

அம்மாடி இதுதான் காதலா? சிறப்பு கவிதை: கவிஞர் சு.வி.லட்சுமி, நாமக்கல். அக்கப்போர் நாளிதழ்
akkappore.news சொடுக்குங்க
🌹
இருசடைப் பின்னல் முன்னம்,
இளங்கனித் தொட்டி றங்கும்!
இருவிழி நோக்கு வர்மம்,
இருதயத் துடிப்பைத் தூண்டும்!
பருவமோ இளமைக் கோலம்!
பழகிட அழைக்கும் பெண்மை!
அருவமாய் எந்தன் ஆவி,
அவளுடன் கூடல் கொள்ளும்!!
அல்பகல் அவளின் தோற்றம்
அசைக்குதே உயிரின் வேரைச்
சொல்லிலாச் சாடைப் பேச்சால்
சொக்கிடும் ஆசை நெஞ்சம்!
மெல்லிய தேகம் வானின்,
மெத்தெனும் மேகப் பூவோ!
நில்லென சொல்லா மல்தான்,
நிலைதடு மாறு கின்றேன்!!
சில்லெனும் பனிபோல் மேனி
சிறுபொறி அவளின் பார்வை!
தொல்தமிழ் மூன்றும் கண்முன்
தொகுப்பென உலவக் கண்டேன்!
புல்வெளிப் பாதை போலே,
புதைகிறேன் நினைவுச் சேற்றில்!
துல்லிய மாக என்னைத்,
துளைக்கிறாள் மௌனத் தாலே!
சோற்றினைப் பிசைந்து கொண்டே,
சோம்பலாய் அமர்ந்தி ருப்பேன்!
ஆற்றிலே குளித்த போதும்,
ஆறுமோ உடலின் சூடு!
காற்றென பறக்கும் நெஞ்சம்,
காணுமோ அவளின் மூச்சைச்
சீற்றமாய் என்னுள் பாயும்,
சீர்மிகு காதல் வெள்ளம்!
தனியனாய் இருக்கும் போது,
தவிக்கிறேன் அவளைக் காண!
கனிவுடன் சிரித்துப் பேசும்,
கனவுடன் காத்தி ருப்பேன்!
இனியவள் வந்த பின்னே,
இதழ்வழி வார்த்தை இல்லை!
பனிமழை உணர்வில் பெய்யப்
பறக்கிறேன் காதல் வானில்!!
கவிஞர் சு.வி.லட்சுமி, நாமக்கல். அக்கப்போர் நாளிதழ், akkappore.news


