நீட் எதிர்ப்பு போராட்டக் களத்தில் சிலிர்க்க வைக்கும் 2 பெண்கள் புகைப்படங்கள்….!! கவிஞர் மனுஷ்ய புத்திரன், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இந்த இரண்டு புகைப்படங்களையும்
சுவர்களில் மாட்டி வையுங்கள்

ஒரு படத்தில்
ஒரு மாணவி
போலீஸ்காரன் தாக்குவதற்கு
லத்தியை உயர்த்தும்போது
ஒரு கோழி தன் குஞ்சுகளை
பருந்திடமிருந்து பாதுகாப்பதுபோல
இரண்டு கைகளாலும்
அவர்களைப் பாதுகாக்கிறாள்
அவளுக்கு பயமில்லை

இன்னொரு படத்தில்
ஒரு மாணவி
தன் தோழர்களை பிடித்துச் செல்லும்
ராணுவ வாகனத்தை
நேர் நின்று
ஒரு மிருகத்தை அடக்குவதுபோல
தடுத்துக்கொண்டு நிற்கிறாள்
அவளுக்கு பயமில்லை

சுவர்களில் மாட்டப்பட்ட
புனிதப் படங்களை
அல்லது கதாநாயர்களின் படங்களை கழற்றிவிட்டு
அந்தப் பெண்களின் படத்தை
மாட்டுங்கள்
அவை அச்சமின்மை என்ற
புதிய பழக்கத்தை
கற்றுக்கொடுக்கும் படங்கள்

அந்தப் பெண்கள்
இதற்குமுன்
கரப்பான் பூச்சிகளுக்கு
பயப்படுபவர்களாக இருந்திருக்கலாம்
அப்புறம் அவர்களே
ராட்சத கரப்பான் பூச்சிகளாக
மாறினார்கள்

அவர்கள் இதற்குமுன்
சாலையை பயந்து பயந்து
கடந்தவர்களாக இருக்கலாம்
இப்போது அவர்கள்
அதிகாரத்தின் புல்டோசர்கள்
தகர்க்க முடியாத
மனித அரணாக மாறியிருக்கிறார்கள்.

உங்கள் சுவர்களில்
உங்கள் மூதாதையர்கள் வேட்டையாடிய
மானின் தலைகளோ
புலியின் தோல்களோ
மாட்ட்ப்பட்டிருந்தால்
அவற்றைக் கழற்றிவிட்டு
அந்தப் பெண்களின் படங்களை
மாட்டுங்கள்
அவை உங்கள் குழந்தைகளுக்கு
நல்வழி காட்டும் படங்கள்

23.7.2026
இரவு 11.19
மனுஷ்ய புத்திரன்

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed