மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு….!!சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம், (Shakti Abhiyan) இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு.அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு..
வணக்கம்
தமிழ்நாடு 2026-27 பட்ஜெட்டின் பல நல்ல அம்சங்களுக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும். இதில் அண்ணன் சீர் மற்றும் தாய்மாமன் சீர் என்ற பெயரில் தங்கம் தரும் திட்டம் இடம் பெற்றுள்ளது. இது பற்றி எங்கள் பார்வையை முன் வைக்கிறோம். இதைவிட முக்கியமாக பெண்களுக்கு என்ன தேவை என்பதையும் முன் வைக்கிறோம்.
நமது சமூகத்தில் அண்ணன் தாய்மாமன் போன்ற சில உறவுகள் மிகைப்படுத்தப்பட்டவையாக, புனிதப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. இந்த மிகைப்படுத்தல் ஒரு பெண்ணை ஆணை சார்ந்தவளாக ஆக்குவதாகவும், அவளின் இணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பதாகவும், மிக முக்கியமாக அவளின் சம சொத்துரிமையை பறிப்பதற்குமே பெரும்பாலும் இந்த ‘அதீத பாசமான’ சித்தரிப்பு உதவுகிறது.
ஆணவக்கொலை மற்றும் ஆணவ வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களை கேட்டால் சொல்வார்கள் தனது அண்ணனும் தாய் மாமனும் எந்த அளவுக்கு ஆணவ வன்முறையில் பங்கு பெற்றார்கள் என்று.
‘சீர்’ என்பது என்னவோ அண்ணன்/அப்பா/மாமன் தனது பாசத்தால் தனது சொத்தை கொடுப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில், கொடுக்கப்படும் பொருட்கள் அந்த பெண்ணின் சொத்து பங்கில் இருந்தே கொடுக்கப் படுகிறது.
சொத்துரிமையை பறிப்பதில் ‘சீர்’ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சீர் என்பது சமூக கொடுமையான வரதட்சணையின் ஒரு அம்சமே அன்றி வேறில்லை.
ஒரு பெண்ணுக்கு சேர வேண்டிய சொத்து, நான்கு பாகமாக பிரிக்கப்படுகிறது. முதல் பங்கு அந்த பெண்ணின் திருமண செலவுக்கு செலவிடப் படுகிறது. ஆண் பெண் இருவருமே திருமணத்தை செய்து கொண்ட போதிலும், திருமணச்செலவு அந்த பெண்ணின் தலையிலேயே கலாச்சாரம் என்ற பெயரில் கட்டப்படுகிறது. ஆண் சரிபாதி திருமண செலவை ஏற்றுக் கொள்வது இல்லை. ஒரே நாளில் செய்யப்படும் மிகப்பெரிய செலவாக இந்திய திருமணங்கள் இருப்பதற்கு காரணம், அந்த செலவுகள் பெண்ணின் பங்கு சொத்தை காலி செய்து செய்யப்படுபவை.
இரண்டாம் பங்கு, வரதட்சணை என்ற பெயரில் அந்த பெண்ணின் பங்கு சொத்து அந்த பெண்ணின் கணவனின் வங்கி கணக்கில், போடப்படுகிறது அல்லது ரொக்கமாக உறவினரை கூட்டி வெளிப்படையாகவே திருமணத்திற்கு முன்பு தரப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு சொந்தமான பங்கு சொத்தை அந்த பெண் பெயரில் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் பணமாகவோ பத்திர பதிவு செய்து நிலமாகவோ தானே கொடுக்க வேண்டும்? அது ஏன் கணவர் வங்கி கணக்கிற்கோ அல்லது Joint account க்கு செல்கிறது என்று புரியவில்லை. (வரதட்சணை கொடுமையில் இறந்த ரிதன்யாவிற்கு கணவருடன் joint account இல் 5 கோடி வழங்கப்பட்டதை நாம் நினைவு கூற வேண்டும்),
மூன்றாவது பங்கு சொத்து நகையாக அந்த பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த பெண் அவளது நகையை கணவரின் தொழில் முதலீட்டுக்கோ இதர செலவுக்கோ தந்துவிட எதிர்பார்க்கப் படுகிறாள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த நகையை அவளிடம் இருந்து அபகரித்து விடுகின்றன.
நான்காவதாக வருவதுதான் இந்த சீர் செனத்தி எனப்படுவது‌. இது பெண்ணின் பங்கு சொத்தை கணவருக்கு கார் பைக் கட்டில் பீரோ Fridge Washing machine கணவருக்கு நகைகள் வெள்ளி பாத்திரங்கள் பழங்கள் பதார்த்தங்கள் என்று ஒரு கணிசமான பங்கு பெண்ணின் சொத்து சீர் என்ற பெயரில் திருமணத்தின் போதும், திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறக்கும் போதும் கணவன் வீட்டிற்கு கொடுக்கப்படுகிறது.
