மதுரையில் தோழர் டி. குமரவேல் திருவுருவப் படத்திறப்பு; குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்
மதுரை, ஜூலை 5:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி 23-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தோழர் டி. குமரவேல் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கட்சியின் குடும்ப பாதுகாப்பு உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை செல்லூரில் உள்ள சோலை மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வடக்கு-1 பகுதி குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கலந்து கொண்டு தோழர் டி. குமரவேல் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு உதவி நிதியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், இரா. லெனின், எம். பாலசுப்பிரமணியம், ஆர். சசிக்கலா மற்றும் தோழர் டி. குமரவேல் அவர்களின் மனைவி கு. லீலாவதி, மகன்கள் பாலமுருகன், கார்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.


முன்னதாக செய்தியாளர்களிடம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது:
தமிழக ஆளுநர், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகார வரம்புகளை மீறி மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது கண்டனத்திற்குரியது. ஆளுநர் தனது அரசியல் சாசன வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும். பொதுமக்களின் குறைகளை நேரடியாக ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுப்பது அரசியல் சாசன நடைமுறைக்கு பொருத்தமானதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற அணுகுமுறையை ஆளுநர் கைவிட வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள “சோபா அரசியல்” குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெக அளித்து வரும் ஆதரவு முழுமையாக அரசியல் அடிப்படையிலானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்தத் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இடதுசாரி கட்சிகள் தனித்த அணியாக செயல்பட்டு வருகின்றன. தவெகவுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
கரூர் மரண வழக்கு குறித்து, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை நிறைவடையும் முன்பே யாரும் கருத்து தெரிவிப்பது பொருத்தமானதல்ல. விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
ஆளுநரை பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே நாளில் சந்தித்தது குறித்த கேள்விக்கு, பாஜக ஆளுநரை சந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிவந்த திமுகவும், அதிமுகவும் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது என்றார்.


அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வேறு கட்சிகளில் இணைவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்று குறுகிய காலத்திலேயே பதவி விலகி வேறு கட்சியில் இணைவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல. இது வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல். இத்தகைய அரசியல் போக்கை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed