

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில மற்றும் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம்…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க
தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில மற்றும் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் (26.07.2026) ஞாயிற்றுக்கிழமை சென்னை வளசரவாக்கம் ராஜலட்சுமி திருமண மண்டபம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ப. ஹரிஹரன் தலைமை தாங்கினார். சென்னை மண்டலத் தலைவர் வடிவேலு, சென்னை மண்டலச் செயலாளர் கார்த்திகேயன், தென் சென்னை மாவட்டத் தலைவர் வீரபாகு, தென் சென்னை மாவட்டச் செயலாளர் கோபிகிருஷ்ணன், சென்னை மண்டலப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள், சென்னை மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் பத்திரிக்கை, ஊடகத் துறையினரின் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
நிகழ்ச்சியை சௌமியா தொகுத்து வழங்கினார். மாநில துணை செய்தித் தொடர்பாளர் ஐசக் ராஜா நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
1.பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினருக்கு எளிய நடைமுறையில் அரசு அங்கீகார அடையாள அட்டை மற்றும் நிரந்தர அங்கீகார அட்டை வழங்க வேண்டும்.
2.அச்சு, தொலைக்காட்சி, இணைய ஊடகம், மாத இதழ், பருவ இதழ் உள்ளிட்ட அனைத்து ஊடகத் துறையினருக்கும் சமமான அரசு அங்கீகாரம் மற்றும் அனைத்து அரசு நலத்திட்டங்களும் வழங்கப்பட வேண்டும்.
3.பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்தி, உறுப்பினர் சேர்க்கையை எளிமைப்படுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள ஊடகப் பணியாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
4.பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினருக்கு மருத்துவக் காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம், உயிரிழப்பு நிவாரணம், பெண்களுக்கான பாதுகாப்பு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் வழங்கப்பட வேண்டும்.
5.வீட்டு மனைப்பட்டா, வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை, பயண ஊக்கத்தொகை, எரிபொருள் சலுகை, இலவச டோல் பாஸ், குறைந்த வட்டியில் வீடு மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட பொருளாதார நலத்திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும்.
6.மாவட்டந்தோறும் ஊடக மையங்கள், சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ நலத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
7.ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.
8.சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் அரசு விருதுகள் மற்றும் பாராட்டு நிதி வழங்க வேண்டும்.
9.பத்திரிக்கையாளர்களின் உயிர், உடைமை மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனித்துவமான பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
மேலும், செய்தி சேகரிப்பின்போது ஏற்படும் மிரட்டல், தாக்குதல் மற்றும் பொய்வழக்குகளைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
10.தமிழகம் முழுவதும் பணியாற்றும் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூட்டம் ஒருமனதாக வலியுறுத்தியது.
மேலும், மேற்கண்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் நேரில் வழங்கி, பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


