பிரபல பாடலாசிரியர், கவிஞர் பழநிபாரதியின் ‘நிலவு ஒரு கதை சொல்லி’ – நிலா முற்றத்தில் ஓரிரவு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பிரபல பாடலாசிரியர், கவிஞர் பழநிபாரதியின் நிலவு ஒரு கதை சொல்லி – நிலா முற்றத்தில் ஓரிரவு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நிலவு… புனைவுகளின் தாய்
……………………………………………….

கவிஞர் பழநிபாரதியின்

நிலவு ஒரு கதை சொல்லி

நிலா முற்றத்தில் ஓரிரவு…

Puthiyamaadhavi Sankaran க்கு
அன்பும் நன்றியும்.

⭐⭐

நிலவு புனைவுகளின் தாய். இருள் கவியும்போது எங்கிருந்து இது ஒளி சுமந்து வருகிறது என்று ஆதிமனிதன் தேட ஆரம்பிக்கும்போது புனைவுகளின் கதவுகள் திறந்தன. அதில் அவன் நிலவோடு உறவாடி மகிழ்ந்தான். அதே அந்த நிலவின் தோற்றமும் மறைவும் அமாவாசையும் பெளர்ணமியும் அவன் அறிவுலகத்தின் இன்னொரு மந்திரத் திறவுகோலாக மாறியது. நாளும் கிழமையும் பூமியும் வானமும் கோள்களும் நட்சத்திரங்களும் அவன் தேடலில் ஒவ்வொரு அதிசயமாகத் தொடர்கின்றன.

புனைவுகளில் நிலவுமொழி ஒரு பொதுமொழி. மானுடசாதியின் ஒலிக்குறிப்புகளுக்குள் அது அடங்குவதில்லை. நிலவுமொழி மானுடத்தின் பொதுமொழியாக மானுட உணர்வுகளை இணைக்கும் ஈர்ப்புவிசையாகச் செயல்படுகிறது.

சிலருக்கு நிலவில் முயல் இருக்கிறது. சிலருக்கு நிலவில் தவளை துள்ளுகிறது. நிலவில் ஒரு சிறுவன் இருக்கிறான். நிலவில் யாரோ முரசு அறைகிறார்கள். சில நேரங்களில் நிலவு கண்ணீர் சிந்துகிறது. நிலவு, பெண்ணின் படைப்பாற்றலாக பிறப்பு இறப்பின் வாழ்க்கையைப் பிரதி எடுக்கிறது. இளைஞர்களுக்கு நிலவு தன் காதலியின் வதனத்தை நினைவூட்டுகிறது.

காதலியருக்கு நிலவு தன் காதல்பிரிவின் ஏக்கத்தை அதிகப்படுத்துகிறது. நிலவு படகுகளுக்கு வழிகாட்டுகிறது.. நிலவில் நம் பாட்டி காலை நீட்டி வைத்துக்கொண்டு இப்போதும் வடை சுடுகிறாள். நிலவைக்காட்டி அம்மாக்கள் பால்சோறு ஊட்டுகிறார்கள். நிலவில் மனிதன் கால்பதித்தப் பிறகும் நிலவு குறித்த நம் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் அது தடையாக இல்லை. காரணம் நிலவின் மொழி மனிதன் அறிந்த முதல்மொழி. முதல் கற்பனை, முதல் காதல், முதல் படிமம்.

இந்த நிலவு கவிஞர் பழநிபாரதியின் கவிதைகளில் இன்றைய நவீன கவிதையின் பிரதியாக மாறும்போது அது குறுந்தொகையாகவும் நற்றிணையாகவும் ஐங்குறுநூறாகவும் மாறி மாறி ஒரு நிகழ்த்துகலை நடத்தி இருக்கிறது. திரைச்சீலைகள் மாறுகின்றன.

நிலவு ஒரு கதைசொல்லி சூரியனிலிருந்து ஆரம்பிக்கிறது. அதுவும் பொருத்தம்தானே! சூரியனிலிருந்துதானே நிலவின் ஒளியும் மொழியும்.
நிலவுபற்றிய ஒரு கவிதை: தலைகோதும் ஒளி (பக் 14)

“நான்
ஓர் ஒளியாக பயணிக்க விரும்புகிறேன்.
ஒளியின் வேகத்தில் அல்ல.
இருளை
தலைக்கோதி உறங்கவைக்கும்
மென்னொளியாக.

இருள் விழுங்கிய வனத்தின்
பெருமரத்தினடியில்
யாரோ ஒருத்தி
ஏற்றிவிட்டுப் போன
ஓர் அகல்விளக்காக.

