நாற்பத்தாறு வயதினிலே….!! என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி 💐 எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர் ஸ்ரீதரன் தீபா அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

‘Bucket list’ என்று சொல்வார்களே, என் வாழ்நாளில் அப்படி ஒன்றை இதுவரை நான் வைத்துக்கொண்டதில்லை. அவ்வப்போது என் மனத்தில் அரும்பும் ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் உரமிட்டு, நீரூற்றி, மலரச்செய்துகொள்வதோடு சரி.
​இன்று காலையில் விழித்தெழுந்ததும், ‘நாற்பத்தாறு வயதாகிவிட்டதே, என் வாழ்வின் இலக்குதான் என்ன?’ என்ற கேள்வி, திரையகலப் பரவிய ஒளியைப் போல முகத்தில் அறைந்தது. உடனே, வாழ்நாளின் எஞ்சிய ஆண்டுகளைப் பற்றிய கணக்கீட்டை மனம் போடத் தொடங்கியது.

சராசரியாக 75 -80 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம் (குடும்ப வரலாறு, எனது ஆரோக்கியம் குறித்த கவனம், வாழ்க்கை முறை ஆகியவற்றை மனத்தில் கொண்டு மற்றும் ஆரோக்கியம் இப்படியே நீடிக்கும் பட்சத்தில்) இன்னும் 30 முதல் 35 வசந்த காலங்களை நான் எதிர்கொள்ளக்கூடும். அதற்குள் இவ்வுலகின் வசந்தத்தைப் பிரதிபலிக்கும் அத்தனை மலர்களையும் கூட என்னால் தரிசித்துவிட முடியாது. ஒருவிதத்தில் பற்றாக்குறை வாழ்க்கைதானே நம்முடையதெல்லாம்!

​ஆனாலும், முன்னோக்கிச் செல்ல ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ள வேண்டுமே, தொலைதூர இலக்காக ஏதோ ஒன்றை வரையறுத்துக்கொள்ள வேண்டுமே என்று நினைத்தேன். யோசித்துப்பார்த்தால், அப்படி நீண்டகாலக் குறிக்கோள் என்று வைத்துக்கொள்ள எனக்கு எதுவுமே இல்லை என்றே தோன்றியது. ஒன்றை அடைவதற்காக என் வாழ்க்கையையும், நேரத்தையும், உயிரையும், உழைப்பையும் முழுமூச்சாக அர்ப்பணித்து அதை வசப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு, இதுவரை எதுவும் என்னை ஈர்க்கவில்லை என்றே சொல்வேன்.

​பல நேரங்களில், ஒரு குறிக்கோள் என்பது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை நோக்கிய பயணமாகவே எனக்குப் படுகிறது. ‘எனக்கென்று ஓர் அடையாளம் வேண்டும்’ என்ற தவிப்பு எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ‘மனிதர்’ என்ற அடையாளத்தையே இன்னும் நான் பரிபூரணமாக உணரவில்லை, கண்டடையவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், அத்தகைய ஓர் அடையாளத்தையும் கூட அடைவதையே என் லட்சியமாகவோ குறிக்கோளாகவோ கொள்வதிலும் எனக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஓர் உயிருக்கு ‘இதுதான் பரிபூரணம்’ என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

​ஆனால் ஒன்று… சிறுவயதிலிருந்தே என் ஆற்றலை முழுமையாக முடிந்தவரை வெளிக்கொணர முயல்வது என்பது எனக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது.

அந்தப் பயணத்தில் வாய்க்கும் எல்லாவிதமான அனுபவங்களையும் நான் முழு மனத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். ரசிக்கிறேன்.

இந்தச் சமூகமோ, உறவுகளோ, நட்புகளோ நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமக்கு நாமே என்ன கொடுத்துக் கொள்ள முடியும் என்பது நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. பலமுறை இவ்வுலகம் கசப்பான அனுபவங்களை எனக்குத் தந்தாலும், வஞ்சகமே இல்லாமல் மகிழ்ச்சியானத் தருணங்களை எனக்கு நானே அமைத்துக் கொடுத்துக் கொள்வேன்.

