
தூத்துக்குடி அஜிதா…!! தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், கோட்டை என கருதப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு முக்கிய அரசியல் மாற்றம், அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவின் ஆரம்பகால தூணாகக் கருதப்பட்ட அஜிதா அக்னல், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது, அனல் பறக்கும் தூத்துக்குடி அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரை கட்சியில் இணைக்க திமுக ஏன் ஆர்வம் காட்டியது? மற்ற கட்சிகளை விட்டுவிட்டு திமுகவில் அஜிதா ஏன் இணைந்தார்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சரிசமமாக வாழும் தூத்துக்குடி மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் கடந்த சில மாதங்களாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.
தூத்துக்குடி தவெக – பணிகள்
ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி என அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கோட்டைகளைத் தகர்க்கும் வியூகங்களை அக்கட்சி முன்னெடுத்தது. குறிப்பாக, கடலோர கிராமங்களில் மீனவர் ஆதரவையும், நகர்ப்புறங்களில் இளைஞர் சக்தியையும் திரட்டுவதோடு, ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற உள்ளூர் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி தவெக தனது பிரச்சாரத்தை வடிவமைத்தது.
இருந்தாலும் கட்சியின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது உட்கட்சி பூசல். ஆரம்ப காலத்திலிருந்தே விஜய்யின் மக்கள் இயக்கத்திலும், பிறகு தவெகவிலும் தீவிரமாகப் பணியாற்றி வந்த அஜிதா அக்னலுக்கு, அவர் எதிர்பார்த்த மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தியது மற்றும் தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அஜிதாவின் வெளியேற்றம்
நிதி வசூல் புகார்கள் மற்றும் ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகளே அவருக்கு பதவி மறுக்கப்பட்டதற்கான காரணம் எனக் கூறப்பட்டாலும், தூய்மையான அரசியல் பிம்பத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் விஜய், சர்ச்சைக்குரிய நபர்களைத் தவிர்க்க நினைத்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
உடல்நலம் தேறி மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட்ட அஜிதா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக, சசிகலா அணி மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை முயற்சி செய்தன. ஆனால், தூத்துக்குடியின் உள்ளூர் அரசியலைக் கணக்கில் கொண்டு, அஜிதா திமுகவை நோக்கித் தனது பார்வையை திருப்பினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தந்த நிலையில், அஜிதாவை திமுகவில் இணைக்க ஒரு குழு தீவிரமாகப் பணியாற்றியது. திமுகவின் ஒரு தரப்பினர் இதற்கு தயக்கம் காட்டினாலும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்த அஜிதா, தன்னை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டார்.
பின்னணியில் அரசியல் வியூகங்கள்
அஜிதாவின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு பின்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ராஜதந்திர வியூகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரக் கடலோரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க அஜிதாவைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், மீனவ சமூக மக்களின் வாக்குகளைக் கணிசமாக அறுவடை செய்ய முடியும் என திமுக கணக்குப் போடுகிறது.
மறுபுறம், அஜிதாவின் குடும்பத்தினர் ஏற்கனவே திமுகவில் இருந்ததால் தான் அவருக்கு தவெக தலைமை உரிய அங்கீகாரம் வழங்கத் தயங்கியது என்ற செய்தியும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கனிமொழி கருணாநிதியே மீண்டும் வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அஜிதாவின் வரவு திமுகவின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது. தவெகவின் உட்கட்சிப் பூசல், இறுதியில் திமுகவிற்கு ஒரு சாதகமான அரசியல் களத்தை தூத்துக்குடியில் அமைத்துக் கொடுத்துள்ளது.
தூத்துக்குடி பிளஸ், மைனஸ்
அஜிதா அக்னலின் வருகை தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடலோரப் பகுதிகளில் திமுகவின் மீனவ சமூக வாக்கு வங்கியை மேலும் உறுதிப்படுத்துவதோடு, தவெக-வின் அடிமட்டக் கட்டமைப்பைச் சிதைத்து அக்கட்சியின் களப்பணிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக, தவெக-வின் ஆரம்பகால உழைப்பாளர்களுக்கே அங்கு அங்கீகாரம் இல்லை என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதன் மூலம், 2026 தேர்தலில் தனக்கு எதிராக எழக்கூடிய புதிய அரசியல் சவாலைத் தொடக்கத்திலேயே முறியடித்து, கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அரசியல் பிடியை இம்மாவட்டத்தில் திமுக மேலும் வலுப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்…!!!