சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்-அப் படுகொலை…!! பெண் போலீஸ் ஏட்டு ரேவதி உருக்கமான வாக்குமூலம்…!! akkappore.news சொடுக்குங்க

என்னுடைய புருசனையும் இவ்வாறு தான் அடிக்க வேண்டும் பார்த்துக் கொள் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சொன்னார் ~~ காவலர் ரேவதி

நீதிமன்றத்தில் ரேவதியின் வாக்குமூலம்

நான் தற்போது சாத்தான்குளம் அறிவான்மொழி கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். தற்போது தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறேன். நான் 2005 ம் வருடம் காவலராக பணியில் சேர்ந்தேன்.

நான் கடந்த 2016 முதல் 2020 வரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தேன். சி.பி.ஐ.போலிசார் என்னை விசாரித்தார்கள். சி.பி.ஐ போலிசார் விசாரிப்பதற்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரித்தார்கள். அதற்கு முன்பு கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணை செய்தார்.

கடந்த 19.06.2020 ம் தேதி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் எனக்கு நிலைய பாராகாவல்பணி நியமிக்கப்பட்டது. எனக்கு ஒதுக்கிய பாராபணியானது 19.06.2020 ஆம் தேதி காலை 8 மணி முதல் 20.06.2020 ம் தேதி காலை 8 மணி வரை ஆகும்.

19.06.2020 அன்று என்னுடன் பணிபுரிந்த காவலர்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக்காவலர் முருகன், சாமத்துரை, பெண் தலைமைக்காவலர் ப்யூலாசெல்வகுமாரி, த.கா. ஜெயசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், செல்வின், மு.நி.கா. செல்லத்துரை, தாமஸ், அழகுமாரிச்செல்வம், மகாராஜா, காவலர் முத்துராஜா ஆகியோர் என்னுடன் அன்றைய தினம் பணியில் இருந்தனர். நீதிமன்றத்தில் ஆஜரில் உள்ள எதிரிகள் அனைவரும் 19.06.2020 அன்று பணியில் இருந்தனர்.

19.06.2020 ம் தேதியன்று மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை எனக்கு ஓய்வு நேரம். அந்த ஓய்வு நேரத்தில் நான் என்னுடைய வீட்டிற்கு சென்றேன். என்னுடைய குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என்னுடைய வீட்டில் இருந்து கிளம்புவதற்கு தாமதம் ஆனது. வீட்டில் இருந்து சுமார் 8.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு பணிக்கு கிளம்பினேன்.

சாத்தான்குளம் காவல்நிலையம் வரும் போது தலைமைக்காவலர் ப்யூலாசெல்வகுமாரி எனக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு காவல்நிலையத்தில் பிரச்சனையாக உள்ளது, காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உன்னைத் தேடுகிறார் பாரா போலிஸ் எங்கே என்று கேட்டு தேடுகிறார் என்றும், உடனடியாக வா என்றும் எனக்கு தகவல் கூறினார். நான் வந்து கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் வந்துவிடுவேன் என்று கூறினேன். சுமார் 8.50 மணியளவில் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்றேன்.

நான் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு செல்லும் போது வெளியிலுள்ள விளக்குகள் அணைந்திருந்தது. காவல்நிலையத்தில் வலது புறமாக சாய்வான படிக்கட்டு இருந்தது. அதில் தலைமைக்காவலர் ப்யூலாசெல்வ குமாரி நின்று கொண்டிருந்தார். இடதுபக்கம் வேப்பமரத்திற்கு கீழே டிரைவர் ஜெய சேகரன் மற்றும் காவலர் சந்தனகுமார் நின்று கொண்டிருந்தனர். காவல்நிலைய கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. காவல்நிலையத்திற்குள் யாரும் உள்ளே செல்லாதவாறு காவலர் தாமஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார். நான் தாமஸ் என்பவரிடம் காவல்நிலையத்திற்குள் செல்ல வேண்டுமென்று கூறினேன். அப்போது தாமஸ் என்னிடம் உள்ளே காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இரண்டு ஆண்களையும் ஜட்டியுடன் நிற்க வைத்து விசாரித்து கொண்டிருப்பதாகவும், அதனால் என்னை வெளியில் நிற்கும்படியும் கூறினார். அதனால் நான் சுமார் 10 நிமிடங்கள் காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தேன். காவலர் தாமசிடம் நான் ஏற்கனவே தாமதமாக வந்துள்ளேன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என்னை ஏசுவார், எனவே உள்ளே விடு என்று கூறினேன்.

