வழக்கறிஞர் மு.ஆனந்தன் – காடு கடல் இனி நமக்கில்லை…!! ஓவியர்/எழுத்தாளர் தூரிகை சின்னராஜ் அடர்த்தியான மதிப்புரை…!! நூலினைப் பெற….94430 49987 அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வெளியிட்ட அன்றே சுடச்சுட கிடைத்த மதிப்புரை..

கோவை வழக்கறிஞர் மு.ஆனந்தன் – காடு கடல் இனி நமக்கில்லை…!! ஓவியர்/எழுத்தாளர் தூரிகை சின்னராஜ் அவர்களின் அடர்த்தியான மதிப்புரை…!! நூலினைப் பெற…. 94430 49987 – அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வெளியான அன்றே புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பே காலை 10 மணிக்கு ஆனந்தன் தோழரிடம் முதல் விற்பனையை தொடங்கி வைத்து புத்தகத்தை வாசித்தேன்.

ஆதிக் குடிகளிடம் இருந்த கோத்தகிரி ஆங்கிலேயனின் பரங்கிமலை ஆனது .
ஆரியர், அரசர், ஆங்கிலேயர் என மூவரையும் எதிர்த்த அம்புகளையும் அதில் தோய்ந்த குருதியின் நிறத்திலும் சிவப்பு சித்தாந்த தோழர் ஆனந்தன் அவர்கள் இந்த நூலில் ரத்த வாடையுடன் தொடங்கும் முதல் அத்தியாயத்திலேயே ஆதிகுடிகளின் வரலாற்று வலிகளையும் அதில் ஆழப்படிந்த தழும்புகளையும் அடையாளப்படுத்தி விடுகிறார்.

வேட்டையாடிகள் உரித்த விலங்குகளின் தோலில் அமர்ந்து சாமியார் என்கிற போர்வையில் பல்லுயிர் ஓம்புதலுக்கு பகையாளிகளாகத் திரியும் காவி சாமியார்களை ஆரம்ப அத்தியாயங்களிலேயே தோலுரித்துக் காட்டுகிறார்.

சிற்றுயிர் முதல் பேருயிர் ஆன யானை வரை அனைத்து உயிர்களுக்கும் இவரது எழுத்து பக்கபலமாய் உள்ளது.. இயற்கையை நாம் இழந்து விடாமல் இருப்பதற்காக தன் பேனா முனையால் போராடி இருக்கிறார் ஆனந்தன் தோழர் இந்தப் புத்தகத்தின் மூலம்..

எழுத்தாளர், வழக்கறிஞர் மட்டுமல்ல…. ஜனங்களுக்காக மட்டுமின்றி வனங்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை இந்தப் புத்தகத்தில் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து அதில் கிடைக்காத தீர்வுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

நீதி வெல்லும் என்கிற நம்பிக்கையோடு பயணிக்கும் மனிதனுக்கு நீதி சில சமயம் ஏமாற்றம் அளிக்கும்… எவ்வித சட்டமும் அறியாத இயற்கை உயிரிகள் மடியும் இந்த வேலையில் அந்த வனச் சூழலிலேயே பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வன அறிஞர்களான ஆதிக்குடிகளுக்கு இன்னும் கூட நீதி கிடைக்க பல சந்துருக்கள் தேவைப்படுகிறார்கள்.

மறு காடு வளர்ப்பு என்கிற பெயரில் நடக்கும் நூதன ஏமாற்று வேலைகளையும் பொது முடக்கம் காலங்களில் இணைய வழியாக நடத்தப்பட்ட வன பாதுகாப்பு ஏமாற்றங்களையும் தெளிவான நிலையில் இந்த புத்தகம் முழுவதும் காண முடிகிறது.

தமிழகத்தில் உயரமான மலைகள் தொடங்கி கடல் சார் கொள்கைகளையும் பாதுகாப்புகளையும் களத்துக்கு சென்று ஆய்வு செய்து எழுதியது போன்ற உணர்வு தான் இப்புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு தோன்றுகிறது.

நீரும் நிலமும் காற்றும் எதிர்காலத்தில் சாத்தியமா? என்கிற வினா புத்தககத்தின் ஒவ்வொரு வரியை வாசிக்கிற போதும் நமக்குள் எழுகிறது… அது மட்டுமல்லாமல் பல அத்தியாயங்களில் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் சொல்கிறார்… காடழிப்பு நடக்காமல் இருக்க வேண்டும் என்பது பற்றிய இவரது சமூக அக்கறையையும் மிக்க ஆதங்கங்களையும் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்துக்களும் சற்று உரக்கமாகவே பேசுகிறது.

உதடு பிரித்தாலும் வார்த்தைகள் ஓசை எழுப்ப முடியாத ஊமை போன்ற சமூக சிக்கல்களை காடும் நாடும் நாமும் என நன்கு சிந்தித்து ஒவ்வொரு அத்தியாயமும் ஆறு போல் பயணித்து ஆழ்கடலின் அமைதியாய் போராடி கலந்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது..

நூலின் கடைசிப் பக்கத்தில் இணைத்திருக்கும் மலையாள கவிஞர் முகாத் வெம்பயாம் எழுதிய “அன்றங்கே ஒரு நாடிருந்ததே” என்று தொடங்கும் கவிதை பாடல். மிகவும் பொருத்தமாக உள்ளது… அந்தப் பாடல் அமைதியாய் கடலில் கலந்த போராட்டம் மீண்டும் அலைகளால்…. பேரலைகளாய்…. சுனாமியாய்…. இயற்கைக்கு இன்னல் விளைவிக்கும் இந்த சுயநல மனிதர்களைப் பார்த்து கேள்விகளாய் வான்நோக்கி எழும்பி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது தனது உரிமைகளையும் உடைமைகளையும்.

எழுத்துக் கலப்பையால் மனித மனங்களில் சட்டம் என்ற மாடுகளை பூட்டி மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் உலகின் மொத்த உயிரினங்களுக்காக சூழல் எழுத்துப் பயிர் செய்து, களை நீக்கி, இயற்கை வான் நோக்கி வளர, பயிரிட்டு பதிப்பித்திருக்கும் ஆனந்தனின் இந்த நூலை நாம் வாசிப்பு எனும் நீர் பாய்ச்சுவோம். ஒரு நாள் வான்நோக்கி விளையும் நமது இயற்கை பாதுகாப்பை நாம் அனைவரும் சேர்ந்து ஆனந்தமாய் அறுவடை செய்வோம்.

அருமையான அவசியமான நூலைப் படைத்த தோழர் ஆனந்தன் அவர்களின் விரல்களுக்கும் வாசிக்கும் உங்கள் ஒவ்வொருவரின் விழிகளுக்கும் வாழ்த்து சொல்வதே என் வாழ்நாள் விருப்பம்.

தூய அன்புடன்…


தூரிகை சின்னராசு
ஓவியர்./எழுத்தாளர் /குழந்தைகள் சமூக செயல்பாட்டாளர் / வாழ்வியல் திறன் பயிற்சியாளர்.

நூல்… காடு கடல் இனி நமக்கில்லை (வன ஆட்சி வரலாறும்.. வன அழிப்பு அரசியலையும் )

ஆசிரியர்.. மு.ஆனந்தன்

பக்கங்கள் 128 விலை ரூ130
வெளியீடு பாரதி புத்தகாலயம்

நூலினைப் பெற….
மு.ஆனந்தன் 94430 49987

தொகுப்பு: செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top