“நடுவில் வெளியேறி விடுவேன்” – நான் சந்தித்த நூறு பிரபலங்கள்..! – 2 சிறப்பு தொடர் – சிரிக்க கற்றுத்தரும் சிந்தனையாளர் சிரிப்பானந்தா அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மெல்லிய தேகம், மிகச் சன்னமான குரல். சராசரி மிடில் கிளாஸ் தோற்றம். இத்தனை எழுத்துக்களும் இவரிடமிருந்துதான் புறப்பட்டு வந்ததா என்று சந்தேகம் இவரை முதன் முதலில் பார்க்கும் எவருக்கும் எழுவது சகஜம்.

ஆரம்ப காலத்தில் ஒரு சிறுகதையை முப்பது பக்கத்துக்கு எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்பினேன். ஒரு மாதம் கழித்து உங்கள் கதை தேர்வாகவில்லை என்று குறிப்பிட்டு திரும்ப வந்துவிட்டது. கதையின் நீளம் அதிமாக இருப்பதாகத் தோன்றியதால், அதை இருபத்தைந்து பக்கங்களாக குறைத்து வேறொரு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.

சிறிது நாளில் அங்கிருந்தும் திரும்பி வந்துவிட்டது. இப்படியே சுருக்கி இரண்டு வரிக்கதையாகிவிடுமோ என்று கொஞ்ச நாள் எங்கும் அனுப்பாமல் வைத்திருந்தேன்.

ஆனால் நான் எழுதிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் எவ்வளவு சுருக்கமாக மாற்றமுடியுமோ அப்படி மாற்றி மற்றுமொரு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். எனது விக்கிரமாதித்த முயற்சி வெற்றி பெற்றது. அது அந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அதன் பின்னர் நான் எழுதிய கதைகளுக்கும் இந்த கதைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது என்று தனது முதல் கதை அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் முதுபெரும் எழுத்தாளர் காலஞ்சென்ற திரு அசோகமித்திரன் அவர்கள்.

சிரிப்பரங்கிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க அவரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். *நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்கிறேன், ஆனால் ஜோக் என்ற பெயரில் வீட்டு வேலை செய்யும் பெண்களை இழிவு படுத்துவது சமையல் செய்யும் ஆண்களை இளக்காரமாக பேசுவது, மனிதர்களின் உருவங்களை கேலி செய்வது போன்று யாராவது பேசினால் அந்த வினாடியே சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுவேன்”, என்று எச்சரித்தார். பல விஷயங்களில் அவரது உயர்வான எண்ணமும் சமுதாயத்தின். மீதான ஆழ்ந்த அக்கறையும் புரிந்தது.

ஒரு நண்பரோடு அமர்ந்து த்னா கஃபேயில் காஃபி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது சில போராட்டக்காரர்கள் ஹோட்டலுக்கு வெளியே வேறு ஏதோ விஷயத்தை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டு சென்றார்களாம். உடன் அமர்ந்திருந்த நண்பரிடம், “பாருங்க எது எதுக்கோ கோஷம் போட்டுச் செல்கிறார்கள், இந்த த்னா கஃபே காஃபி முன்பு மாதிரி இல்லை, ரொம்ப தரம் கொறஞ்சி போச்சி! அதுக்கு எதிராகவும் ரெண்டு கோஷம் சேர்த்துப் போட்டுட்டு போலாமில்லை, என்றாராம். நண்பருக்கு சிரிப்பை அடக்க வெகுநேரம் ஆயிற்றாம். இதை கேட்கிற நமக்குந்தான!

திரு அசோகமித்திரன் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியவர் அன்பு நண்பர் திரு க்ளிக் ரவி அவர்கள். அவரது ஃபேஸ்புக் ஐடியையும் க்ளிக் சார்தான் எனக்குத் தந்தார். அவரது இயற்கை பெயர் “தியாகராஜன்”, என்பது அந்த ஐடியை வைத்தே தெரிந்து கொண்டேன்.

நாலைந்து முறை அப்பெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்திருந்தாலும் வெளியூரில் இருந்ததால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதது எனது துரதிஷ்டமே!

இறைவா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed