பஞ்சகவ்யா – மீன் அமிலம் தயாரிப்பு குறித்து வேளாண் மாணவிகள் செயல்முறை பயிற்சி…!!
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுக்கா, குருக்கத்தி ஊராட்சியில் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்றுவரும் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தினை (RAWE) வேதாரண்யம் ஒன்றியத்தில் மேற்கொன்டுள்ளனர்.இதில் பங்காருலெட்சுமி, ஃபாய்ஜா பர்வின், ரியாஸ்ரீ, யோக ஸ்ரீ, பூங்குழலி, மோனிஷா,வஜிகா பானு, பிரீத்தி, ஃபெலின் ஜோசி உள்ளிட்ட 9 மாணவிகள், தேத்தக்குடி கிராமத்தில் பஞ்சகவ்யா மற்றும் மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுக்கு உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைக் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பஞ்சகவ்யா மற்றும் மீன் அமிலம் தயாரிக்கும் முறை, தேவையான பொருட்கள், சரியான அளவீடுகள், எந்த பயிர்களுக்கு எந்த வளர்ச்சி நிலையில்ப் பயன்படுத்த வேண்டும் என்பன குறித்து மாணவர்கள் விரிவாக விளக்கினர். மேலும், இவ்வகை இயற்கை ஊட்டச்சத்துக்கள் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பில் ஏற்படுத்தும் நன்மைகள் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது.
இந்த செயல்முறை விளக்கத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை விவசாய முறைகள் குறித்து பயனுள்ள அறிவைப் பெற்றதுடன், தங்களின் பயிர்களில் இம்முறைகளை நடைமுறைப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.