. எனக்குப் பிடித்த உணவை உண்பதாகட்டும், எனக்குப் பிடித்த உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்வதாகட்டும், அதை ஒளிப்படம் எடுத்து வெளிக்காட்டிக்கொள்வதாகட்டும், புதிதாக எப்போதும் எதையாவது கற்றுக்கொள்வதாகட்டும், ஒரு கலையை அணுகுவதாகட்டும், உடலாரோக்கியத்தின் மீதான அக்கறையாகட்டும், ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகட்டும்… இப்படி எல்லா விஷயங்களையும் நேர்மையாக முழு ஈடுபாட்டுடன் செய்வதும் அவற்றின் சிறு சிறு நுணுக்கங்களை ரசிப்பதிலும் எனக்குப் பேரானந்தம்.

​என்னுடன் பணியாற்றும் தோழி ஒருவர் அடிக்கடி ஐரோப்பிய நகரங்களுக்குப் பயணம் சென்றுவருவார். ஏராளமான ஒளிப்படங்கள் எடுப்பார்; ஆனால், அவற்றுள் எதையுமே இன்ஸ்டாகிராமிலோ, பேஸ்புக்கிலோ பதிவிட மாட்டார். ஒருமுறை நான் அவரிடம், “ஏன் உன்னுடைய படங்களை நீ பதிவிடுவதில்லை?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உனக்கு நீ அழகாக இருக்கிறாய் என்று தெரியும், அதனால் உன்னுடைய படங்களை நீ பயமில்லாமல் பதிவிடுகிறாய்” என்றார். அவர் அளித்த பதில் எனக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது.

அதற்கு நான் அவரிடம், “நீங்கள் வேண்டுமானால் என் புகைப்படத்தில் என் கண்களையோ, மூக்கையோ, முகவெட்டையோ பார்க்கலாம். உங்கள் கற்பனையில் உள்ள அழகியலை அதோடு பொருத்திப் பார்க்கலாம். ஆனால், என் புகைப்படத்தில் நான் எப்போதுமே காண்பது, என்னைச் சிதைத்துக்கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில், சிதையாமல் என்னை மீளுருவாக்கம் செய்துகொள்ளும் தன்னம்பிக்கையையும், கடின உழைப்பையும், சிறுவயதிலிருந்த அதே தீராத ஆர்வத்தை இன்னும் பற்றிக்கொண்டிருப்பதையும்தான்” என்றேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.

என்னுடைய வாழ்க்கையோ பயணமோ எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் கண்ணோட்டம் தான். கண்ணோட்டம் தானே இருத்தலின் ஆதாரம். அதுதானே இந்தச் சமூகக் கட்டமைப்புகளுக்குள் வாழும் மனித இனத்திற்கான ஒரே சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டேன். நாம் தீவிரமாகப் பற்றிக்கொண்டிருக்கும் இந்தத் தனிமனித அடையாளம்கூட, ஒரு தற்காலிகமான எண்ணமும், நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஒரு கதையும் தவிர வேறொன்றுமில்லை. நமது உடலமைப்பும், உருவங்களும் எந்தவொரு நிரந்தர உண்மையும் கொண்டதல்ல. அது விழிப்புணர்வு தன்னைத்தானே உற்றுநோக்கும் ஒரு பார்வை மட்டுமே.

​’கட்டமைப்பு’ என்றவுடன் என் மனத்தில் வேறொன்றும் தோன்றுகிறது. எதையாவது ஒன்றை நான் விடாமல் தொடர்ந்து செய்துவருகிறேன், அதையும் உணர்வுப்பூர்வமாகவும் கவனமாகவும் செய்துவருகிறேன் என்றால்… அது, என்னை உருவாக்கிய கட்டமைப்புகளிலிருந்து ஒரு தனிமனிதராக என்னை நானே விலக்கிக்கொள்வதும், அவற்றை நொறுக்கி விடுவதும்தான். அதே நேரத்தில், ‘உறவு’ எனும் உருவெடுக்கும்போது, அந்தக் கட்டமைப்புக்குள் மீண்டும் என்னைப் புகுத்திக்கொள்வது. இந்த இரண்டுக்கும் இடையிலான சஞ்சாரத்தை நான் மிக நேர்த்தியாகக் கையாளுகிறேன் என்று உறுதியாகச் சொல்வேன்.