மொத்தத்தில் இவை அனைத்துமே வரதட்சணையின் பல வடிவங்கள் தான். திருமணத்தின் போது செய்யும் இந்த வரதட்சணை என்ற பொருளாதார சுரண்டலின் முடிவில் அவளது சொத்து முழுவதும் இழந்து ஒரு நிலமற்ற கூலியற்ற பணியாளாக, ஒரு ஆணின் வாழ்நாள் கொத்தடிமையாக அனுப்பப்படுகிறாள். அந்த வீட்டில் தமிழகத்தின் 38% பெண்கள் குடும்ப வன்முறையை சந்திக்கிறார்கள்!! பெரும்பாலான பெண்கள் தனது மருத்துவ செலவுக்கு கூட தனது கணவரிடம் மன்றாடி கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் விவசாயி தற்கொலைகள் போல 5 மடங்குக்கு மேலான தற்கொலைகளை தமிழக இல்லத்தரசிகள் செய்து கொள்கிறார்கள். பலர் குழந்தைகளுக்காக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் பாதிக்கப்படுவது ஆண்களும் தான். இயலாத குடும்பங்களில் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் செலவே பல குடும்பங்களை கடனுக்குள் தள்ளி விடுகிறது. இதற்கு பயந்து பெண் சிசுக்கொலை இன்று வரை நின்றபாடில்லை.
இதை அந்த பெண்ணே ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலைக்கு தள்ளுவது வரதட்சணை சம்பந்தப்பட்டவற்றை அழகான வார்த்தைகளை சொல்லி அழைப்பது மூலமே. சீர் என்பது அப்படி ஒரு அழகுபடுத்தும் வார்த்தை. வரதட்சணை எனும் கொடுமையை அழகுபடுத்தும் ஒரு வார்த்தை.
நிலமற்றவர்களே வன்முறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அது பெண்களாக இருந்தாலும் தலித் அல்லது Slum பகுதியில் இருந்தாலும், நிலமும் வன்முறையும் எதிர் உறவு கொண்டவையே. இதற்கு நிறைய தரவுகள் உள்ளன.
இந்தியாவின் சொத்து 90% நிலம் மற்றும் கட்டிடம் என்ற வடிவில் உள்ளது. இந்தியாவின் 10% பெண்களின் பெயரில் தான் நிலம்/கட்டிடம் இருக்கிறது. 90% பெண்கள் நிலமற்ற கூலியற்ற நாதியற்ற பணியாட்களாகத்தான் இருக்கிறார்கள். வெறும் 10% நிலம் தான் பெண்கள் பெயரில் உள்ளது. 90% நிலம் ஆண்களின் பெயரிலேயே உள்ளது. இவ்வளவு பெரிய நில உரிமை வித்தியாசம் எப்படி ஆண் பெண்ணுக்கு இடையே வந்தது என்றால் இந்த வரதட்சணை என்ற பெயரில் ஒவ்வொரு பெண் மீதும் ஒவ்வொரு தலைமுறையும் நடத்தி வந்த அநியாயம் தான். ஒரு திருமணம் முடித்தால் பெண் தன் முழு சொத்தையும் கரைத்து விடுகிறாள், அதில் பெரும்பகுதி ஆணை மேலும் பணக்காரர் ஆக்குகிறது, மீதி திருமண செலவு, சீர் செனத்தி என்று அவளுக்கு வருமானம் தராத செலவாகிப் போகிறது. இதற்கு அவள் கட்டாயப்படுத்த படுகிறாள்.
ஆணுக்கு நிலம் பெண்ணுக்கு தங்கம்.
இது ஒரு பெரிய சூழ்ச்சி. நிலத்தில் இருந்து வாழ்க்கை முழுவதும் வருவாய் வரும். தங்கம் எந்த வருமானமும் தராது. ஆக ஆணுக்கு நிலம் தரும் போது அடுத்த 50 ஆண்டுகளில் விலையும் ஏறுகிறது, வருடா வருடம் விளைச்சலோ, வாடகையோ, குத்தகையோ எதோ ஒரு வருமானமும் வருகிறது. பெண்ணுக்கு தங்கத்தில் இருந்து வருமானம் வருவதில்லை. விற்பதோ அடமானம் வைப்பதோ இதையும் ஆணே பெரும்பாலும் செய்கிறார்கள், அல்லது ஆணின் அனுமதியுடனே செய்ய வேண்டி இருக்கிறது.
தாய்மாமன் சீர் என்று தங்கம் தருவது என்பது மீண்டும் பெண்ணுக்கு சொத்து, கல்வி, வேலைவாய்ப்பு, முதலீடு இவை முக்கியம் இல்லை தங்கம் தான் முக்கியம் எனும் சூழ்ச்சியை மக்கள் மனதில் திடப்படுத்துகிறது.
அன்பிற்குரிய முதல்வர் அவர்களே!
இந்திய அரசியலமைப்பின் படி நாம் சகோதரர்கள்தான். உங்களை எங்கள் அண்ணனாகவே பார்க்கிறோம். நீங்கள் உண்மையில் எங்களை, பெண்களை சகோதரிகளாக பார்ப்பீர்களானால் தயவு செய்து கீழ்க்கண்டவற்றை செய்யுங்கள்:

  1. காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை புகார்களை கேட்டு உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுங்கள். தற்போது காவல்துறை பெண்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி கொண்டு இருக்கிறது.
