
‘இரை’ குறுநாவலின் முன்னுரை👇 எழுத்தாளர் தீபா ஸ்ரீதரன் அக்கப்போர் நாளிதழ். சொடுக்குங்க akkappore.news
இந்த குறுநாவல், இரண்டு வெவ்வேறு உண்மை வாழ்க்கைச் சம்பவங்களின் அதிர்வுகளிலிருந்து கருக் கொண்டது. ஒன்று, துயரத்தின் தழும்புகளைச் சுமந்தபடி ஒரு பெண் (இக்கதையில் மரியா) என்னிடம் பகிர்ந்துகொண்ட நேரடி வாக்குமூலம். மற்றொன்று, வாழ்வின் விளிம்பிலிருந்து தற்கொலைக்குள் நழுவிய ஓர் இளைஞனின் (இக்கதையில் கதிர்) எஞ்சிய நினைவுகள் அவன் மறைவிற்குப் பிறகு நண்பர்களின் சிதறிய சித்திரங்களாய் எனக்குக் கிடைத்தவை. அவர்களின் தனிமனித உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் எவ்விதக் குந்தகமும் விளைவிக்காமல் மதிப்பளிக்கும் பொருட்டு, பெயர்களையும் அடையாளங்களையும் மறைத்து, அச்சம்பவங்களைப் புனைவின் அழகியலோடு உருமாற்றியுள்ளேன்.
உண்மையில், இச்சம்பவங்களை வெறும் சுவாரசியமான கதையாக்குவது எனது நோக்கமல்ல. பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் என் சிந்தனைப் பரப்பில் உறைந்து கிடந்த, கவனத்தைக் கோரிய அனுபவங்களின் மீதான ஒரு சீரான தார்மீகப் பரிசீலனையே இந்த எழுத்து.
இக்கதையை எழுதத் தொடங்கும்போதே, ‘யாருடைய குரலில் இக்கதை ஒலிக்க வேண்டும்?’ என்ற ஊசலாட்டம் எனக்குள் நீடித்தது. முதலில் மரியாவின் கோணத்தில்தான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பாதிக்கப்பட்ட ஓர் ஆணின் நிலையிலிருந்து, அவன் உலகிற்குள் புகுந்து இக் கதையை எழுதுவது ஒரு சவாலான அத்துமீறலாக எனக்குத் தோன்றியது. இருப்பினும், அந்த ‘அத்துமீறல்’ கோரும் படைப்புச் சுதந்திரமே என்னை இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் தூண்டியது.
உண்மைச் சம்பவத்தைப் புனைவாக்குவது என்பது வெறும் அழகியல் தெரிவு அல்ல; அது ஒரு தார்மீக இடர். ஒருபுறம் பரிச்சயமான கதை மாந்தர்களின் அக-புற உலகைத் துல்லியமாகச் சித்தரிக்கும் லாகவமே படைப்பாற்றலின் விரிவை மட்டுப்படுத்தும் தடையாகிவிடும் சவால்; மறுபுறம் அவர்களின் உணர்வுப் போராட்டங்களின் தூய்மை சிதைந்துவிடாமல் புனைவின் வடிவத்திற்குள் ஆவணப்படுத்தும் சிரமம். மஸ்கட் மாநகரில் நான் கேட்ட அந்த மனிதக் குரல்களின் நடுக்கமே, இக் கதையை நகர்த்திச் செல்ல எனக்குத் திசைகாட்டியாக அமைந்தது. உடைந்த இதயங்களை நேரில் கண்ட பிறகு, வலியைக் கற்பனை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. செபு, கோபால்பூர் மற்றும் மஸ்கட் போன்ற நிலப்பரப்புகளில் நான் பயணம் செய்ததும் வாழ்ந்த அனுபவமும், இக்கதையின் நிலப்பரப்புகளுக்கு உயிர் கொடுக்கவும், அந்த இடங்களின் ஆன்மாவை வாசகர்களுக்குக் கடத்தவும் எனக்குப் பெரிதும் உதவியது.
