
வெள்ளாளகுண்டம் வீரக்கல்; சேலம் மாவட்ட வரலாற்றில் அழியவிருக்கும் ஒரு வீரத்தின் சாட்சி…!! ஆறகளூர் பொன். வெங்கடேசன் தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் அக்கப்போர் நாளிதழ் akkappore.news
வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம். ஊரின் மையத்தில், அரசமரத்தடி விநாயகர் கோவிலின் தென்புறம், வெய்யிலிலும் மழையிலும் நனைந்து, யாருமற்று நிற்கிறது ஒரு வரலாறு.
17-ம், 18-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த புலிக்குத்தி வீரக்கல் இது.
இந்த மண்ணை ஆண்ட சின்னமநாயக்கர் வம்சத்து குறுநில மன்னர்கள், ஏரி, குளங்களை வெட்டி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது மட்டுமல்ல, தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் கொடுத்த வீரர்களை நடுகல் எடுத்து வணங்கியவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு வீரனின் கல் தான் இது.
இந்தக் கல்லில் என்ன இருக்கிறது தெரியுமா?
மேலே ஒரு வீரன், பாய்ந்து வரும் பகைவனின் குதிரையை கழுத்தில் குத்தி வீழ்த்துகிறான். கீழே, ஆவேசமாக பாயும் புலியை தன் கை வேலால் குத்தி சாய்க்கிறான்.
அருகில் ஒரு பெண், அந்த வீரனை கைகூப்பி வணங்கி நிற்கிறாள். அவன் மனைவியாக இருக்கலாம், தன் கணவனின் வீரத்தையும் தியாகத்தையும் எண்ணி கண்ணீருடன் வணங்குகிறாள். உடன்கட்டை ஏறியதால் அவள் உருவமும் காட்டப்பட்டுள்ளது.
இது வெறும் சிற்பம் அல்ல. ஒரு வீரனின் உயிர் கதை.
கல்லின் மேல் பகுதியில் 5 வரிகளில் கல்வெட்டு உள்ளது. காலப்போக்கில் முதல் வரிகள் சிதைந்து விட்டன. முதல் வரியில் “வைகாசி” என்னும் தமிழ் மாதம் மட்டும் தெரிகிறது. ஆனால் கடைசி இரண்டு வரிகள் இன்றும் நம்மைப் பார்த்து கம்பீரமாக சொல்கிறது…
“சிவமூப்பன் புலியும் குதிரையும் குத்தினது”
ஆம். அந்த மாவீரனின் பெயர் சிவமூப்பன்.
புலியோடு போராடியும், பகைவனின் குதிரைப்படையோடு போராடியும் வீரமரணம் அடைந்த நம் மண்ணின் மைந்தன் சிவமூப்பன்.
தஞ்சாவூர் தமிழக தொல்லியல் கழகம் 2005-ல் வெளியிட்ட ஆவண புத்தகத்தில் கூட இந்த கல்வெட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலிக்குத்தி நடுகற்களே தமிழகத்தில் மிக மிக குறைவு. அதிலும் எழுத்துக்களோடு, வீரனின் பெயரோடு கிடைப்பது மிக அரிதிலும் அரிது. அப்படி ஒரு பொக்கிஷம் தான் வெள்ளாளகுண்டத்தில் நாதியற்று கிடக்கிறது.
இன்று அந்தக் கல் சிதிலமடைந்து வருகிறது. நாளை நம் பிள்ளைகள் இந்த வீரனின் பெயரைக் கூட அறிய முடியாமல் போய்விடும்.
என் மனம் மிகவும் வலிக்கிறது.
ஒரு வீரன் தன் மண்ணுக்காக உயிரைக் கொடுத்தான். நாம் அவன் நினைவைக் கூட காக்க முடியாமல் விட்டுவிடுவோமா?
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த வீரக்கல்லை பாதுகாக்க வேண்டும். முடிந்தால் அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்க வேண்டும். அல்லது அங்கேயே ஒரு சிறு பாதுகாப்பு கூடாரம் அமைத்து, இது யார், என்ன என்பதை விளக்கும் பலகை வைக்க வேண்டும். நம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வருங்கால சந்ததியினர் இந்த மண்ணின் வீரத்தை தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும்.
இது வெறும் கல் அல்ல… இது நம் சேலத்து மண்ணின் வீரம்! நம் அடையாளம்!
சிவமூப்பனின் தியாகம் மங்கிவிடக் கூடாது.
வரலாற்றை போற்றுவோம். மீட்டெடுப்போம்.
என்றும் வரலாற்றுப் பணியில்,
ஆறகளூர் பொன். வெங்கடேசன்
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