அப்போது தாமஸ் காவல்நிலைய கதவுகளை தட்டியவுடன் கதவு திறக்கப்பட்டது. நான் உள்ளே சென்ற போது இடதுபக்கத்தில் பெரிய மேஜை இருந்தது. அந்த மேஜையில் ஒரு வாலிப பையனை ஜட்டியுடன் குப்புற படுக்க வைத்திருந்தார்கள். அந்த பையனின் ஒரு கையை சாமத்துரையும், மற்றொரு கையை வெயிலுமுத்துவும் பிடித்திருந்தார்கள். காலை பிடித்தவர்கள் யார் என்று நான் கவனிக்கவில்லை ஏன் என்றால் வாலிபர் ஜட்டியுடன் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் நான் கவனிக்க வில்லை.

அப்போது எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஒரு நீளமான கம்பை வைத்து பென்னிக்சை புட்டப்பகுதியில் அடித்துக் கொண்டிருந்தார். நான் நேரே சென்று காவல்ஆய்வாளர் அறைக்கு சென்று அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு, வெளியே வந்தேன். அப்போது பாலகிருஷ்ணன் என்னிடம் ரேவதி இவன் (பென்னிக்ஸ்) என்ன செய்தான் என்று தெரியுமா, நம்ம போலிஸ் முத்துராஜை தள்ளிவிட்டு என் டேபிளில் இருந்த பொருளையும் சிதறவிட்டுவிட்டான். உன் பங்கிற்கு நீயும் அடி என்று என்னிடம் சொன்னார். நான் யாரையும் அடிக்க மாட்டேன் என்று அவரிடம் கூறினேன். நீங்களும் அடிக்காதீர்கள் என்று பாலகிருஷ்ணனிடம் கூறினேன். என்ன பிரச்சனை வந்தாலும் எனது சொத்தை விற்று நான் பார்த்துக் கொள்வேன் என்று என்னிடம் சொன்னார். நான் எழுத்தர் அறைக்கு சென்று உட்கார்ந்தேன். அப்போது காவலர் முருகன் வந்து என்னிடம் குற்ற எண்.311/2020 கொண்ட D.S.R ஐ எஸ்.பி. ஆபிசிற்கும், கேம்ப் ஆபிசிற்கும் வாசிக்கும்படி என்னிடம் சொன்னார். எஸ்.பி. அலுவலகத்திற்கு நான் சொல்லி விடுகிறேன். கேம்ப்ஆபிசிற்கு நீங்கள் சொல்லி விடுங்கள் என்று முருகனிடம் கூறினேன். அதற்கு காவலர் முருகன் கேம்ப் ஆபிசிற்கு வாட்ஸ்அப்-ல் போட்டோ எடுத்து அனுப்பி விடுவதாக கூறினார். நான் எஸ்.பி.ஆபிசிற்கு மேற்படி குற்ற எண்.311/2020 வாசித்து விட்டு அடித்த பையனை பார்க்க போனேன். அப்போது பென்னிக்ஸ் மாடிப்படிக்கட்டின் கீழே படிக்கட்டில்
சாய்ந்தார் போல் படுத்திருந்தார். அப்போது அவரிடம் சென்று அவருடைய பெயரை கேட்டேன். அதற்கு அவர் பென்னிக்ஸ் என்று கூறினார். எதற்கு உன்னை போலிசார் அடிக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு பென்னிக்ஸ் என்னுடைய அப்பாவை காவல்நிலையத்தில் போலிசார் ரொம்ப அடித்தார்கள், அதற்கு என்னுடைய அப்பாவை அடிக்காதீர்கள் என்று போலிசாரிடம் கூறினேன். அதனால் எனக்கும், போலிசாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்று கூறினார். பென்னிக்சிடம் நீ ஊரிலுள்ள பெரிய ஆட்கள் இரண்டு பேரை அழைத்து வர வேண்டியது தானே என்று சொல்லி ஏன் தனியாக வந்தாய் என்றும் கேட்டேன். அதற்கு பென்னிக்ஸ் வெளியில் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

அதன்பின்னர் பென்னிக்ஸ் குடிக்க தண்ணீர் கேட்டார். நான் தண்ணீர் கொடுத்தேன். அதன்பிறகு பென்னிக்சின் அப்பாவும் காவல்நிலைய கைதி அறையில் இருப்பதாக கேட்டு நான் கைதிஅறைக்கு சென்று பார்த்தேன். அப்போது ஜெயராஜ் டிரவுசர் மாடல் ஜட்டியுடன் கைதிஅறையில் இருந்தார். அவரிடம் நான் பெயர் என்ன என்று கேட்டதற்கு அவர் ஜெயராஜ் என்று கூறினார். அவரிடம் நான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு செய்யாத தப்புக்கு என்னையும், என்னுடைய மகனையும் இப்படி அடிக்கிறார்கள் என்று சொன்னார். செய்யாத தப்புக்கு ஏன் போலிசார் இப்படி அடிக்கிறார்கள் என்று கேட்டதற்கு நேற்று இரவு நான் (ஜெயராஜ்) கடையை பூட்டிவிட்டு வெளியில் நின்று கொண்டிருந்த போது எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும், ஒரு போலிசும் ரவுண்ட்ஸ் வந்தார்கள், அப்போது எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் இங்கே இப்படி கூட்டமா இருக்கக் கூடாது என்றும், நான் திரும்பி வரும் போது இங்கே யாராவது நின்று கொண்டிருந்தால், தோலை உரித்துவிடுவேன் என்று சொன்னார். அதற்கு ஜெயராஜ் என்பவர் எதார்த்தமாக நானும் அவரது தோலை உரித்துவிடுவேன் என்று சொன்னதாகவும், அதை யாரோ பாலகிருஷ்ணனிடம் சொன்னதாகவும், அதற்கு தான் இன்று என்னையும், என் மகனையும் கூட்டி வந்து அடிக்கிறார்கள் என்று என்னிடம் ஜெயராஜ் கூறினார். அப்போது ஜெயராஜ் என்னிடம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டார். நான் தண்ணீர் கொண்டு போய் கொடுத்தேன்.

பிறகு காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் தன்னுடைய அறையில் இருந்து என்ன முருகா, என்ன பாலா சத்தம் கேட்கல என்று சொன்னார். திரும்பவும் போலிசார் அனைவரும் அதே மேஜையில் பென்னிக்சை குப்புற படுக்க வைத்து அடித்தார்கள். இவன் நல்ல அடி தாங்குவான், நல்ல குண்டா இருக்கான், நல்லா நூறு இட்லி சாப்பிடுவான் போல என்று சொல்லி சுழற்சிமுறையில் போலிசார் அனைவரும் மாற்றி மாற்றி அடித்தார்கள்.

முதலில் முருகன் அடித்தார், பின்னர் பாலகிருஷ்ணன், முத்துராஜ், வெயிலுமுத்து, சாமத்துரை, தாமஸ், செல்லத்துரை ஆகியோர் மாற்றி மாற்றி பிடிக்க மாற்றி மாற்றி அடித்தார்கள். அவ்வாறு அடித்த போது பென்னிக்சின் உடம்பிலிருந்து இரத்தம் சுவற்றில் சிதறியது. பின்னர் நான் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் அறைக்கு சென்று அவரிடம் அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன். எனக்கு பின்னால் முருகன் வந்தார். ஆய்வாளர் முருகனிடம் என்னுடைய புருசனையும் இவ்வாறு தான் அடிக்க வேண்டும் பார்த்துக் கொள் என்று கூறினார். உடனே நான் ஆய்வாளரிடம் நான் என் புருசனை பற்றி புகார் எதுவும் கொடுத்தேனா, ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். பின்பு நான் நடந்த சம்பவத்தை பார்க்க முடியாமல் காவல்நிலைய கதவிற்கு உள்ளேயே நின்றேன். அப்போது ரவி மாடியில் இருந்து வந்து காவல்ஆய்வாளர் அறைக்கு சென்றார். அப்போது அவரை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து போலிசாரும் ஆய்வாளர் அறைக்கு உள்ளே சென்றார்கள்.

அப்போது காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் இவர்களுக்கு காயம் அதிகமாகிவிட்டது, ஏதாவது கேஸ் போட்டு உள்ளே அடைக்கணும் என்றும், வெளியே விடமுடியாது என்றும் எஸ்.ஐ பாலகிருஷ்ணனிடம் சொன்னார். பிறகு காவலர் முருகனிடம் பஜாரில் இவர்கள் பிரச்சனை செய்ததாக புகார் ஒன்று கொடு என்றும், முத்துராஜிடம் அறிவேன் சாட்சியாக கையெழுத்து போட வேண்டுமென்று சொன்னார். பிறகு முருகன் ஒரு புகார் ஒன்று தயாரித்து காவல்ஆய்வாளர் ஸ்ரீதரிடம் கொடுத்தார். காவல் ஆய்வாளர் திருத்தம் செய்து, ரவிச்சந்திரனிடம் அடிக்கும்படி கொடுத்தார். பிறகு ரவிச்சந்திரன் சொல்ல சொல்ல அழகுமாரிச்செல்வம் அந்த புகாரை கணினியில் அடித்தார். பின்னர் அந்த புகாரில் முருகன் புகார்தாரராக கையெழுத்திட்டார். அந்த புகாரில் அறிவேன் சாட்சியாக முத்துராஜ் கையெழுத்து போட்டார். புகார் கொடுத்தவுடனே D.S.R. எழுதப்பட்டது. அந்த D.S.R.ஐ வெயிலுமுத்து என்னிடம் கொடுத்து எஸ்.பி. அலுவலகத்திற்கும், கேம்ப் அலுவலகத்திற்கும் வாசிக்கும்படி சொன்னார். நான் அந்த D.S.R ஐ எஸ்.பி.அலுவலகத்திற்கும், கேம்ப் அலுவலகத்திற்கும் வாசித்தேன். நான் வாசித்த D.S.R ஆனது குற்ற எண்.312/2020 ஆகும். இரவு ரிமாண்டிற்கு செல்லாத கைதிகள் இருந்தால் shadow duty போடுவார்கள். Shadow duty எஸ்.ஐபாலகிருஷ்ணன, த.கா.முருகன், சாமத்துரை, மு.நி.கா.அழகுமாரிச்செல்வம், முத்துராஜ் ஆகியோர் பெயரை எஸ்பி ஆபிசிற்கும், கேம்ப் ஆபிசிற்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் என்னை சொல்லும்படி சொன்னார். நான் அங்கு தகவல் சொன்னேன்.