ஆனால், இந்த நெருக்கமே எழுதும் போது ஒரு பெரும் சுமையாகவும் மாறியது. நிஜ முகங்கள் மொழியிடம் தங்களை ஒப்படைக்கும்போது, எழுத்தாளரின் நடுநிலைமை தளர்ந்து அங்கே கருணை நுழைகிறது; அதன் பின்னாலேயே தீர்ப்புகளும் வருகின்றன. ஓர் எழுத்தின் உச்சக்கட்ட வதை என்பது, ஓர் உச்சக்கட்ட உணர்வை வார்த்தைகளால் நிரப்புவதுதான். நிஜ வாழ்வில் அவர்களுக்குக் கிடைக்காத நீதியையும் பாதுகாப் பையும், என் எழுத்தின் மூலம் வழங்கிவிட வேண்டும் என்ற ஒரு சார்பு நிலையும் ஆவேசமும் எனக்குள் எழுகிறது. ஆனால், எழுத்தாளர் என்பவர் பாதுகாவலர் அல்ல; அவர் காலத்தின் கண்ணாடி. அதைப் பிரதிபலிப்பதே அவரது தலையாய கடமை என்பதைத் தற்கட்டுப்பாட்டுடன் நினைவில் கொண்டு எழுத வேண்டியிருந்தது. இதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வதுதான் இந்தக் குறுநாவலில் எனக்கான பெரும் உழைப்பாகவும் இருந்தது.
நிஜ வாழ்க்கையில், இந்தக் கதையின் நாயகனும் நாயகியும் அந்நியர்கள். காலத்தின் நிலத்தின் மதில் சுவர்களாலும், மொழித் தடைகளாலும் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள். ஆனால், இந்தப் புனைவில் நான் அவர்களைக் காதலர்களாக இணைத்திருக்கிறேன். இது வெறும் கற்பனையாக இருந்தாலும் என்னைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு நான் வழங்கும் ஓர் ஆன்மீக இளைப்பாறலாகவே இதைக் கருதுகிறேன். வாழ்க்கைப் போராட்டம் அனைத்து உயிர்களுக்கும் தவிர்க்க முடியாத நித்திய விதி. ஆனால் வாழ்க்கையின் பெரும் புயல்களை எதிர் கொள்ளும்போது, நமக்குப் பக்கபலமாக நின்று அப்புயலைக் கடக்க உதவும் ஒரு ஜீவன் அமைவதே மானிடப் பிறவி பெறக்கூடிய பெரும் பேறு. புலம்பெயர்ந்து, சொந்த பந்தங்களை நீங்கி, அந்நிய மண்ணில் தனித்து விடப்பட்ட அவர்களுக்குள் ஓர் அமைதியையும் தேறுதலையும் உருவாக்கவே நான் இவர்களை இணைத்தேன். இந்தக் கதையை எழுதி முடிக்கும் தருணத்தில் அவர்கள் தனிமையில் விடப்படவில்லை என்ற ஆத்மார்த்தமான திருப்தி எனக்குள் எஞ்சியது.
உண்மை வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வலிக்கு மொழி கிடைத்து விட்டிருந்தது. அம்மொழிக்கு ஒரு செவியும் கிடைத்திருந்து என் உருவில். ஆனால் அந்த ஆணின் வலியோ மெளனத்தில் முடிந்து போனது. தற்கொலை செய்து கொண்டதால், அவனுக்குத் தன் சாட்சியத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை என்பதே என் தீராத ஆற்றாமை. எனவே அவனுடைய துயரத்தை வெறும் உதிர்ந்த தகவலாகச் சொல்ல நான் விரும்பவில்லை. புனைவின் எல்லைக்குள் நின்று, அவன் வாழ்க்கையைச் சற்று வித்தியாசமாகக் காட்ட விழைந்தேன். அதற்காகவே ‘மிஹிர்’ என்ற எழுத்தாளரை இந்தக் கதைக்குள் கொண்டுவந்தேன். இந்தக் கதையில் வரும் மிஹிர் சார் ஒரு மீட்பரோ அல்லது தார்மீக அதிகாரியோ அல்ல. அவர் ஒரு வழித்துணை மட்டுமே, அவர் மூலமாக அந்த ஆண் தன் வாழ்க்கை, வடுக்கள், மௌனங்களை வேறொரு கோணத்தில் தரிசிக்க அனுமதித்திருக்கிறேன். மிஹிர் சார் வழியாக, இந்தக் கதையில் அவனுக்கு ஒரு தீர்வைத் தரவில்லை, மாறாகச் சிந்தனையில் ஒரு துணையைத் தந்திருக்கிறேன்.
