தோழர் நல்லகண்ணு
மறைந்து விட்டார்…!!
சிவப்புக் கட்சியின்
கறுப்பு காந்தி இறந்துவிட்டார்…!!
கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் கவிதை…!!

எழுந்தாலும் விழுந்தாலும்
கடலின் புகழ்பாடும் அலைபோல,
கம்யூனிஸ்ட் கட்சியின்
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
செங்கொடி சுமந்த
சிங்கம் அவர்

கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும்
கம்யூனிஸ்ட் கட்சியின்மீது
கொண்டிருக்கும் மதிப்புக்கு
நல்லகண்ணுவின்
வாழ்க்கைமுறை ஒரு காரணம்

சுதந்திர இந்தியாவில்
தடைசெய்யப்பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி
இன்றுவரை
உயிர்ப்போடு இருப்பதற்கு
நல்லகண்ணு போன்றோரின்
தியாகமே காரணம்

செயற்கை நுண்ணறிவு
எதிர்காலத்தில்
இறந்தவர்களை மீட்டுருவாக்கும்
தொழில்நுட்பம் கண்டறிந்தால்
நல்லகண்ணுவின் மீட்பையே
நாடு கேட்கும்

அவர் வாழ்ந்தது
ஒரு நூறாண்டு;
அவரை மறக்காது
இந்த நூற்றாண்டு

அவருக்கு
என் செவ்வணக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து

யார் இந்த ஆர்.நல்லகண்ணு..

  • ஆர்.நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் டிசம்பர் 16, 1925 அன்று ராமசாமி – கருப்பாயி இணையருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள்.
    நல்லகண்ணுவின் குடும்பம் வேளாண் தொழிலைப் பாரம்பரியமாக கொண்ட வைணவக் குடும்பம்.
  • நல்லகண்ணு ஶ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்..எல்.சி வரை படித்தார். மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். பின்னர், தமிழில் பி.எல்.ஓ படிப்பை இரண்டாண்டுகள் படித்த நிலையில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டதால் பட்டப் படிப்பு தடைப்பட்டது.

ஆர்.நல்லகண்ணு தனது 12-ஆவது வயதில் 1937-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் சிறுவர்களுடன் இணைந்து செயல்பட தொடங்கினார்.
மாணவப் பருவத்தில் அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்ட நல்லகண்ணு 1943-1944 காலகட்டத்தில் ‘கலைத் தொண்டர் கழகம்’ என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக செயல்பட்டார்.

  • எட்டையபுரத்தில் பாரதி நினைவு மண்டபம் கட்ட இவ்வமைப்பின் சார்பில் ரூ.400 நிதி திரட்டி கொடுத்தார்.

கம்யூனிஸ்ட்டு கட்சி வழி போராட்டங்கள்
ஆர்.நல்லகண்ணு 1944-ம் ஆண்டு கம்யூனிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.

  • அதனை தொடர்ந்து சென்னையில் கம்யூனிஸ்ட்டு கட்சி இதழான ஜனசக்தியில் பணியாற்றியபோது ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஜனசக்தியில் அம்மோசடியை குறித்து எழுதினார். மாவட்ட ஆட்சி தலைவர் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார்.

ஆர்.நல்லகண்ணு 1948-ல் கம்யூனிஸ்ட்டு கட்சி தடைசெய்யப்பட்ட பின் தலைமறைவாக வாழ தொடங்கினார். டிசம்பர் 1949-ல் கைது செய்யப்பட்டு நெல்லை சதி வழக்கில் இணைக்கப்பட்டார். நாங்குனேரி சிறையில் ஓராண்டு இருந்த பின் 1950-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே ஏழாண்டு கால சிறை வாசத்திற்குப் பின் 1956-ல் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

  • சிறை காலத்தில் அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறையை ஒதுக்க வேண்டும் என 12 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதலையானவுடன் அன்றைய தமிழக முதல்வர் காமராஜரை சந்தித்து பிற கட்சி தோழர்களையும் விடுதலை செய்ய கேட்டு கொண்டார். அது சட்ட விதிகளுக்கு முரணானது என மறுக்கப்பட்டது. நல்லகண்ணுவின் முயற்சியின் காரணமாக அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறை கிடைத்தது.

