“அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..??” சிறுகதை – எழுத்தாளர் தஞ்சை அணைக்காடு வினோலியா – பேனா பிடித்த பெண் ஆளுமைகள் – கதை சொல்லப்போறோம்…!! சிறப்பு பகுதி அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அவன் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து கண்ணாடித் தடுப்புக்குப் பக்கத்தில் இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டான்.

ரோட்டை வேடிக்கை பார்க்க அதுதான் வசதி. முத்துலட்சுமியும் அப்படித்தான் உட்காருவாள்.

“என்ன சார் சாப்பிடுறீங்க?”
அவன் கொஞ்சம் யோசித்துவிட்டு
“ரெண்டு காபி.. ஒண்ணு சுகர் இல்லாம..”

அவர் எதிரே இருந்த காலி நாற்காலியைப் பார்த்துவிட்டு
“உங்களுக்கு மட்டும் இப்பக் கொண்டு வரவா?”

“இல்ல.. ரெண்டையும் கொண்டு வந்துடுங்க”
முத்துலட்சுமிக்கு சர்க்கரை வியாதி இல்லை. ஆனாலும் எப்போதுமே சீனி இல்லாமல் தான் காபி குடிக்கிறாள்.

அவனுக்கு சுகர் இருந்தும் அவன் சீனி போட்டுத் தான் குடிக்கிறான்..

இதுதான் அவர்கள் வாழ்க்கையில் இருவருக்கும் ஆன தூரம் என்று அவன் நினைக்கிறான்..

அவர்கள் நடுவே பெரிதாக சண்டைகள் ஏதும் கிடையாது.. ரெண்டு பேரும் அதிகம் பேசிக் கொள்ளுவதும் கிடையாது.

பேசுகிற டைப்பாக இல்லாவிட்டால் என்ன செய்வது?

இரண்டு பேரும் வேலைக்குப் போவார்கள்..
வருவார்கள்..

சாப்பிடுவார்கள் தூங்குவார்கள்..

குழந்தைகள் கிடையாது.. யாரிடம் பிரச்சனை? மருத்துவ உதவி கேட்போமா.. என்றெல்லாம் அவர்கள் யோசித்ததோ பேசினதோ கிடையாது…

திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.

சர்வர் வந்து இரண்டு காப்பியை வைத்தார்.
முத்துலட்சுமிக்கு ரோட்டுக் கடைகளில் நின்று காபி குடிப்பது பிடிக்காது.

இது போன்ற நல்ல உணவகங்களில் உட்கார்ந்து காபி குடிப்பதையே ஒரு தியானம் போல அவள் செய்வாள்.

காப்பியை நிதானமாக ஆற்றுவாள். கப் அல்லது டம்ளர்களின் விளிம்புகளைத் தன் விரலால் தடவிப் பார்ப்பாள்.. சில சமயங்களில் அவள் இதழ்களில் சிறு புன்னகை கூட வந்தது உண்டு…

காபியைப் பார்த்து யாரும் சிரிப்பார்களா என்று அவன் யோசித்திருக்கிறான்…

ஆனால் கேட்டதில்லை.

திடீரென்று ஒரு நாள் அவள் கிளம்பிப் போய்விட்டாள்…

“உங்களோட இருக்கிறது ரொம்ப மூச்சு முட்டுது.. நான் கொஞ்சம் தனியா இருக்கணும்”

அவனுக்கு அதை நம்பவே முடியவில்லை…

சீக்கிரம் திரும்ப வந்து விடுவாள் என்று நினைத்தான்.. ஆனால் வரவில்லை..

. தொலைபேசியில் பேசினால் சாதாரணமாகப் பேசுகிறாள்..
“வரணும்னு தோணலை.. எனக்காக நீங்க காத்திருக்க வேண்டாம்”

முத்துலட்சுமி அவனை விட்டுவிட்டுப் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவன் தன்னுடைய காப்பியை நிதானமாகக் குடித்தான்.

இரண்டு காப்பிக்கும் சேர்த்து பணத்தை வைத்துவிட்டு எழுந்தான்.

மற்றொரு காபி அங்கே வராத முத்துலட்சுமிக்காகக் காத்திருந்தது.
ஒரு காப்பியைக் கூட அவளுடைய நினைவு இல்லாமல் குடிக்கத் தனக்கு வரவில்லை என்பதை அவளுக்கு எப்படிச்சொல்லுவது?

தமிழ்ச் சிறுகதைகள்

பெண்எழுத்தாளர்கள்

jessi writes #jessica vinolia

தொகுப்பு: செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed