கூட ஆகி இருப்பேன்.
எனக்குக் கலைஞர் தலைமையில் திருமணம் ஆனது! தமிழகம் மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள். அந்த வரிசையை இங்கு சொல்ல நேரமில்லை!முடியாது!. எனது துணைவியார் வந்த பிறகு “நீங்கள் அரசியலிலும் இருக்கிறீர்களே! வழக்கறிஞர் தொழிலையும் எப்படிச் சேர்த்து இரண்டையும் பார்க்க முடியும் “என்று கேட்டதுண்டு. இதே கேள்வியை மூன்றாம் முறையாக எனது தந்தையார் எனது சீனியர் எனது மனைவியும் கேட்டு விட்டார்கள். அவையெல்லாம் நான் சமாளித்துக் கொள்வேன்! எனக்கு இரண்டும் இரு கண்கள்! என்று சொன்னேன்.
. என்னதான் சூழ்நிலை இப்படி இருந்தாலும் நான் தொடர்ந்து தேர்தலில் தோற்றுக் கொண்டே தான் இருந்தேன். அதிகமாக உழைத்தும் அதிகமாகச் செலவுகள் செய்தும் குறைந்த வாக்குகளில் தோற்கும் படிதான் நேர்ந்தது!. அந்த சமயத்தில் தான் நியூயார்க்கில் ஐநா சபையிலும் வேலை கிடைக்கிறது!!. அதற்கும் செல்லாமல் நான் அரசியலில் இருக்கின்றேன் வர இயலாது என்று சொன்னேன்.!
அதற்கடுத்து எனக்கு ஒரு மகனும் பிறக்கின்றான். அந்தச் சின்னஞ்சிறு மகனை அவனுக்கு 4 5 வயதுகள் இருக்கும் போது கூட இந்த அரசியல் சுற்றுப் பயணங்களில் கலந்து கொள்ள வெளியே சென்று விடுவதால் காலத்தில் அவனை வெளியே அழைத்து போய் வேடிக்கை காட்ட கூட என்னால் முடியாமலிருந்தது!
மற்ற பிள்ளைகள் எல்லாம் சனி ஞாயிறு போன்று விடுமுறைகளில் வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது என்னால் அந்தச்சனி ஞாயிறுகளில் கூட என் பையனை வேடிக்கை காட்டவோ கடைவீதிகளுக்கு அழைத்துச் செல்லவோ முடியவில்லை!. அவ்வளவிற்கும் அவன் முரண்டு பிடிக்காமல் சமர்த்தாய் இருந்தது எனக்கு ஒரு கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும்!
என் வீட்டிற்கு அதிகத் தலைவர்கள் வந்து போவார்கள் அவர்கள் வரும்போது பேசுவதை எல்லாம் பார்த்து இருந்து கேட்டு கவனித்து அவனுக்கும் அரசியல் ஆர்வம் வந்தது! எல்லாத் தினசரி நாளிதழையும் வாசித்து அவர் யார் இவர் யார் என்று என்னிடம் கேட்டு முறையாகத் தெரிந்து கொள்வதும் அவனது பழக்கம்! அவனும் கூட தன் சிறுவயரில் “என்னப்பா நீங்கள் அரசியலில் இவ்வளவு தூரம் ஈடுபட்டு ஒரு எம்எல்ஏ எம்பி ஆகக் கூட பதவி பெறாமல் இருக்கிறீர்களே ஏன்?” என்றும் கேட்டே விட்டான்!. இப்படி என்னைச் சார்ந்தவர்கள் என் மீது மதிப்பு கொண்டவர்கள் பலரும் இதே கேள்வியைக் கேட்டதுண்டு.
பதவி அல்ல! பணிகள் தான் முக்கியம்! இதுதான் அரசியல்! அரசியலில் கடமை மற்றும் பற்றற்று மக்கள் பணியில் ஈடுபடுவதோடு தன் நாட்டின் வரலாறு மற்றும் தலைவர்களின் தியாகங்கள் ஒரு தேசத்தின் ஒற்றுமை அந்த மக்களுக்கான எதிர்காலம் போன்றவற்றை சிந்திப்பவர்களுக்கு பதவி பெற்ற பின் துரோகம் தந்திரம் ஊழல் சொத்து சேர்ப்பு வாரிசு அதிகாரம் செய்பவர்களை எல்லாம் விட்டு விலகி நிற்பதுதான் அறம் என்பது தெரிந்தே இருக்கும். மற்றபடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வீரன் எவ்வளவு ரன் எடுக்கிறான் என்கிற முனைப்போடு களத்தில் நிற்பதும் நல்லோர் நினைவில் இடம் பெறுவதும் தான் எனது வாழ்க்கை முறை என்று நான் நம்புகிறேன்.
எத்தனையோ அமைச்சர்கள் இருக்கலாம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் ஒய் எஸ் எஃப் யூசுப் என்பவர் எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராக இருந்தார் நீண்ட நெடு நாட்களாக அரசியலில் ஈடுபட்டு திமுகவிலும் அதிமுகவிலும் மாறி செயல்பட்டவர்.
இன்று வள்ளியூரில் போய் அவரைக் கேட்டால் அவரை யாருக்காவது தெரியுமா? தெரியவில்லையே? யார் வேண்டுமானாலும் அமைச்சர் ஆகலாம்!ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கலாம்!