வாழ்க்கை சிதையும் போதும், பேச்சு அற்றுப் போகும் போதும், வலி சாதாரண மொழியின் எல்லைகளைக் கடந்து செல்லும் போதும்தான் மனிதர்களுக்குக் கலையும் இலக்கியமும் மிகவும் அவசியமானதாகிறது. எழுத்து எதையும் குணப் படுத்துவதில்லை. அல்லது நியாயப்படுத்துவதுமில்லை. அது உடன் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் மிஹிர் சார் இருப் பதற்குக் காரணமும் அதுதான்.
இந்தக் குறுநாவல் காதலைப் பேசுவது போலவே, இந்தச் சமூகம் ஆண்-பெண் மீது சுமத்தியிருக்கும் ‘பாத்திரங்களின்’ பாரத்தையும் விசாரணை செய்கிறது. பெண்ணின் வெளிப்பாடென்பது பெருவெள்ளம் போன்றது. அது கொட்டித் தீர்க்கும் இயல்புடையது. காதலோ துக்கமோ உவகையோ அவள் தயக்கமின்றித் தன்னை வெளிக்காட்டி விடுகிறாள். இக்கதையின் கதாநாயகியும் தன் வேதனைகளைத் தன் காதலனிடம் கொட்டித் தீர்த்து விடுகிறாள். அந்தப் பகிர்தலே அவளுக்கு ஒரு இளைப் பாறலாக அமைகிறது. இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண் தன் பலவீனத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறாள். அதற்கு சமூக அங்கீகாரமும் உண்டு. அது அவளது ‘இயல்பு’ என எளிதாக வகைப்படுத்தப்பட்டு விடுகிறது.
ஆனால் ஆணின் வெளிப்பாடோ மௌனத்தின் உறைநிலை. அவன் உணர்வுகளை விழுங்கி தொண்டைக்குள் அடைத்துப் புடைத்தவன். இதன் கதாநாயகனும் ‘ஹீரோ’ என்ற பிம்பத்திற்குள் சிறைப்பட்டிருக்கிறான். தன் காதலிக்குத் தான் ஓர் ‘இரட்சகனாக’ இருக்க வேண்டும் என்று அவன் நம்புவதால், தன் சொந்த ரணங்களை அவன் ரகசியமாகப் புதைக்கிறான். சமூகம் ஓர் ஆணை எப்போதும் பலசாலியாகவே பார்க்க விரும்புவதால், ஒரு பாதிக்கப்பட்ட சகமனிதனாக அவனால் உலகத்தின் முன் பல நேரங்களில் நிற்க முடிவதில்லை. சமூகம் வரையறுத்துள்ள ‘ஆண் கௌரவம்’ அத்தகைய சலுகையை அவனுக்குக் கனிவோடு அளிப்பதில்லை. எனவே இந்தக் குறுநாவல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசினாலும் அதன் அடிநாதமாக மனிதர்கள் தங்களுக்குள் தானே சுமந்து திரியும் கண்ணுக்குத் தெரியாத சமூக முகமூடிகளையே அப்பட்டமாக்குகிறது.
