விஜய்யின் கேரக்டர் சற்று வித்தியாசமானது தான் போலும்…!! எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news

விஜய்யின் கேரக்டர் சற்று வித்தியாசமானது தான் போலும்…!! எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news

’’பொதுவாக விஜய் தனக்கு எவ்வளவு பிரச்சினைகள், அவமானங்கள் நேர்ந்தாலும் அதை பெரிதுபடுத்தி சொல்வதோ, பேசுவதோ கிடையாது. எல்லாவற்றுக்கும் அமைதியே பதிலாக்கி தன் செயலில் குறியாக இருப்பார்’’ என அவருடன் பழகிய திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள் கூறினார்கள்!

1992-ல் அவர் திரைத்துறைக்கு வந்தார். முதல் ஐந்தாறு ஆண்டுகள் மிகவும் கஷ்டங்கள், அவமானங்களை சந்தித்தார். 1996-ல் கோயம்பத்தூர் மாப்பிள்ளை படத்தில் அவர் நடிக்கையில் கதா நாயகியான சங்கவிக்கும், கவுண்டமணிக்கும் இவரை காட்டிலும் மிக அதிக சம்பளம் தரப்பட்டது.

அந்த திரைப்படத்தில் விஜய்யும்,கவுண்டமணியும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் விஜய் நடிப்பு, வசன உச்சரிப்பு ஆகியவற்றை சரியாக வெளிப்படுத்த முடியாமல் பல டேக்குகள் வாங்கினார்.

அப்போது கவுண்டமணி அவர்கள் ரொம்பவும் பிசியானவர். ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார். விஜய்யின் ’பெர்பாமன்ஸ்’ காரணமாக படப்பிடிப்பு நேரம் அதிகரிக்கவும் அவர் மிகவும் கோபப்பட்டு விஜய்யை தாறுமாறாக திட்டுவார்.

’’டேய், நீயெல்லாம் எதுக்குடா நடிக்க வந்து என் உயிரை எடுக்குற. உனக்கு நடிப்பு ஒரு எழுவும் வர மாட்டேங்குது..’’

’’இந்தச் சனியனையெல்லாம் ஹீரோவாக போட்டு என் நேரத்தை விரயமாக்குறிங்க’’ என இயக்குனரையும் திட்டுவாராம்.

இப்படி பலவாறாக கவுண்டமணி திட்டுவார். கவுண்டமணியின் திட்டு தினசரி தொடர்ந்தது. விஜய் அது குறித்து யாரிடமும் புகார் கூறவில்லை. அவரை எதிர்த்து பேசவும் இல்லை. அமைதியாக தாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார்.

தான் மிகவும் புகழ்பெற்று வளர்ந்த நிலையிலும் கூட கவுண்டமணியைக் குறித்து எந்த இடத்திலும் விஜய் தவறாக பேசியதில்லை. ஆனால், அவரிடம் இருந்து வெகுவாக விலகி சென்று தன் கேரியரை மட்டும் கவனித்துக் கொண்டார்.

பாஜகவை ஏன் தாக்கவில்லை.? மோடியை ஏன் கடுமையாக விமர்சிக்கவில்லை..? ஆளுநர் குறித்து ஏன் காட்டமாக அறிக்கை தரவில்லை என பலர் கேட்கிறார்கள். இதைக் கேட்கும் போது விஜய் குறித்த இந்த சம்பவமே எனக்கு நினைவில் வந்தது. ஒருவரை பேசுவதைக் கொண்டல்ல, அவரது செயல்பாடுகள் வழியே நாம் மதிப்பிட வேண்டும்…என்று தோன்றுகிறது.

சரி, காங்கிரஸ் – தவெக உறவு தொடர்பான விவகாரத்திற்கு வருவோம்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழகத்தின் பெருவாரியான மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர்.

அதே சமயம் தவெகவால் தான் தற்போது பாஜகவின் வெற்றி தடுத்து நிறுத்தப்பட்டு ஒரே தொகுதியாக சுருங்கியுள்ளது. பாஜக எதிர்ப்பு என்பது தமிழகத்தில் திமுகவிற்கு மட்டும் பட்டா போட்டுக் கொடுத்துள்ள உரிமையல்ல. அந்த உரிமை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் யாருக்குமானது.

பாஜக என்ற பாசிச சக்தியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள், கட்டுக்கடங்கா ஊழல்கள் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன.

ஆனால், ஊழல் திமுகவால் ஒரு போதும் பாஜகவை தடுக்க முடியாது என்பதும், தன் ஊழலை மறைக்க அது மறைமுகமாக பாஜகவின் சட்டதிட்டங்களை மாற்றுப் பெயரில் அரங்கேற்றி வந்தது என்பதையும் மக்கள் நன்கு புரிந்து கொண்டு தான் திமுகவை நிராகரித்துள்ளனர்.

ஆக, அந்த மக்கள் தீர்ப்பை மதித்து, திமுகவுடன் உள்ள உறவை விடுவித்துக் கொண்டு காங்கிரஸ் தவெகவுடன் கை குலுக்கியுள்ளது. ’பாஜகவை எதிர்க்கும் ஆற்றல் இனி திமுகவிற்கு கிடையாது. அது தவெகவிற்கே உண்டு’ என்று மக்கள் தீர்ப்பளித்துவிட்ட பிறகு, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் இன்னும் இருப்பது மக்கள் தீர்ப்பை மதிக்காமல் போவதாகும்.

தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் சேரும் முடிவை ராகுல் காந்தி விரும்பியும் ஸ்டாலின் இங்குள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை வளைத்துப் போட்டுக் கொண்டு தவெக பக்கம் செல்ல முடியாமல் தடுத்து விட்டார். இதனால் தமிழக காங்கிரசுக்கு இமாலய இழப்பு தான். 1967 க்கு பிறகு தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களை பெற்று ஆட்சி அதிகாரத்தில் தவெகவுடன் அமரும் வாய்ப்பை பறிகொடுத்த காங்கிரஸ், இப்போது சுதாரித்துக் கொண்டு தவெகவுடன் சேர்ந்துள்ளது.

இதை துரோகம் எனத் தூற்றுவது அரசியல் நாகரீகமன்று. சேர்ந்து நட்போடு பயணித்த அரசியல் கட்சிகள் பிரியும் போது, ஒருவரை ஒருவர் தூற்றக் கூடாது. காங்கிரஸ் திமுகவிற்கு எதிராக எதையும் பேசவில்லை, காயப்படுத்தவில்லை. கண்ணியமாகத் தான் விலகி உள்ளது.

திமுகவிற்காக மற்ற கட்சிகள் தங்கள் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் இழக்க முடியாது. தியாகம் செய்ய முடியாது. மக்களின் விருப்பம், இளைய தலைமுறையின் எழுச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாறிய சூழலை உள்வாங்கி முடிவெடுக்கும் ஜனநாயகக் கடமை கம்யூனிஸ்ட்கள், விசிகவிற்கும் உள்ளது.

உடனடியாக தேர்தல் வருவதோ கவர்னர் ஆட்சி மூலமாக இங்கு பாஜக மறைமுகமாக ஆட்சி செய்ய உதவுவதோ நல்லதில்லை.

போட்டோ ; இந்து தமிழ் திசை

(இந்தப் பதிவில் உடன்பாடு இல்லாதவர்கள் கடந்து செல்லுங்கள். கண்ணியக் குறைவாக பின்னூட்டம் செய்தால் பிளாக் செய்யப்படுவீர்கள்)

சாவித்திரி கண்ணன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top