ஆர்.நல்லகண்ணு ஜூன் 5, 1958 அன்று சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னசாமியின் மகள் ரஞ்சிதத்தை நெல்லையில் திருமணம் செய்து கொண்டார். காசி பாரதி, ஆண்டாள் என்று இரு மகள்கள். ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் 2016-ம் ஆண்டு மறைந்தார்.

  • 1967-ம் ஆண்டு நொச்சிகுளத்தில் விவசாயிகள் அவர்கள் பயிரிட்டு வந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து ஆர்.நல்லகண்ணுவின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
  • இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல் துறை துப்பாக்கி சூட்டினை நடத்தியது. அதனை கண்டித்து பன்னிரெண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இறுதியில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

ஆர்.நல்லகண்ணு 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

  • 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளராகப் பணியாற்றினார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் தேசிய கட்டுப்பாட்டு குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

1969-ல் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் விவசாயிகள் பிரதிநிதியாக கிழக்கு ஜெர்மனிக்கு சென்றார். இருபது நாட்கள் சுற்று பயணத்திற்கு பின்னர் மாஸ்கோ, லெனின்கிராடில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து நாடு திரும்பினார்.

  • 1973-ல் சோவியத் யூனியன் மூன்று மாத கால மார்க்சிய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்.

1990களின் நடுவில் சாதிக் கலவரம் தென் மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியது. நல்லகண்ணு வின் மாமனார் தோழர் அன்னசாமித் தேவர் மருதன் வாழ்வு கிராமத்தில் படுகொலை செய்யப்படுகிறார். இடியென விழுந்த செய்தியை கேள்விப்பட்டு இறுதி நிகழ்வுகளை கண்ணீரோடு மற்றவர்களை நடத்தச் சொல்லிவிட்டு நெல்லை நகருக்கு சாதி மோதல் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்க தோழர் நல்லகண்ணு வந்தார்.

  • தன் சொந்த நலன்களை விட பொதுநலன் முக்கியம் என்பதை நிரூபித்த தருணமது.மாமனார் கொல்லப்பட்ட போது வெளிப்படுத்தப்படாத துக்கம் சாதிக் கலவரத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பார்த்த பொழுது பொங்கிய கண்ணீரைக் கண்டதை நம்மால் இன்றும் மறக்க இயலாது.

அன்றைய முதலமைச்சர் கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பெயர்களை எடுத்து விடுங்கள் என்ற கருத்தைச் சொன்னார். அரசும் ஏற்றுக் கொண்டது. பெயர்கள் நீக்கப்பட்டன. அமைதி திரும்பியது.

  • இலக்கிய ஆளுமைகள் நா.வா., தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி உட்பட பலருடன் நெருங்கிய நட்பைப் பேணி இருந்தார். இவர்கள் நடத்துகின்ற இலக்கிய விவாதங்களைக் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் எட்டயபுரத்தில் நடத்துகின்ற பாரதி விழாவில் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் இரண்டு நாட்களும் முழுமையாக இருந்து விழாவைக் கண்டு ரசிக்கின்ற பண்புடையவர்.
  • தமிழக அரசின் அம்பேத்கர் விருது(2007)
  • தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது(2022)
  • மத்திய அரசு இவருக்கு ‘பத்ம பூஷன்’ விருதை வழங்கி கௌரவித்தது (2009-ல் அறிவிக்கப்பட்டது, பின்னர் அவர் விருதை மறுத்து, இன்னும் பலருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்).

தோழர் நல்லகண்ணு பொது வாழ்வு எப்படிப்பட்ட தகுதியான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு.
நூறாண்டு கடந்து நம்மோடு வாழ்கின்ற மகத்தான தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)