இதில் வரும் நாயகனும் நாயகியும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரையும் நசுக்குவது ஒன்றுதான்: “மனிதர்களாக இருப்பதைக் காட்டிலும், ஒரு பாத் திரமாக நடிக்க வேண்டும்” என்ற சமூகத்தின் கட்டாயம். நிதர் சனத்தில், ஒரு மனிதன் தன் இயல்பான உணர்வுகளோடு வாழ்வதை விட, சமூகம் அவனுக்குச் சூட்டியிருக்கும் ‘ஆண்-பெண்’ எனும் அடையாளங்களைச் சுமப்பதே இங்கே வாழ்க்கையாகிப் போகிறது. இங்கே அடிப்படை மானுடத் தன்மையை விடப் பாலினப் பிம்பங்களே மேலோங்கி நிற்கின்றன என்ற கசப்பான உண்மையையே இக்கதை மையமாகக் கொண்டிருக்கிறது.
இந்தக் குறுநாவலுக்கு நான் ‘இரை’ என்று பெயரிட்டது. தற்செயலானது அல்ல. இரை ஒரு நித்திய சுழற்சி. இந்த உலகம் ஒரு பிரம்மாண்டமான வேட்டைக் களம். வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தொழிலாளர்கள் வெறும் மனிதர்கள் அல்ல. அவர்கள் வறுமையாலும், தீராத கடன்களாலும், ‘குடும்பப் பொறுப்பு’ என்னும் கண்ணுக்குத் தெரியாத சூறாவளியாலும் துரத்தப்பட்டு, அந்நிய மண்ணில் விழும் ‘இரைகள்’.
ஆனால், இக்கதையில் பேசப்படுவது வெறும் பொருளாதார வேட்டை மட்டுமல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதனும் வாழும்போதே ஏதோ ஒன்றிற்கு இரையாகவே இருக்கிறான். காலத்தின் அரிப்பு, காமத்தின் வெம்மை, புகழின் மாயை, அதிகாரத்தின் நகங்கள் அல்லது ஞானத்திற்கான தேடல் என ஏதோ ஒன்று நம்மை இடைவிடாது துரத்திக்கொண்டே இருக்கிறது. இக்குறுநாவலில் உலவும் ஆன்மாக்களும், இத்தகைய தவிர்க்க முடியாத வேட்டையின் பலிபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேர்த்திக்கடன்கள். சொந்த மண்ணிலிருந்து வறுமையால் துரத்தப்பட்டு, அந்நியக் கரைகளில் தஞ்சம் புகுந்து அங்கே அதிகாரத்தின் வன்கரங்களுக்கும், அதன் பிறகு சமூக எதிர்பார்ப்புகள் எனும் மூச்சுத்திணறலுக்கும் இரையாகும் மனிதர்களின் கதையே இந்த ‘இரை.’
இந்தச் சுழற்சியில், வேட்டையாடுபவன் ஒருகட்டத்தில் வேட்டையாடப்பட வேண்டியவன் என்பது விதி; இன்றைய வேட்டைக்காரன் நாளைய பலி. எதை உண்டாலும் செரிக்காத உலகெனும் இந்த விஸ்வரூபப் பசிக்கு முன்னால், ஒரு மனிதன் தன் ஆன்மாவின் நுட்பமான தனித்துவத்தை எவ்விதம் சிதையாமல் காக்க முடியும்? இந்த வேட்டைக் களத்தில், ஒருவன் இரையாகாமல் இருப்பதே சாத்தியம்தானா அல்லது ‘இரை’ என்பது நாம் தப்பிக்க முடியாத விதியா?இந்தப் பிரம்மாண்டமான, நித்தியமான வேட்டைக்களத்தில், ‘இரை’ என்பது நாம் தற்செயலாக ஏற்கும் பாத்திரமா? அல்லது எந்த ஆன்மாவும் தன்னைத்தானே உண்மையிலேயே அவிழ்த்துக்கொள்ள முடியாத நமது இருப்பின் கட்டமைப்பா?
இந்தக் குறுநாவலை வெளியிட்ட தமிழினி பதிப்பகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
