தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதவி குறித்து முன்னாள் துணை வேந்தர் முனைவர் பாலகுருசாமி அவசர கோரிக்கை…!!
அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் E.பாலகுருசாமி தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சமீப நாட்களில் முன்னெப்போதும் இல்லாத நிர்வாக மற்றும் கல்வி சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமைக்கு தற்போதைய பதிவாளரின் செயல் மற்றும் செயலிழப்புகளே காரணமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.
தற்போதைய பதிவாளருக்கு தேவையான நிர்வாக அனுபவம், தொலைநோக்கு பார்வை மற்றும் பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் வழக்கமாக பதிவாளர் பதவி நான்கு தொகுதி கல்லூரிகளின் டீன்களில் ஒருவரிடமோ அல்லது மூத்த ஐந்து பேராசிரியர்களில் ஒருவரிடமோ வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய பதிவாளர் இந்த நடைமுறைகளில் எதையும் பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.
மேலும், அவர் துறைத் தலைவர் பதவியில்கூட பணியாற்றாதவர் என்பதால் நிர்வாகத் திறன் மற்றும் அனுபவம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியல் தொடர்புகள் காரணமாகவே இந்த நியமனம் நடைபெற்றதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் சுயாட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
உலகளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்புகளில் உயர்ந்த திறன், நேர்மை மற்றும் அனுபவம் கொண்டவர்கள் அமர வேண்டியது அவசியம். தற்போதைய நிலை தொடர்ந்தால் நீண்டகால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் உடனடி தலையீடு செய்து தகுதியான, மூத்த மற்றும் திறமையான பேராசிரியரை பதிவாளராக நியமித்து பல்கலைக்கழகத்தின் மரியாதையையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் E.பாலகுருசாமி தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