புல்வெளியில்
பனித்துளியை ஒளிரவைக்கும்
ஒரு மின்மினியாக.

யாருமில்லாத
தனியறையில் எரியும்
ஒரு மெழுகுவர்த்தியாக.

பிரபஞ்ச வெளியில்
என்னைத் தேடி நகரும்
ஒரு மஞ்சள் ஒளியாக…”

வேகமும் விரைவுமாக ஓடி முதலிடம் பிடிக்கும் வாழ்க்கை ஓட்டத்தில்
கவிஞனின் நிலவுமொழி…வேகத்தை விலக்கி வைக்கிறது. அதிலும் ஒளியின் அதிவேகம் ஒரு வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. அந்த வேகத்தை வேண்டாம் என்று விலக்கி வைக்கிறது கவிதையின் முதல்வரி. கவிஞனுக்கு வேகத்தைவிட முக்கியமானது தலைகோதி உறங்க வைக்கும் உறவு.

நிலவிடம் மின்னொளியை விலக்கி மென் ஒளியைக் கேட்கும் குழந்தை மனம். அன்புக்காகவும் மனித உறவுக்காகவும் நிம்மதியான உறக்கத்திற்காகவும் ஏங்கும் கவிதை மனம்… ஒரு குழந்தையைப்போல மென் ஒளியின் தலைகோதலுக்காக ஏங்குகிறது.

அடர்வனத்தில் திக்கு தெரியாமல் தவிக்கும்போது பெயர் தெரியாத யாரோ ஒருத்தி ஏற்றி வைத்திருக்கும் அகல்விளக்காக நிலவைத் தன் இருளுக்குள் அழைத்து வருகிறது.

புல்வெளியில் பனித்துளியில் ஆயிரமாயிரம் சூரியக்குஞ்சுகளை விடியல் வெளிச்சமிடும் என்றால் இரவில்.. அதே புல்வெளியில் அதே பனித்துளிகள் என்னவாகத் தெரியும்? நிலவு வெளிச்சத்தில் மின்மினியாக பறக்கிறது கவிதை மனம். நிலவின் மஞ்சள் ஒளி பட்டுத் தெறிக்கும்போது இரவின் பனித்துளியில் புற்களைச் சுற்றி மின்மினிக் கூட்டங்கள் வட்டமிடுகின்றன.

தனித்திருக்கும்போது அத்தருணத்தில் வெளிச்சமாக ஒரு மெழுகுவர்த்திபோல கரைந்து போகிறது நிலவு.

இப்படி ஒவ்வொன்றாக நிலவு, கவிதை மொழியாகி கவிஞனின் ஆழ்மனதில் ஒரு பிரபஞ்ச வெளியை உருவாக்கி கொள்கிறது.

பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்தில் நிலவைத் தேடிப் பயணிக்கும் மனித வரலாற்றில் செயற்கை கோள்களின் அதிசயங்கள் நிலவைப் படம்பிடித்து அனுப்பும் இக்காலத்தில், தானே ஒரு பிரபஞ்சமாக மாறிப்போன கவிதை மனம் இந்தப் புதிய பிரபஞ்ச வெளியில் தன்னைத் தேடி – கவிதையைத் தேடி – கவிஞனைத் தேடி இனி நிலவு பயணிக்கும் என்று கவிதையை ஆழ்மனவெளியில் கொண்டு நிறுத்துகிறது.

‘பிரபஞ்ச வெளியில் என்னைத் தேடி நகரும் ஒரு மஞ்சள் ஒளியாக “
இரயில் பெட்டிகளில் நிலவு பயணிக்கிறது.

சக்கர நாற்காலியைத் தூக்கி நகர்த்தியவளோடு ஒரு நற்றிணை “நாணயம்” ஆகச் சிதறுகிறது.

இப்போது நிலவைக் காணவில்லை. நிலவுக்கு என்ன ஆகி இருக்கும்?
எதையும் பகிர்ந்துகொள்ள முடியாத மன அழுத்தத்தில் நிலவு ஒரு தூக்க மாத்திரையாக தன்னைத் தானே விழுங்கிக் கொள்கிறது!.

சொற்களின் கூட்டத்திற்கு நடுவே மெளன விரிப்பாக நிலவுமொழி
மின்மினி வெளிச்சத்தில் இரவுகளை வசீகரமாக்குகிறது.

கவிஞர் பழநிபாரதிக்கு
வாழ்த்துகள்.

🌛🌛

நிலவு ஒரு கதை சொல்லி
கொன்றை வெளியீடு
விற்பனை உரிமை:
தமிழ்வெளி : 90940 05600

தொகுப்பு : செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

அரசு பள்ளியில் அருகு அறக்கட்டளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top