பின்னர் சுமார் 11.30 மணியளவில் ரகுகணேஷ் சிவில் டிரஸ்சில் உள்ளே வந்தார். இவர் ஏற்கனவே 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரை அடித்துவிட்டு சென்றிருந்தாரே, மறுபடியும் சிவில் டிரஸ்சில் வருகிறாரே வந்தால் ரொம்ப அடிப்பார் என்று நான் கம்பை எடுத்து எஸ்.ஐ. அறையில் இருக்கும் பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்தேன். ரகுகணேஷ் சிவில் டிரஸ்சில் நேராக வந்து காவல்ஆய்வாளர் அறைக்கு சென்றார். அப்போது காவல்ஆய்வாளர் இந்த வழக்கிற்கான புலன்விசாரணை அதிகாரி என்று அவரிடம் சொன்னார். அப்போது ஜெயராஜ், பென்னிக்சை காவல்ஆய்வாளர் அறைக்கு காவலர்கள் கூட்டி சென்றார்கள்.

அப்போது ரகுகணேஷ் அவர்களிடம் நாளை நீதிபதியிடம் ரிமாண்டிற்கு கூட்டி செல்வார்கள் அப்போது நீங்கள் நீதிபதியிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்டதற்கு ஜெயராஜ் அப்போது ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். ஆனால் பென்னிக்ஸ் போலிஸ் ரொம்ப அடித்தார்கள் என்று சொல்வேன் என்று சொன்னார். அப்போது ரகுகணேஷ் போலிஸ் அடிச்சாங்களா என்று சொல்லி இனிமேல் தான் போலிஸ்அடியே இருக்கு என்று சொல்லி ஜெயராஜ், பென்னிக்சை கைதிஅறைக்கும், மாடிப்படிக்கும் இருக்கும் சுவற்றில் வைத்து கையை நீட்ட சொல்லி அடித்தும், கையை மேலே தூக்க சொல்லி இப்படி சொல்வியா என்று ஜெயராஜ் முன் பென்னிக்சையும், பென்னிக்ஸ் முன் ஜெயராஜையும் மாறி மாறி அடித்தார். அவர் புட்டப்பகுதி, கை மற்றும் அவர் மனம் போன போக்கில் எல்லா இடத்திலும் அடித்தார். அப்போது பென்னிக்சை அடிக்கும் போது பென்னிக்ஸ் உடம்பிலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக தரையில் வடிந்து கொண்டிருந்தது.

அப்போது பென்னிக்ஸ் நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று அங்கு நின்று கொண்டிருந்த அனைத்து காவலர்களின் கால்களிலும் விழுந்தார். சொட்டு சொட்டாக தரையில் விழுந்த இரத்தத்தை ரகுகணேஷ்
பென்னிக்சிடம் துடைக்குமாறு சொன்னார்.

முடியாதநிலையில் சென்று பாத்ரூமில் இருந்து பெயிண்ட் டப்பா போல இருக்கும் ஒரு டப்பாவில் தண்ணீர் எடுத்து வந்து பென்னிக்ஸ் தான் அணிந்திருந்த பனியனை வைத்து இரத்தக்கறையை துடைத்தார். அந்த துடைத்த பனியனானது பாத்ரூம் பக்கத்தில் போட்டிருந்தார்கள்.

பிறகு எஸ்.ஐ ரகுகணேஷ் அவர்கள் சாப்பிட்டார்களா என்று அங்கிருந்த காவலர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் சாப்பிடவில்லை என்று காவலர்கள் சொன்னார்கள். அப்போது ரகுகணேஷ் போலிஸ் வாங்கி கொடுத்த சாப்பாடை சாப்பிட மாட்டார்களா, இவனுங்களுக்கு அவ்வளவு ரோசமா என்று கேட்டார். பிறகு அந்த சாப்பாடை கைதிஅறையில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். பிறகு ரகுகணேஷ் கைதிஅறைக்கு சென்று ஏன் சாப்பிட மாட்டீர்களா என்று அவர்களை அடித்தார். அந்த அடிக்கிற சத்தம் எனக்கு கேட்டது. அப்போது பென்னிக்ஸ் நான் சாப்பிடுகிறேன் என்று சொன்னார். அவ்வாறு பென்னிக்ஸ் சொன்னவுடன் ரகுகணேஷ் வெளியே வந்துவிட்டார்.

நான் காவல்நிலையம் வந்த பிறகு 9.30 மணிக்கு ரகுகணேஷ் யூனிபார்மில் வந்துவிட்டு, 10.30 மணிக்கு திரும்பி போய்விட்டு 11.30 மணிக்கு சிவில் டிரஸ்சில் வந்தார். ஜெயராஜ், பென்னிக்சை இடைவெளி விட்டுவிட்டு சுமார் 1 மணி வரை அடித்தார்கள். காவல் ஆய்வாளர் அடிக்கவில்லை. ஆனால் உள்ளே இருந்து தூண்டிவிட்டு என்ன முருகா, என்ன பாலா சத்தம் கேட்கல என்று அடிக்கடி சொல்லி அடிக்க சொன்னார்.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கும் எதிரிகள் அனைவரும் மாற்றி மாற்றி பிடிக்க ஒவ்வொருத்தராக அடித்தார்கள். (மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 3 மணியளவில் சாட்சி மீண்டும் முதல்விசாரணை செய்யப்படுகிறார்.)

நான் காவல்நிலையம் சென்றது முதல் விடியற்காலை 1.30 மணி வரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அவர்கள் என்ன பாலா, முருகா சத்தம் கேட்கல என்று அடிக்கடி சொல்லியதன் பேரில் மற்ற எதிரிகள் அடித்தார்கள். ஆனால் காவல்ஆய்வாளர் அடித்ததை நான் பார்க்கவில்லை. விடியற்காலை சுமார் 2.30 மணி முதல் 3 மணி இருக்கும் அப்போது காவல்ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியே கிளம்பினார்கள். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அவர்கள் டேபிளில் குப்புற போட்டு அடிப்பது புது டிராக்கா இருக்குல்ல இன்னொரு ரவுண்டு அடிப்போமா என்று கேட்டார். ஆனால் கிளம்பும் போது அடிக்கவில்லை.

மீண்டும் ஆய்வாளர் அவர்கள் முருகனிடம் இருவரும் கைதிஅறையில் உடைகள் இல்லாமல் அம்மணமாக இருக்கட்டும்
என்று உத்தரவிட்டு சென்றார். முருகன் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று காவல் ஆய்வாளரிடம் சொன்னார். விடியற்காலை சுமார் 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஒவ்வொருவராக அதாவது காவல்ஆய்வாளர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர்
காவல்நிலையத்தில் இருந்து வெளியே சென்றார்கள். அவர்கள் போன பிறகு நான் ஜெயராஜ், பென்னிக்சை போய் பார்த்தேன். அவ்வாறு நான் பென்னிக்சை பார்த்த போது அவர் குப்புற படுத்திருந்தார். முனகி கொண்டே இருந்தார்.

ஜெயராஜ் உட்கார முடியாமல் ஒருபக்கமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நான் அவர்களிடம் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டேன். ஏதாவது உபாதை ஏற்பட்டால் உடனே சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். அப்போது அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்கள் என்று கேட்டனர். நான் தண்ணி கொடுத்தேன். காவல்நிலையத்தில் ஒரு வலி மருந்து அதாவது Moov இருந்தது. அதை நான் ஜெயராஜ், பென்னிக்சிடம் கொடுத்தேன். அது சாமத்துரைக்கு தெரியும். ப்ளாஸ்கில் டீ இருந்தது. அதை ஜெயராஜ், பென்னிக்சிடம் கொடுக்கலாமா என்று சாமத்துரையிடம் கேட்டேன். சாமத்துரை அவர்கள் டீ எல்லாம் கொடுக்க கூடாது என்று என்னிடம் சொல்லிவிட்டார். சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு ஜெயராஜ், பென்னிக்சை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரவு முழுவதும் பென்னிக்ஸ் முனகிக் கொண்டே இருந்தார். ஜெயராஜ் இதுமாதிரி என்னையும், என் மகனையும் பண்ணீட்டாங்களே என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவர்களிடம் காவலர்கள் அதிகாரி என்றும், அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்று நான் சொன்னேன். விடியற்காலை சுமார் 6 மணியளவில் காவல் ஆய்வாளருக்கு போன் செய்தேன். போன் செய்து ஸ்டேசனில் எந்த விசயமும் இல்லை பென்னிக்ஸ், ஜெயராஜ் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அப்போது காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் ஊர்க்கார்கள் எல்லாம் கூடிவிடுவார்கள், அவர்களுக்கு காயம் அதிகமாக உள்ளது அதனால் உடனே எஸ்.ஐ பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து ரிமாண்டிற்கு அவர்களை கூட்டி செல்லுமாறு என்னிடம் சொன்னார்

நான் எஸ்.ஐ.பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து ரிமாண்டிற்கு ஜெயராஜ், பென்னிக்சை தாங்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று காவல்ஆய்வாளர் சொன்னதாக அவரிடம் தெரிவித்தேன். கொஞ்சநேரத்தில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் காவல் நிலையம் வந்தார். அவர் வந்த பிறகு காவல்நிலையத்திற்குள் பாத்ரூமிற்கு சென்று விட்டேன். நான் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த போது ஜட்டியுடன் இருந்த ஜெயராஜ், பென்னிக்சிற்கு உடைகளை காவலர்கள் முத்துராஜூம், செல்லத்துரையும் மாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு டீ/காபி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 7 மணியளவில் காவல்ஆய்வாளர் டாடா சுமோவில் காவலர்கள் செல்லத்துரை, முத்துராஜ், பாலகிருஷ்ணன், டிரைவர் ஜெயசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் இருந்து ஜெயராஜ், பென்னிக்சை கூட்டிச் சென்றார்கள். அந்த வாகனத்தை தொடர்ந்து காவலர் சாமத்துரையும் பைக்கில் சென்றார். பிறகு ஜெயசேகர் அவர்களை கொண்டு மருத்துவமனைக்கு விட்டுவிட்டு காவல்நிலையம் வந்து என்னிடம் மெடிக்கல் மெமோ புத்தகம் கேட்டார். நான் உடனே மெடிக்கல் மெமோ புக்கை எடுத்து ஜெயசேகரிடம் கொடுத்துவிட்டேன்

. பின்பு மருத்துவமனைக்கு சென்று மறுபடியும் காவல்நிலையம் வந்து மெடிக்கல் மெமோவில் நான் தான் எழுதி கையெழுத்து போட வேண்டும் என்று என்னிடம் சொன்னார். நான் எழுதமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். பின்பு மருத்துவமனைக்கு சென்று திரும்பவும் காவல்நிலையம் வந்து மெடிக்கல் மெமோவில் கையெழுத்து போடுமாறு பாலகிருஷ்ணன் சொன்னார் என்று என்னிடம் சொன்னார். அந்த மெடிக்கல் மெமோவை பாலகிருஷ்ணன் எழுதியிருந்தார். கையெழுத்து என்னை போடுமாறு அவர் சொல்லியுள்ளார். அந்த சமயத்தில் ஆய்வாளரிடம் இருந்து போன் வந்தது, ரிமாண்ட் எடுத்து போய் விட்டார்களா என்று கேட்டார். நான் அதற்கு ரிமாண்ட் போய்விட்டது, ஆனால் மெடிக்கல் மெமோ புக்கில் என்னை கையெழுத்து போடச் சொல்கிறார்கள் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு காவல்ஆய்வாளர் என்னை கையெழுத்து போட சொன்னார். அதிகாரி சொன்னதன் பேரில் நான் மெடிக்கல்மெமோவில் கையொப்பம் செய்தேன்.

மேற்படி ரிமாண்ட் சென்ற பிறகு காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர் வந்தார். அவர் வாய் பேசாத ஊமை ஆகும். அவர் வரும் போது அவர் கையில் Harpic, Lizol உடன் வந்தார். அவர் உள்ளே வரும் போது மூக்கை பொத்திக் கொண்டும், தலையில் அடித்துக் கொண்டும் காவல் ஆய்வாளர் அறையை பார்த்து அவர் சைகையில் ஏதோ செய்தார். அவர் செய்த சைகை எனக்கு புரியவில்லை. Harpic, Lizol போட்டு காவல் நிலையத்தை சுத்தப்படுத்தினார். மேலும் அங்கிருக்கும் பொருட்களை எடுத்து வைத்தார்.