  2. எங்கள் பங்கு சொத்துக்களை எங்கள் உண்மையான அண்ணன்கள் மற்றும் தாய்மாமன்களிடம் கேட்டு லட்சக்கணக்கான வழக்கு தொடுத்திருக்கிறோம். எங்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நகைகளை கணவன் வீட்டில் கேட்டும் லட்சக்கணக்கான புகார்கள் வழக்குகள் தொடுத்திருக்கிறோம். இன்றைய தேதியில் பெண்கள் தொடுத்த 1.64 லட்சம் சிவில் வழக்குகள் தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி பற்றாக்குறை, விசாரணை அறைகள் பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து 50% பெண் நீதிபதிகளை அமர்த்தி பெண்களுக்கு 6 மாதத்தில் நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள். ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 லட்சம் ஜனத்தொகைக்கும் 220 நீதிபதிகள் உள்ளனர். நமக்கு வெறும் 15 நீதிபதிகளே உள்ளனர். தாமதமான நீதி வன்முறைக்கும் வழி வகுக்கிறது. பெண்களின் புகார்களில் காவல்துறை நகைகளை மீட்டு தருவதற்கு பதிலாக பஞ்சாயத்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.
  3. 73% நிலம் பூர்வீக வழியாகவே இந்தியாவில் ஒருவருக்கு வருகிறது. தமிழ்நாட்டின் நிலத்தில் பாதி பெண்களுக்கு சொந்தம். அதை அடைய பாதி சொத்து பெண்களுக்கு கட்டாயம் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். வரதட்சணை தடுப்புச் சட்டத்தையும் நில உச்சவரம்பு சட்டத்தையும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதுவே பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிக்க நிலையான வழியாகும்.
  4. சாராய கடைகளை முற்றிலும் மூடுங்கள். கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கொலை முயற்சியின் கீழ் தண்டனை தாருங்கள். உங்கள் தங்கைகள் தினமும் குடி வெறியில் அடிபட்டு கொண்டு இருக்கிறோம். எந்த பெண்ணிடமும் நகை வேண்டுமா கணவன் குடி மீட்பு செய்ய வேண்டுமா என்றால் சாராயக்கடையை மூடுங்கள் காலில் விழுந்து நன்றி சொல்கிறோம் என்பார்கள். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் உள்ள இலவச போதை மறுவாழ்வு மையத்தை நிரப்புங்கள், செயல்படுத்துங்கள். கல்லூரியில் மது பழக்கம் உள்ளவர்களை பரிசோதனை செய்து மறுவாழ்வு மையம் கவுன்செலிங் அனுப்புங்கள்.
  5. பெண் சமத்துவத்தையும் போதை விழிப்புணர்வையும் பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் சேருங்கள்.
  6. பெண்களின் இணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை பாதுகாக்க ஆவண குற்ற தடுப்புச் சட்டத்தை இயற்றுங்கள்.
  7. எங்களிடம் சொத்து இல்லாததால், எங்களால் திரைப்படம் தயாரிக்க முடிவதில்லை. எங்கள் பங்கு சொத்தையும் சேர்த்து வைத்திருப்பதால் ஆண்களே 99.9% திரைப்பட தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்க சிந்தனை மற்றும் வன்முறை வளர்க்க திரைப்படம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சாதித்த பெண்கள் பற்றிய திரைப்படங்களை எடுக்க All Women Crewக்களுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும். வருடம் நூறு திரைப்படங்களை பெண்களே தயாரிக்கட்டும்.‌ அரசு இலவச OTT இல் மக்கள் பார்க்கட்டும். மக்கள் மனதில் ஊறி இருக்கும் ஆணாதிக்க சிந்தனை மாறட்டும். பெண் சமத்துவம் மலரட்டும்.
  8. Special Children சிறப்பு குழந்தைகளின் தாய்கள் மிக மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். பெரும்பாலான கணவர்கள் குழந்தை சிறப்பு குழந்தை என்று தெரிந்ததும் விலகி விடுகிறார்கள். வேலைக்கும் போக முடியாமல், குழந்தையையும் பார்க்க முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த பெண்களுக்கு மாத உதவித்தொகையாக 20,000 மற்றும் இலவச வீடு இலவச சிறப்பு குழந்தைகள் பள்ளி அனைத்து மாவட்டங்களிலும் திறக்க வேண்டும்.
  9. இலவச பொதுக் கழிப்பறை சுத்தமாக அனைத்து பொது இடங்களிலும் இருக்கட்டும்.
  10. இலவச உயர்கல்வி தாருங்கள், கல்வி வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுங்கள், அரசின் ஒவ்வொரு முடிவெடுக்கும் குழுக்களிலும் 50% பெண்களை சேர்த்து கொண்டே ஒவ்வொரு முடிவுகளையும் எடுங்கள். பெண் சமத்துவம் நிறைந்த தமிழகம் மலரட்டும்..
    நன்றி 🙏
    சுபத்ரா தேவி தனசிங்,
    சக்தி இயக்கம்,
    (Shakti Abhiyan)
    இந்திய தேசிய காங்கிரஸ்
    தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed