புரட்சித் தலைவர்’ மட்டும்… ஜெயலலிதா பெயரை தவிர்த்த சசிகலா…!! மதுரை சக்கரவர்த்தி பதிவு செய்த பழைய கட்சியை வாங்கினாரா? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

‘புரட்சித் தலைவர்’ மட்டும்… ஜெயலலிதா பெயரை தவிர்த்த சசிகலா!

மதுரை சக்கரவர்த்தி பதிவு செய்த பழைய கட்சியை வாங்கினாரா? சசிகலாவுக்கே வெளிச்சம்

சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என வைத்துள்ளார். தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகலா புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அந்த பெயரில் ஜெயலலிதாவை தவிர்த்தது ஏனோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவை கைப்பற்றி, கட்டி காப்பார் என பல்வேறு தகவல்கள் உலா வந்தன. ஆனால் தொடர்ந்து மீடியாக்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும் எடப்பாடி மீதான விமர்சனத்தையுமே பேசி வந்தாரே தவிர அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த முயற்சியையும் வெளிப்படையாக எடுத்ததாக தெரியவில்லை.

இதனால் பொறுத்து பொறுத்து இனியும் தாமதம் கூடாது என ஒரு கட்சியை சசிகலா ஆரம்பித்துள்ளார். அந்த கட்சியின் பெயர் “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” ஆகும்.

கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய போது அந்த கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களை பொரித்திருந்தார். இந்த நிலையில் இன்று கட்சியின் பெயரில் ஜெயலலிதா அல்லது புரட்சித் தலைவி என்ற பெயரே இல்லை. வெறும் புரட்சித் தலைவரின் பட்டப் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட சசிகலா, அவரது பெயரை தவிர்த்துவிட்டதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுடனான நட்பு ஏற்பட்டதன் பிறகுதான் சசிகலா இன்று போயஸ் கார்டனில் அவரது வீட்டுக்கு அருகே ஒரு புதிய வீட்டை கட்டும் அளவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது. அப்படியிருக்கும் போது ஜெயலலிதாவின் பெயரை தவிர்த்தது ஏன் என்பதற்கு 5 காரணங்கள் உள்ளன.

ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்துவதில் ஏற்படக் கூடிய சட்ட ரீதியான நெருக்கடிகளைத் தவிர்க்க அவரது பெயரை தவிர்த்திருக்கலாம். நேரடியாக அவரது பெயரை போட்டால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் ஆட்சபனை தெரிவித்து கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பிருப்பதால் அவர் தவிர்த்திருக்கலாம்.

அதிமுகவின் நாடித்துடிப்பான எம்ஜிஆர் விசுவாசிகளை நேரடியாக சென்றடைய புரட்சித் தலைவரின் பெயர் ஒன்றே போதுமானது என சசிகலா கருதியிருக்கலாம்.

அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளுமே ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி வரும் நிலையில் அதிலிருந்து மாறுபட்டு தெரிய இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்.

மேலும் இந்த கட்சியை வேறு ஒரு தொண்டர் பதிவு செய்து வைத்திருந்த நிலையில் அந்த கட்சியில் தான் இணைந்துவிட்டதாக சசிகலா கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் பெயரை சேர்க்க வேண்டும் என சென்றால் வரும் தேர்தலுக்குள் அந்த செயல்பாடுகள் (process) முடியாது, பிறகு திமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் எதிர்கொள்ள அடுத்த 5 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படும். அதற்குள் தம்முடன் இருக்கும் கொண்ட நஞ்ச தொண்டர்களும் சோர்ந்துவிடுவார்கள் என கருதியிருக்கலாம்.

தற்போதே கட்சியின் பெயர் பெரிய அளவில் இருக்கிறது. சொல்லி முடிப்பதற்குள் விடிந்து விடும் அளவிற்கு உள்ளது. அதில் புரட்சி தலைவி என பெயர் சேர்ந்திருந்தால் அனைத்திந்திய புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி மக்கள் முன்னேற்ற கழகம் அல்லது அஇபுதபுதமமுக என அழைக்க வேண்டியிருக்கும். ஒரு வேளை அனைத்திந்திய புரட்சித் தலைவர் ஜெயலலிதா மக்கள் முன்னேற்றக் கழகம் என வைத்திருந்தாலும் அஇபுதஜெமமுக என படிப்பதற்கே கடினமாக இருந்திருக்கும். இந்த காரணங்களால் அவர் தனது கட்சியின் பெயரில் ஜெயலலிதாவின் பெயரை சேர்க்காமல் இருந்திருக்கலாம்.

யார் இந்த சசிகலா
சென்னை போயஸ் கார்டனுக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் வீடியோ கேசட் கடை நடத்தி வந்தார். அதில் சினிமா பட கேசட்களை வாடகைக்கு விட்டு வந்தார். அப்போது ஜெயலலிதா, அந்த கடைகளுக்கு சென்று வந்ததால் அவருடன் சசிகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை வீடியோ எடுக்கும் பொறுப்பை சசிகலா- நடராஜன் தம்பதியிடம் வழங்கினார். அது முதல் சசிகலா மெல்ல போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்குள் நுழைந்தார்.

அதன் பிறகு அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கு உயர்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. ஜெயலலிதாவிடம் ஏதாவது கோரிக்கை என்றால், கட்சியினர் நேராக சசிகலாவை பார்த்து தங்கள் கோரிக்கையை சொல்லிவிட்டால் போதும். அது பாட்டுக்கு நடந்துவிடும்.

அந்தளவுக்கு செல்வாக்கு படைத்தவராக இருந்தார். ஜெயலலிதாவை அம்மா என அழைத்தது போல் சசிகலாவை சின்னம்மா என்றே அதிமுகவினர் அழைத்து வந்தனர். போயஸ் தோட்டத்தில் மன்னார்குடி குடும்பத்தினரின் (சசிகலா பூர்வீகம்) ஆதிக்கம் இருந்து வந்தது.

இப்படி வீடியோ கேசட் நடத்தி வந்த சசிகலா, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, பிறகு, அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அது முதல் ஜெயலலிதா போல் நெற்றியில் திலகமிட்டு வலம் வந்த அவர் முதல்வராகவும் பதவியேற்க இருந்த நிலையில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top