
ஆத்தூர் கோட்டை – 8 ஆண்டுக்கு முன் தேடலில் கிடைத்த பொக்கிஷம்…!! ஆறகழூர் வெங்கடேசன் பொன், தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம். அக்கப்போர் நாளிதழ். சொடுக்குங்க akkappore.news சொடுக்குங்க
காலை 6 மணி…
சைக்கிள் மெல்ல உருண்டு கொண்டு சென்றது. உடற்பயிற்சிக்காக ஓட்டிய சைக்கிள் வேகம் எடுக்கவில்லை. ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். கால்கள் பெடல்களை மிதித்துக் கொண்டும் பார்வை சாலையை நோக்கி இருந்தாலும் மனம் என்னவோ வரலாற்றை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது…
“கோட்டைக்கு போலாமா..?”
எங்கிருந்து குரல் வருது…! சுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமில்லை..
ஓ.. மைண்ட் வாய்ஸ்னு நெனைச்சி நான் தான் சத்தமா பேசிட்டேன் போல
சைக்கிள் கோட்டையை நோக்கி விரைந்தது.
ஆத்தூர் கோட்டை – ஒரு வரலாற்று பார்வை:
நான் சென்றது சாதாரண கோட்டைக்கு அல்ல. தமிழகத்தின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றான ஆத்தூர் கோட்டைக்கு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிஷ்ட நதிக்கரையில் சுமார் 62 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த கோட்டை, 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட கெட்டி முதலியார் மரபினரால் கட்டப்பட்டது.
கோட்டையின் மதில்கள் சுமார் 30 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்டவை. ஒரு புறம் வசிஷ்ட நதியும், மறுபுறம் ஆழமான அகழியும் இதற்கு இயற்கை அரணாக இருந்தன. கெட்டி முதலியாருக்கு பிறகு ஹைதர் அலி, திப்பு சுல்தான் வசம் இருந்த இந்த கோட்டை, 1792-ல் மூன்றாம் மைசூர் போருக்கு பிறகு ஆங்கிலேயர் வசம் வந்தது. 1799 வரை ராணுவ முகாமாகவும், 1824 வரை ஆயுதக் கிடங்காகவும் இருந்தது என்பது வரலாறு.
இன்று தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் சிதிலமடைந்து வருவது வேதனையான உண்மை.
அன்று எனக்கு கிடைத்த பொக்கிஷம்:
வசந்த மண்டபத்தின் அருகே உள்ள வீடுகளில் விசாரிக்க துவங்கினேன்…
“ஏங்க இங்க ஏதாவது பழங்கால பொருட்கள் இருக்கா..?”
“நீங்க யாரு..?”
“ஏங்க 10 நாள் முன்பு ஊரும் உணவும் நிகழ்ச்சிக்காக வந்தேனே…”
“ஓ நீங்களா..!!! நிகழ்ச்சி நல்லா இருந்திச்சி.. கோட்டைய நல்ல காட்டியிருந்தாங்க. எங்க நன்றியையும் மகிழ்ச்சியையும் Madona Janani-க்கு சொல்லிடுங்க…. எங்க அப்பா கூட கோட்டையை பத்தி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்… ஆனா இப்ப அந்த புத்தகம் ஒண்ணு கூட இல்லை..”
“எப்படியாவது ஒண்ணு எனக்கு வேணுமே…”
“சரிங்க அப்பாகிட்ட கேட்டு பார்க்கிறேன்..”
“என்கிட்ட ஒரு கல்லுதான் இருக்கு ஆகுமான்னு பாருங்க…”
அவர் கையில் கொடுத்ததை பார்த்ததும்…
வாவ்..வாவ்….சூப்பர்….இது கல் பீரங்கி குண்டுங்க..!
இதோ படத்தில் நீங்கள் பார்ப்பது தான் அந்த பொக்கிஷம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் ஆத்தூர் கோட்டையை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட கல் பீரங்கி குண்டு. இரும்பு குண்டுகள் வருவதற்கு முன், கருங்கல்லை கோள வடிவில் செதுக்கி பீரங்கியில் பயன்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
“ஓ..அப்படியா..???? நாங்க 10 வருசம் முன்பு இங்க வீடு கட்ட குழி தோண்டியபோது 3 பெரிய பானை (முதுமக்கள் தாழி) கிடைச்சுது அது எடுக்கும்போது உடைஞ்சி போச்சி… அதுக்குள்ள எலும்பு, ஊசி எல்லாம் இருந்திச்சி..”
“சூப்பரூஊஊஊஊஊஊ அது எல்லாம் இருக்குங்களா..?”
“இல்லிங்க.. அதையெல்லாம் அப்பவே தூக்கி போட்டுட்டோம்… அந்த ஊசி மட்டும் வச்சிருந்தோம்… பையன் ஸ்கூலுக்கு எடுத்திட்டு போனபோது தொலைச்சிட்டான்…”
அச்சச்சோ…..எல்லாம் மிஸ்ஸாகுதே….நாமதான் ரொம்ப லேட்டு…
முதுமக்கள் தாழி என்பது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னம். அதாவது ஆத்தூர் கோட்டைக்கு முன்பே, இந்த மண்ணில் ஒரு நாகரிகம் வாழ்ந்ததற்கான சாட்சி அது. ஆனால் விழிப்புணர்வு இல்லாமல் தூக்கி எறியப்பட்டுவிட்டது.
கல் பீரங்கி குண்டை மட்டும் பார்த்த திருப்தியோடு திரும்பி சூடா ஒரு இஞ்சி டீ குடிச்சிட்டு வாக்கிங்கை முடித்தேன்.
என் சைக்கிள் பயணம் வெறும் உடற்பயிற்சி அல்ல, நம் மண்ணின் வரலாற்றை தேடும் பயணம் என்பதை அன்று உணர்ந்தேன்.
வரலாற்றை பாதுகாப்போம்! ஆத்தூர் கோட்டையை காப்போம்!
- ஆறகழூர் வெங்கடேசன் பொன், தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம். அக்கப்போர் நாளிதழ். சொடுக்குங்க akkappore.news சொடுக்குங்க
#ஆத்தூர் கோட்டை #AtturFort #சேலம்வரலாறு #கெட்டிமுதலியார்கோட்டை #வரலாற்றுத்தேடல் #கல்பீரங்கி குண்டு #HeritageOfSalem #MudumalThazhi # ஆறகழூர் வெங்கடேசன் பொன்
