இராமேஸ்வரத்தில் ஒரு தேவஸ்தான ஆஸ்பத்திரி…! அன்புடன் ஆர்க்கே இராமநாதன்…! படங்கள் நன்றி : டாக்டர் ஜெ.பாஸ்கரன்..!

நடிகர் மயில்காளை அவர்களுடன் நடிகர் – கவிஞர் ஆர். க்கே.இராமநாதன்.

தேவஸ்தான ஆஸ்பத்திரி…!

(டாக்டர்கள் தினத்தின் நன்றிக்குறிப்பாக)

————–அன்புடன் ஆர்க்கே.இராமநாதன்…!

எங்களூரான இராமேஸ்வரத்தில் தேவஸ்தான ஆஸ்பத்திரி உண்டு .

அக்னி தீர்த்தத்திலிருந்து கோபுர வாசல் வந்தால் கோயிலின் அடுத்த வலதுபுற தரைக்கட்டிடம்.
கிழக்கு வாசலின் வடக்குப்புறத்தில் டாக்டருக்கு ஒரு அறை. கம்பவுண்டருக்கு ஒரு அறை..அது சற்றே பெரியது. ஒரு பெரிய டேபிளில் அப்பழுக்கில்லாவெண் துணியில் மருந்து சீசா, பாட்டில்,
பெரிய குடுவை.. சைஸ் வாரியாக பாட்டில்கள்..

எல்லாவாற்றிற்கும் அதனதன் வாயளவிற்கு கண்ணாடி மூடி. ஆங்கில “t’ போல.. உள்ளே ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, ஊதா என பல கலர்களிலும் சிரப்களின் கான்ஸன்ட்ரேட்ஸ்..கிளை நதி பிரித்து குடுவைகள் மாறி தண்ணீர் கலந்து சின்னச்சின்ன பாட்டில்களில் நோயாளிகளுக்கு விநியோகம்.

காலை எட்டிலிருந்து நண்பகல் பன்னிரண்டுவரை. மாலை நான்கிலிருந்து ஆறு என ஞாபகம்.

ஒருநாள் விஜயம் செய்தால் போதும்.

பொடி, சிரப் பாட்டில் மூணு வேளைக்கு மூன்று நாளைக்கு அவ்வளவுதான்..! எந்த உபாதையும் உதைவாங்கியபடி பறந்துவிடும்.

காய்ச்சல் முதல் கைவலி சிறுகாயம் (அதற்கு பஞ்சில் ஊறிய டிங்சர் தேவைப்பட்டால் வயலட் கலர் மருந்தை சிறுகிடுக்கியில் பஞ்சு கவ்வி மருந்து பாட்டிலை சிறுகுலுக்கி அதை காயத்தில்போடுவார் கம்பவுண்டர் சாமிநாதன்(என ஞாபகம்).பிறகு பாண்டேஜ் பட்டையால் தடுக்குச்சுற்று. துணிகிழித்து நரசிம்மர் கிழித்த ஹிரண்ய கசிபு குடல்போல குறுக்கே கிழித்து சரட்டென ஒரு முடி போட்டு ம் ஆச்சு போ என்பார்).

அனைத்தும் இலவசம்.

தெரிகிற ஜனம்தானே தவிர நெரிகிற கூட்டம் பொதுவாகவே இருக்காது. தீபாவளிகளில் தீக்காய கூட்டம் சற்று பரபரப்பாக அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும்.

மதிய நேரம் பெரும் சீசாக்களில் பெரிய கண்ணாடி ஜாடிகளில் மாதமிருமுறை மாட்டு வண்டிகளில் ஸ்டாக் கலர்கலராய் வந்திறங்கும். அதைச்சுற்றிவரும் வைக்கோல் போரில் பத்தில் ஒரு பங்கு வைத்து அதை இழுத்து வரும் காளைக்கு உணவாய் போட்டால் இருவேளைக்கு அதுவே எதேஷ்டம்.

மாலை டாக்டர் பேஷண்ட்ல் பார்க்க வருவதற்குள் கம்பவுண்டர் இவற்றை எல்லாம் சரிபார்த்து ரகரகமாய் அடுக்கிவைத்திருப்பார். அரைபக்க வெள்ளைத்தாளில் மருந்துபெயரெழுதி பெரிய பாட்டிலின் அடிவயிற்றில் ஒட்டப்படும்.

டாக்டர் சீனிவாசன். கதர் வேட்டி கதர் சட்டை கதர்குல்லாய் என அசல் காந்தியவாதி. மெதுவான குரலில் அனுசரணையாய் பேசுவார்.

ஒரு முறை வயிற்றுவலிக்காக அம்மா சொல்லி நான் மட்டும் போனேன்.

“கப்பல் கைலாசமய்யர் மகன்தானே நீ..?”

“ஆமாம் மாமா!”(ஸார் வராது. அப்போதெல்லாம் தெரியவும் தெரியாது)

“நீதானே முரளிகூட படிக்கறே?”

“ஆமாம் மாமா”

முரளி அவர் மகன்.

“சொல்லு என்ன பண்றது”

“வயத்த சுளீர் சுளீர்னு வலிக்கிறது”.

இதற்குள் ஸ்டெத்தில் சோதித்து நாக்கு நீட்டம் பார்த்து, நாடிபிடித்து, கண்கீழிமையை கட்டைவிரலால் இழுத்து பார்த்து முடித்திருப்பார்.

“சட்டையை தூக்கு..”

தன் வலதுகை முன் விரல்களால் வயிற்றின் மேல் கீழ் வல இட பிரதேசங்களில் லேசாக அழுத்துவார் .என்ன வியாதியென கணித்த திருப்தியில் ஸ்டெத்தை கழுத்து நீக்கி டேபிளுக்கு தந்துவிடுவார்.

“உப்புசம்”என்பார் சற்று சத்தமாய்.

என் அரைகுறை அறிவிற்கு அதை உப்பு some கொஞ்சம் உப்பு ஜாஸ்தி என்றோ வயிற்றின் உப்புதல் ஜாஸ்தியென்றோ முடிவு செய்வதற்குள் உள்ளே மாத்திரைகள் சிறு கிண்ணத்தில் பொடியாகி சூர்ணமாகி விடும்.
சிறு பேப்பரில் பச்சை இங்க்கில் ஏதோ எழுதிக்கொடுத்து —

“உள்ள போய் வாங்கிக்கோ”என்பார்.

“சாமிநாதா!உள்ளுக்கு ஒரு வேளைக்கு குடு போறும்”என்பார்.

சாமிநாதன் சாதுவானவர்.

நீளமான மூக்கு. பின்னாளில் நான் தேவனின் துப்பறியும் சாம்பு படிக்கையில் அவர் பிம்பமே சாம்புவாய் நிழலாடும்.

“உட்கார்டா அம்பி..’என ஸ்டூல் காட்டுவார்.

“மருந்து ரொம்ப கசக்குமா மாமா?”

மனமும் முகமும் எனக்குஅப்போதே அஷ்ட கோணலாகிவிடும்.

அவர் மகனும் என் வகுப்புத்தோழன்தான்.

“இல்ல்ல்லை கசக்காது”என்றபடி
பொடித்த சூர்ணத்தை சீராய் வெட்டிய சிறு செவ்வகத்தாளில் தட்டி சேகரிப்பார்.
அவுன்ஸ் கிளாஸில் கலர் சிரப்,குடுவை கவிழ்த்த தண்ணீர் சேர்த்து dilute செய்வார்.

வாயத்தொற அம்பி” என்பார்.
மாமா” என தயங்குவதற்குள் மூக்கை இடதுகையால் பிடித்து மூடுவார். நொடிப்பொழுதில் சூர்ணப்பொடியை கொட்டி தாளைக் காற்றில் பறக்கவிட்டு
உடனடியாய் அவுன்ஸு கிளாஸ் சிரப்பையும் ஊற்றி
” மடக்குனு முழுங்கிடு அம்பி”என்பார்.

கசப்பும்
இனிப்பும் துவர்ப்பும் புளிப்பும் காட்டுமாய் ஒரு மாதிரி ஙே என்றிருக்கும்..

“ரொம்ப கசக்கிறதா”என்றபடி கொஞ்சூண்டு நாட்டுச்சர்க்கரை தருவார்.”அண்ணாகிட்ட(டாக்டர்தான்) சொல்லிடாத.. இது உனக்காக என் ஸ்பெஷல்”எனச்சிரிப்பார்.

ஆசுவாசமாய் வாசல் வந்து ஆசைதீர மூக்குப்பொடி ஒரு கோர்ஸ் போட்டுக்கொள்வார்..

இப்போதல்லாம் அவையாவுமில்லை.. அவர்களுமில்லை..!

மருத்துவர்கள் தினத்தில் அவர்களை நன்றியுடன் வணங்கி நினைத்துக்கொள்கிறேன்.

—-அன்புடன் ஆர்க்கே இராமநாதன்

படங்கள் நன்றி :டாக்டர் ஜெ.பாஸ்கரன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed