


ஏதோ ஒன்றை
கவிதை போலவே
நிறைய எழுதி விடுகிறேன்
எந்த சூட்சுமமும் தெரியாதவர்கள்
எந்த ரகசியமும் தெரியாதவர்கள்
ஏதோ கொஞ்சம் பேர்
அதை கவிதை போலவே
வாசித்தும் விடுகிறார்கள்
ஒரு பறவையை எழுதுகிறேன்
பறவைகளெனவே
வாசித்து விடுகிறார்கள்
ஒரு பூவை எழுதுகிறேன்
பூக்களெனவே வாசித்து விடுகிறார்கள்
ஆனால்
அந்தப் பறவை பறக்கத் தொடங்கிய
அந்த முதல் நொடியைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்…….
அந்தப்பூ மலரத் தொடங்கிய
அந்த முதல் நொடியைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்……
நான் தேடி முடிப்பதற்குள்
அவர்கள் கவிதையென வாசித்து
முடித்து விடுகிறார்கள்
இப்படித்தான்
நானும் அவர்களும் இந்த கவிதையும்
இந்த பிரபஞ்சத்தில்
தினம் தினம் ஏதோ ஒன்றை
பிரசவித்துக் கொண்டேயிருக்கிறோம்….
- கவிஞர்
- பொள்ளாச்சி முருகானந்தம்