பிறகு 8 மணியளவில் காவலர் மகாராஜா காவல்நிலையம் வந்தார். அவர் வந்த பிறகு அவர் என்னிடம் ஸ்டேசனில் ஏதாவது விசேசமா என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் இரவு இரண்டு ஆம்பளைகள் இருந்தார்கள். அவர்களை ரிமாண்டிற்கு கூட்டிச் சென்றுவிட்டதாக சொன்னேன். அதற்கு மகாராஜா நம்ம ஸ்டேசனில் யாரையாவது பிடித்துவிட்டுவந்தால் இரண்டு நாட்கள் கழித்து தானே ரிமாண்ட் போகும், இன்றைக்கு ஏன் சீக்கிரம் போய்விட்டது என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிடம் ஸ்டேசனில் அவர்களை ரொம்ப அடித்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு காயம் அதிகமாகிவிட்டது என்றும், ஊர்க்காரர்கள் கூடிவிடுவார்கள் என்றும், ஆய்வாளர் உடனே ரிமாண்ட் எடுத்து செல்லும்படி சொன்னதால் சீக்கிரமாக அந்த இரண்டு நபர்களை ரிமாண்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று சொன்னேன். நான் வீட்டிற்கு கிளம்பும் போது எனக்கு எதிரே ப்யூலா செல்வகுமாரி வந்தார். ப்யூலா என்னிடம என்ன ஆச்சு என்று கேட்டார். நான் அவரிடம் ரொம்ப அடிச்சாங்க, காயம் அதிகமாக இருந்ததனால் காவல்ஆய்வாளர் சீக்கிரம் ரிமாண்ட் எடுத்து போக சொன்ன விபரத்தை அவரிடம் சொன்னேன். மேலும், என்னை மெடிக்கல் மெமோ புக்கில் கையெழுத்து போட சொன்னார் என்று சொன்னேன். அதற்கு ப்யூலா ஏன் மெடிக்கல் மெமோ புக்கில் கையெழுத்து போட்டாய் என்று என்னை திட்டினார். நான் அவரிடம் அதிகாரிகளை மீறி எப்படி கையெழுத்து போடாமல் இருக்க முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன்

20.06.2020 ம் அன்று இரவு காவல்ஆய்வாளர் ரவுண்ட்ஸ் முடித்து காவல்நிலையம் வந்தார். அதன்பிறகு பாலகிருஷ்ணன் வந்தார். அப்போது காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் பாலகிருஷ்ணனிடம் இப்போது பஜாரில் மக்கள் எப்படி இருக்காங்க என்று கேட்க அவர் பஜாரில் இப்போ எல்லோரும் கப்சிப் என்று இருக்காங்க எதுவும் பேசுறதில்லை என்று பாலகிருஷ்ணன் சொன்னார். 22.06.2020 ம் தேதியன்று இரவு நான் வேலை முடித்து கிளம்பும் சமயத்தில் பென்னிக்ஸ் இறந்துவிட்டார் என்று தகவல் வந்தது.

அப்போது காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் காவல்நிலையத்தில் அனைத்து காவலர்களையும் அழைத்தார். அப்போது ஸ்ரீதர் அவர்களிடம் ஸ்டேசனில் எதுவும் நடக்காதது போல் காண்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஸ்டேசனில் யாரும் அடிக்காதது போல் காண்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், கோவில்பட்டி கிளைச்சிறையில் தான் அவர்கள் இறந்துவிட்டார்கள் அங்கு நடந்த சம்பவம் போல் இருக்கட்டும் என்று எங்களிடம் சொன்னார். மேலும், பென்னிக்ஸ் இறந்த தகவல் கேட்டவுடன் காவல்நிலையத்தில் இருந்த ஆவணங்களை மாற்றினார்கள். G.D., Rough Duty Roaster மாற்றினார்கள்.

குற்ற எண்.312/2020 வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவர்களுக்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டார்கள். அவர்களுக்கு தெரிந்த நபர்கள் பெயர்களை போட்டு Statement எழுதிக் கொண்டார்கள். காவல்ஆய்வாளர் அந்த சமயத்தில் சி.சி.டி.வி கேமராவில் உள்ள பதிவுகளை அழித்துவிடணும் என்று வெயில்முத்து மற்றும் தாமஸ் அவர்களிடம் சொன்னார்.

