


பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி வயது மூப்பால் பெங்களூருவில் காலமானார்….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
🎤 ஜமுனா ராணி காலமானார்
பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி (88) வயது மூப்பால் பெங்களூருவில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

நான் சிரித்தாள் தீபாவளி, யாரடி நீ மோகினி, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே உள்ளிட்ட தமிழ் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்த ஜமுனா ராணி பெங்களூருவில் நேற்று(30-07-2026) காலமானார். அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன.
ஆந்திர பூர்வீகமாக கொண்டவர் ஜமுனா ராணி. வரதராஜுலு – திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம்தான். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அந்த காலத்திலேயே நடத்தி வந்துள்ளார்.

ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் ‘தியாகய்யா’ என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதை தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கல்யாணி’ படத்தில் ‘சக்ஸஸ் சக்ஸஸ்’, ‘ஒன் டூ த்ரீ’ ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார்.
அதை தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து ‘வளையாபதி’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’ என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 13.
அவரை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த பாடல் சி.ஆர். சுப்பராமனின் இசையில் ‘தேவதாஸ்’ படத்தில் சின்ன வயது பார்வதிக்காக இவர் பாடிய ‘ஓ தேவதாஸ்’ பாடல்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.

தேவதாசை தொடர்ந்து எம்ஜிஆரின் ‘குலேபகாவலி’யில் இடம் பெற்ற ‘ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் கலங்குவதைப் பாராயடா’ என்ற அவரின் பாடலும் ஹிட்டானது. ‘மகாதேவி’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே’, ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலும் மக்கள் மத்தியில் அவருக்கு தனி அங்கீகாரத்தை பெற்று கொடுத்தன.
கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் இவர் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் இன்றும் காதுகளில் ஒலிக்கிறது.
இந்த பாடல்களை தவிர ‘தெய்வப் பிறவி’யில் ‘தாரா தாரா வந்தாரா’, ‘காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு’, மன்னாதி மன்னனின் ‘நீயோ நானோ யார் நிலவே’ ‘பாசமலரி’ல் ‘பாட்டொன்று கேட்டேன்’ ஆகிய பாடல்களும் ஜமுனாராணியின் திறமைக்கு உதாரணம். ‘உத்தம புத்திரன்’ படத்தில் இடம் பெற்ற, இன்றும் பலரால் விரும்பி கேட்கப்படும் ‘யாரடி நீ மோகினி’ பாடலை ஜி. ராமநாதனின் இசையில் டி.எம்.எஸ் – ஜிக்கியுடன் இணைந்து ஜமுனா பாடியுள்ளார்.


