நூலக ஆணைக் குழு தலைவராக பொறுப்பு வகித்த 3 ஆண்டுகள் – கடந்து வந்த முjட்பாதை..!! கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘மனம் விட்டு’ பேசுகிறார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நூலக ஆணைக் குழு தலைவராக பொறுப்பு வகித்த 3 ஆண்டுகள் – கடந்து வந்த முட்பாதையும் மலர் பாதையும்….!! கவிஞர் மனுஷ்ய புத்திரன் மனம் விட்டு பேசுகிறார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நான் என் நூலக ஆணைக்குழு பணி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் சில கேள்விகளுக்கு பதில் தரவேண்டியிருக்கிறது.

அ.ராமசாமி நான் ராஜினாமா செய்திருக்க வேண்டியதில்லை என்று எழுதியிருந்தார். அந்த பதிவிற்கு வந்த எனக்கு எதிரான கேவலமான தாக்குதல்களைப் பற்றி வருந்தியும் எழுதியிருந்தார். 2014ல் நான் திமுகவில் இணைந்ததிலிருந்து இந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் இருதய அறுவை சிகிட்சைக்குஅனுமதிக்கப்பட்டிருந்தபோதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டபோதும் நான் சாகவேண்டும் என்று எழுதினார்கள். ஆனால் நான் சாகவில்லை.

ஆட்சி மாறும்போது நிர்வாகத்தின் முகம் எவ்வாறு மாறும் என்பது வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது. நான் இந்த பொறுப்பிற்கு வந்ததிலிருந்து அரசு அதிகார மையத்திலிருந்த சிலருக்கு மிகவும்உறுத்தலாக இருந்தேன். அமைச்சரின் அன்பு என்மேல் இருந்ததால் அதிகம் தொந்தரவு செய்ய முடியவில்லை.

ஆனால் நூலக ஆணைக்குழு தலைவர் பொறுப்பிற்கு கடந்த காலங்களில் இருந்த அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டன. நான் மிக மிகச் சிறிய ஒரு ஊதியத்தை பெற்றுக் கொண்டே அப்பணியைச் செய்தேன்.

இந்தப் பதவியை ஒரு மதிப்பு வாய்ந்த பொறுப்பாக மாற்றினேன். எனக்கு நானே வரித்துக்கொண்ட கடமைகளின் வழியே தனித்தடங்களை உருவாக்கிக்கொண்டேன். ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குறைகாண விரும்பவில்லை.
நெருக்கடிகளுக்கு நடுவே என்மேல் மதிப்புக்கொண்ட சில அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கினார்கள். மற்றபடி பலவற்றை பொது வெளியில் எழுதமுடியாது.

இதை பணியில் முக்கியத்துவம் அறிந்து முதல்வரால் எனக்கு மேலும் மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு தான் வழங்கப்பட்டது. ஒரே மாதத்தில் பணியை கைவிட நேர்ந்தது. இந்த வலியிலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் வெளிவருவது மிகவும் கடினமாக இருக்கிறது.

நான் என்னவெல்லாம் செய்தேன் என்பதை இரண்டு புத்தகங்களாக அச்சிட்டு அரசிடம் வழங்கியிருக்கிறேன். எந்த அரசியல் சார்பு நிலையும் அற்று வாசகர்களிடம் வாசிப்பு பழக்கத்தை பரவலாக்குவதற்கான முயற்சிகளை ஒரு பொது நிலையில் நின்று செய்தேன். இதை உடனிருந்து பார்த்தவர்களும் பயன் பெற்றவர்கள் நன்கு அறிவார்கள்.

அபிலாஷ் கூட எழுதி இருந்தார், நான் இப்பொறுப்பிலிருந்து இன்னும்கூட என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று. எனது 35 ஆண்டுகால எழுத்து அனுபவம், பதிப்பு அனுபவம், பத்திரிக்கை அனுபவம் சார்ந்து செய்வதற்கு எவ்வளவோ இருந்தன
எத்தனையோ பரிந்துரைகளை கொடுத்திருக்கிறேன். மாவட்டப் புத்தக கண்காட்சிகள் , பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகள் தொடர்பாக கூட பலவற்றை மாற்ற விரும்பினேன். ஆனால் எல்லா இடத்திலும் நான் நுழைவாயிலேயே நின்றிருந்தேன்.

முடிவுகளை யார் யாரோ எடுத்தார்கள். இந்தத் திட்டங்களை மிக உயர்ந்த நோக்கத்துடன் அரசு கொண்டு வந்தது. ஆனால் அரசு எந்திரத்திலிருந்த எவர் எவரோ செய்த பிழைகளின் பழி அநியாயமாக அரசின் மேல் விழுந்தது. இப்போது இதைப் பேசுவதில் பொருள் இல்லை.

எனக்கிருந்த மிக மிகக் குறைந்த அதிகாரத்தில் சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்தேன். நான் வாழ்வில் எந்த இடத்திலும் சலுகையாகவோ உரிமையாகவோ எதையும் பெற்றதில்லை. எனக்குத் தரப்பட்ட எந்தப் பொறுப்பிற்கும் நான் நியாயம் செய்திருக்கிறேன்.

நான் நூலக ஆணைக்குழு வழியே மேற்கொண்டிருந்தது ஒரு கல்விப்பணி. அரசியல் காழ்ப்புணர்வினால் என்னை அவமானப்படுத்த விரும்புகிறவர்கள் அப்பணிகளையே அவமதிக்கிறார்கள்.

ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பவரால் பெரிதாக எதையும் செய்ய முடியாது என்பது ஒரு பொது உளவியல். ஆனால் அவர்களில் யாராவது சிறப்பாகச் செயல்படும்போது நார்மலாக இருப்பவர்களின் ஈகோ கடுமையாக துன்புறுகிறது.

என்னிடம் பணம் இருந்தால் இப்பணிகளுக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவியிருப்பேன். ஆனால் என் வாழ்வில் ஒரு முறைகூட பணம் இருக்கும் இடத்தில் நான் இருந்ததே இல்லை.

நான் நூலக ஆணைக் குழு தலைவராக பொறுப்பு வகித்த இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் நிறைய கல்லூரி மாணவர்கள் இன்டன்ஷிப்பிற்கு வருவார்கள். அது அவர்கள் ஆளுமை பண்பினை செதுக்கும் ஒரு காலமாக இருந்தது என்பதை பின்னர் பலரும் என்னிடம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஒரு குழு மாணவ மாணவிகள் இன்டர்ன்ஷிப்பிற்காக வந்த ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வந்தன. நான் என் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது. அந்த மாணவர்களை நான் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. உயிர்மையிலும், இட நெருக்கடியால் சில சமயம் பூங்காகளிலும் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். எனக்கு ஒரு space இல்லை என்பதை அதிர்ச்சியுடன் உணர்கிறேன்.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top