ஆனால் அவர்களது அதிகாரத்தின் இறுதி நிலையில் அவர்களது செயலாலே விமர்சிக்கப்பட்டு மங்கி விடுகிறார்கள்.
ஆனால் தொடர்ந்து அரசியலில் இருந்து அதை நெறிப்படுத்தியும் மக்களின் முன்பு அவர்களுக்கான நலன்கள் குறித்து பேசியும் செயல்பட்டும் வருகிற எங்களைப் போன்றவர்களைப் பார்த்து “யார் யாரோ தகுதியற்றவர்கள் எல்லாம் வந்து போகிறார்கள்?! அரசியல் சீர்மை வாய்ந்த உங்களுக்கு உரிய பதவிகளும் பொறுப்புகளோ ஏன் இன்னும் வராமல் இருக்கிறது” என்று விமான நிலையங்களிலோ ரயில் நிலையங்களிலோ கேட்கிறார்களே! அதுவே என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தானே! இங்கே #தகுதியேதடை
மந்திரி! எந்திரி!! என்கிற நிலைமை இன்று வந்துவிட்டது.இதோ விஜய் வெற்றி பெற்று இருக்கிறார். சட்டமன்றத்தில் தனது ஆட்சியை அமைக்க முடியாமல் சில நாட்கள் தவித்தார்!
இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறே
நாங்கள் எங்களுக்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம்! ஏதோன்றுக்கும் ஆதங்கப்படுவது!அடிமைச் சேவகம் புரிவது!அங்கே வாசலில் விழுந்து கிடப்பது! என்பதெல்லாம் எங்களுக்கு ஆகாது!
வெற்றி என்றால் திமிர், தோல்வி என்றால வெறுப்பு என்று இல்லாமல் நமது போக்கு, கடமை என கொள்வோம்!
இப்பொழுது தேவை நேர்மையான ஆடுகளம்! மக்களுக்கான ஆடுகளம்!! அதில் ஒரு தெளிவான பாதையைப் போட்டுக் கொண்டு தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் பணி!
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இன்று காலையில் ஒரு காலத்தில் நான் வழக்கறிஞர் ஆனதற்கு பிறகு 20 ஆண்டுகாலம் கழித்துப் பிறகு வழக்கறிஞரான அவர் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்! தொலைபேசியில், “ என்ன சார் இப்படி அரசியல் போகிறதே “என்று கேட்டார்.
நேற்று சனிக்கிழமை அவர் விடுமுறையில் ஓய்வில் இருக்கிறார். அவர் என்னை அழைத்து அக்கறையுடன் இன்றைய அரசியல் நிலைமைகளைக் கேட்கும்போது நான் மேற்கண்ட அனைத்தையும் அவரிடம் பதிவு செய்தேன். “ஐயா!எவ்வளவு முக்கியமானது இந்தப் பதிவு! என்று மனதாரப் பாராட்டி உங்களைப் போன்றோரின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.! ஒரு நாள் இந்தச் சமூகமும் புரிந்து கொள்ளும் என்று சொன்னார்.
அரசியலில் நுழைய வேண்டும்! எப்பாடுபட்டாவது மந்திரியாக வேண்டும்! அதற்கு ஆயிரம் குறுக்கு வழிகளைப் பயில வேண்டும். அதன் மூலம் செல்வம் சேர்க்க வேண்டும்!என்றெல்லாம் வந்து கொண்டு இருப்பவர்களிடையே அப்படிப்பட்ட எந்த ஒரு குணாதிசியமும் இல்லாமல் தானே நாங்களும் அரசியல் பணி செய்து வருகிறோம்.
இதுதான் எந்தவிதமான கறை படியாமலும் 54 வருடங்களாக நான் இயங்கி வரும் அரசியல் தளம். அந்த விதத்தில் இதைச் செய்வதில் ஒரு மன ஆறுதலும் அநீதிக்கு எதிராக எங்கும் எவர் முன்பும் பேச தைரியம் வாய்ப்பதும்
ஆன எனது தொடர் செயல்பாடுகள் மூலம் நான் எப்போதும் போல் திடமாகவே இருக்கிறேன்.
வெற்றியிலிருந்து பலம் கிடைப்பதில்லை..
உங்கள் பணி மற்றும் போராட்டங்களே உங்களுக்கான பலத்தை உருவாக்குகின்றன..
உடலின் துக்கத்தை மட்டுமல்ல மனத்தின் வலியையும் உடல்தான் இங்கே சுமக்கிறது. ஒளிரும் நகரங்களின் முன்னிரவில் ஒரு மீமெய்மை நிலையை உணர்வது போல, உடல்வழியாகவே மீமெய்மைத் தன்மையை அடைகிறார்கள். அங்கே உழைப்பதும், விழித்திருப்பதும், கனவு காண்பதும், காதலிப்பதும், நோய்ப்படுவதும் உடல்தான். நினைவுகளையும் லட்சியங்களையும் சுமப்பது உடல்தான், உடல் தான்.
அந்த வகையில் அரசியலும் என்றால் ஆடுகளம் தான்.! அங்கே அறம் கூற்றம்.
இது ஆதங்கம் அல்ல! இது அரசியல் அவல்!!
Poltics
publiclife
அரசியல்அறம்
ksrpost
கேஎஸ்ஆர்போஸட்
10-5-2026.

