பட்டியல் சமூகம் டிஐஜி விஜயலட்சுமி மீது திட்டமிட்டு அவதூறு..! முதல்வர் விஜய்க்கு ஜான் பாண்டியன் வேண்டுகோள்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான கவனத்திற்கு!

சென்னை தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை தலைமையகத்தில் டிஐஜியாக பணியாற்றி வரும் திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு, ரயில்வே, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி, தனது நேர்மை மற்றும் திறமையின் மூலம் காவல்துறையில் தனித்த முத்திரை பதித்துள்ளார்.

தாம் பணியாற்றிய அனைத்து இடங்களிலும், உடன் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அலுவலர்களை மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் அணுகுபவர் என்ற நல்ல பெயரை பெற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சிறப்பான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், அவருடன் பணியாற்றி வரும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு பெண் உயர் அதிகாரியின் மரியாதையையும் கண்ணியத்தையும் பொருட்படுத்தாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனவே, டிஐஜி திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்களை குறித்து அவதூறு பரப்பி வரும் அலுவலர்கள் மீது உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான மற்றும் திறமையான உயர் அதிகாரிகள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் பணியாற்றும் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆயுதப்படையில் உயர்பதவியில் சிறப்பாக பணியாற்றி வரும் இந்த பெண் அதிகாரியின் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உடனடி மற்றும் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.

todaynews #TamilNews #பகிர்வு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top