வெயில்முத்து மற்றும் தாமஸ் ஆகியோர் சி.சி.டி.வி கேமராவில் இருந்த பதிவுகளை அழித்துவிட்டார்கள். 23.06.2020ம் தேதியன்று ஜெயராஜ் இறந்த செய்தியை நான் கேள்விப்பட்டேன். ஜெயராஜ் இறந்த பின்பு காவல்நிலையம் பதற்றமாக இருந்தது. காவல்நிலையத்திற்கு காவலர்கள் யாரும் வரவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரில் உள்ள ஒரு சில காவலர்கள் மட்டும் காவல்நிலையத்திற்கு வந்து சென்றார்கள். நான் இந்த சம்பவம் காரணமாக நான் மனஉளைச்சலில் இருந்தேன். அப்போது என் மூத்த மகள் என்னிடம் நடந்த சம்பவத்தை தைரியமாக சொல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னார். நான் எனது மனசாட்சிப்படி நடந்த சம்பவத்தை விசாரிக்கும் போது நான் சொன்னேன். என்னை சி.பி.ஐ போலிசார் இரண்டுமுறை விசாரித்தார்கள். சி.பி.ஐ போலிசார் என்னை 15.07.2020 மற்றும் 09.06.2022 ஆகிய தேதிகளில் விசாரித்தார்கள். 09.06.2022 ம் தேதியில் என்னை விசாரிக்கும் போது சாத்தான்குளம் பொதுஅரசு மருத்துவமனை, காமராஜர் சிலை அருகில் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி பதிவுகளை காண்பித்து விசாரித்தார்கள். அந்த பதிவுகளில் இருந்த காவலர்கள் யார் யார் என்று சொன்னேன். காமராஜர் சிலை அருகில் எடுக்கப்பட் சி.சி.டி.வி. பதிவுகளில் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் இருந்தனர். அந்த பதிவில் ஜெயராஜ் போலிஸ் ஜீப் நோக்கி செல்கிறார். அவரை போலிஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். உடனே பென்னிக்சும் வேகமாக காவல் வாகனத்தின் அருகே செல்கிறார். அப்போது வாகனம் நகருகிறது. பின்பு பென்னிக்ஸ் ஒருவர் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு காவல்வாகனத்தை தொடர்ந்து சென்ற பதிவு இருந்தது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி பதிவுகளில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் நடந்து செல்ல முடியாமல் நடந்து செல்வார்கள். அங்கு செல்லத்துரை, பாலகிருஷ்ணன், முத்துராஜ் ஆகியோர்கள் பதிவுகளில் இருந்தனர். சாமத்துரை அவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு உடைகள் மாற்றும் பதிவும் சி.சி.டி.வி பதிவுகளில் இருந்தது. தற்போது என்னிடம் காண்பிக்கப்படும் அ.சா.ஆ.111
ஆகும். அதில் B 6729919 என்ற வரிசை எண் கொண்ட தாளில் என்னுடைய கையொப்பம் உள்ளது. அதை நான் அடையாளம் காட்டுகிறேன். அதில் எழுதியுள்ள சங்கதிகள் பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை ஆகும். அதில் உள்ள கையெழுத்து மட்டும்

அ.சா.ஆ.118 ஆகும். நான் நீதித்துறை நடுவர் எண்.3, தூத்துக்குடி அவர்களிடம் 164 வாக்குமூலம் கொடுத்துள்ளேன். அந்த வாக்குமூலம் ஏற்கனவே அ.சா.ஆ.66 ல் உள்ளது. அந்த வாக்குமூலத்திலுள்ள கையொப்பங்கள் என்னுடைய கையொப்பங்கள் ஆகும். அதை நான் அடையாளம் காட்டுகிறேன். அந்த வாக்குமூலம் நான் சொல்ல சொல்ல நீதித்துறை நடுவரால் எழுதப்பட்டது. அ.சா.ஆ.66 ல் 164 வாக்குமூலம் கொடுக்க எனக்கு வந்த அழைப்பாணையும் நான் நீதிமன்றத்தில் கொடுத்த அடையாள அட்டையும் உள்ளது. நான் சி.பி.ஐ தயாரித்த பார்வைமகஜரில் கையொப்பம் செய்துள்ளேன். தற்போது என்னிடம் காண்பிக்கப்படும் ஆவணம் நான் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அவர்களிடம் கொடுத்த வாக்குமூலம் ஆகும்.

(போதிய நேரமின்மையின் காரணமாக முதல்விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.)

சாட்சியால் திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு அதை தட்டெழுத்தாளருக்கு என்னால் சொல்லப்பட்டு அவரால் தட்டச்சு செய்யப்பட்டு, சாட்சியால் வாசித்துப் பார்க்கப்பட்டு/ சாட்சிக்கு வாசித்துக்காண்பித்து அதை சரியென்று ஒப்புக்கொண்டு சாட்சி கையெழுத்திட்டார்/கையொப்பமிட்டார்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி. மதுரை.

பாகம் 3
தொடரும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top