அப்படிக் கட்டமைப்புகளை நொறுக்கிச் சிதறி அத்துமீறும் போது அதில் சில தவறுகளும் செய்ததுண்டு. அது தவறு என்று சுட்டிக்காட்டி சிலர் என் வாழ்விலிருந்து விலகியதும் உண்டு. அதை உணர்ந்த வேளையில் அவர்களிடம் அதைப் பற்றிப் பேச முடியாத தூரத்திற்கு அவர்கள் காணாமல் போய் மறைந்ததும் உண்டு. அதேபோல் நான் உறவெனும் உருவெடுக்கும் போது சிலரை விலக்கி நின்றதும் உண்டு.

​உறவு எனும் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டிய நிலை வரும்போது, தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அக்கட்டமைப்பின் ஓர் அங்கமாகவே வந்துவிடுகின்றன. அவற்றோடு, நமக்குப்பிடித்தவர்கள் அல்லது நாம் மரியாதையாகப் பார்க்கக்கூடியவர்கள் எல்லாரோடும் நம் வாழ்க்கையின் இறுதிவரை பயணிக்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது மிகவும் அரிது.

எனவே, அவர்களுடனான எனக்கான சிறு சிறு தருணங்களை மனத்தில் ஏந்திக்கொண்டு விலகிக்கொள்கிறேன். நட்பு/உறவெனும் வட்டத்திற்கு வெளியே அவர்களைத் தனிமனிதர்களாகப் பார்த்து விடுகிறேன். எவரையும் தனிமனிதராகப் பார்க்கும்போது எனக்கு வெறுப்போ, கோபமோ, அவமரியாதையோ ஏற்படுவதில்லை. அவர்களை ஒரு கட்டமைப்பின் விளைவாகவே பார்த்து நகர்கிறேன்.

இந்த வாழ்க்கைமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. வசந்தத்தின் பிரதிபலிப்பான எல்லாப் பூக்களையும் என் வாழ்நாளில் என்னால் தரிசிக்க முடியாமல் போய்விடலாம். ஆனால், எல்லாப் பூக்களின் மொட்டவிழும் தன்மையை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. அது எனக்கு இப்போதைக்குப் போதுமானதாக இருக்கிறது. இதில் எனக்கு அமைந்த கூடுதல் மகிழ்ச்சி, எனக்கான சில உறவுகள். காலத்தின் பரப்பில், உறவெனும் சர்க்கரைக்கட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகள்தானே நாமெல்லாம்!

அதெல்லாம் சரி சென்ற ஆண்டு(46ல்) இந்தப் பயணத்தில் என்ன செய்தேன் என்று மீண்டும் ஒரு கேள்வி. ம்ம்….. நிறைய எழுதியிருக்கிறேன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து. மேலும் அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரைக்கும் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் செலவிட்டிருக்கிறேன். அது என் வேலை- வாழ்க்கை சமநிலையில் மிகத் தாராளமான நேர ஒதுக்கீடு தான். ஆனாலும் நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி. ஒரு குறுநாவல் வெளியாகியிருக்கிறது.

கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன். மனம் நிறைவாகத்தான் இருந்தது. சிறு புன்னகையுடனே 46ஐ முடித்து 47க்குள் கால் வைத்தேன். முகக் கண்ணாடியில் பல நரை இழைகள். இனி ‘டை’ அடிக்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன் . “Age is not ‘just a number'” என்று முன்பு எழுதிய பதிவு ஒன்று நினைவிற்கு வந்தது.
நிவி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள்.

​இவ்வளவு நீளமான ஒரு சுயகட்டுரையை எழுதிவிட்டு நிவியைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எப்படி? நான் சுமந்து திரியும், சில நேரங்களில் என்னைச் சுமக்கும் அந்தச் சர்க்கரைக்கட்டி எனக்கு ‘நிவி’தான்!

என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed