

சுடுமண் சிற்பங்கள் (டெரகோட்டா) – சிறுபாக்கத்தில் ஒரு வரலாற்றுத் தேடல்…!! சரித்திர ஆய்வாளர் – ஆறகழூர் பொன். வெங்கடேசன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சில நாட்களுக்கு முன் சிறுபாக்கம் என்ற ஊருக்கு சென்றிருந்தேன்.
சிறுபாக்கம் மிகவும் பழமையான ஊர். ஆறகழூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் “சிறுபாக்கமுடையான்” என்ற ஊர்த்தலைவன் குறிப்பிடப்படுகிறான். இவர் வாணகோவரையர் ஆட்சியில் முக்கிய அதிகாரியாக இருந்தவர். இந்த ஊரில் ஒரு சிவாலயமும், பெருமாள் கோயிலும் உள்ளது. கோயில்கள் புனரமைக்கப்பட்டு விட்டதால் வரலாற்றுத் தடயங்கள் அதிகம் கிடைக்கவில்லை. சில கல்வெட்டுகள் மட்டும் ஆவணமாக பதிவில் உள்ளன. இருந்தாலும் இந்த ஊரில் இன்னும் தேட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
நான் எந்த ஊருக்கு சென்றாலும் வேலையை முடித்துவிட்டு, அங்கிருக்கும் தொன்மைத் தடயங்களை தேடுவது வழக்கம்.

அன்றும் அப்படித்தான்..
“தாத்தா இங்க ஏதாவது பழைய கோயில் இருக்கா?”
“இங்க ஈஸ்வரன், பெருமாள் கோயில் இருக்கு”
“அதை பாத்திட்டேன். வேற ஏதாவது இருக்கா?”
“இங்க ஆண்டவர் கோயிலுன்னு ஒண்ணு இருக்கு, அதைப்பாரு..”
“அது என்ன சாமி?”
“அது தெரியல ஆனா ஆண்டவர் கோயிலுன்னுதான் நாங்க சொல்லுவோம்”
அவரிடம் விடைபெற்று ஆண்டவர் கோயிலை நோக்கி வண்டியைத் திருப்பினேன். ஏரிக்கரையின் அருகில் இருந்த அந்த கோயிலில் நிறைய யானைகளையும், குதிரைகளையும் பார்த்த பின்தான் அது ஐயனார் கோயில் என்று புரிந்து கொண்டேன்.
இன்று ஐயனார் கோயில்களில் இருக்கும் யானைகள், குதிரைகள் எல்லாம் செங்கற்கள், சிமெண்ட் கொண்டு செய்யப்படுகின்றன. ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை இவை சுடுமண்ணால் செய்யப்பட்டன. இவை உள்ளீடு அற்று, நடுப்பகுதி காலியாக இருக்கும். சங்க காலத்திலோ முழுக்க சுடுமண்ணால் செய்யப்பட்ட உள்ளீடு உள்ள பொம்மைகள், உருவங்கள் செய்யப்பட்டன.

சுடுமண் சிற்பங்கள் (Terracotta) என்றால் என்ன?
டெர்ரா என்றால் மண் என்று பொருள். களிமண்ணால் சிற்பம் செய்து, பக்குவமாக உலர வைத்து, சூளை போன்ற அமைப்பில் சுட்டு எடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களே சுடுமண் சிற்பங்கள். சுட்ட மண் என்பதால் இப்பெயர். மண்பாண்டங்களும் இதே முறையில்தான் செய்யப்படுகின்றன.
இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்கள் எளிதில் தேயாது, துரு ஏறாது. பல ஆண்டுகள் வெயிலிலும், கடும் மழையிலும் கூட சிதைவுறாமல் இருக்கும். அவற்றில் பல்வகை வண்ணங்களை பூசுவர்.
இது உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு பண்டைய கலை. பண்டைய காலங்களில் பெண்கள் மண்ணில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களை அணிவதில் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள், பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் நம் முன்னோர்கள் சுடுமண் சிற்பங்களாக உருவாக்கினர்.
தமிழகத்தை பொறுத்தவரை சுதைச் சிற்பங்கள் இரண்டு வகை. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாக செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காக தற்காலிகமாக செய்து, திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது.
சிறுபாக்கம் ஐயனார் கோயிலில் நான் பார்த்த சில நூற்றாண்டு பழமையான சுடுமண் குதிரைகள், யானைகள் மற்றும் காவல் தெய்வங்களின் சிற்பங்களை உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன். ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள், ஆபரணங்கள், அந்த கால கலைஞர்களின் திறமையை பறைசாற்றுகின்றன.
காலப்போக்கில் உடைந்தும், சிதைந்தும் போன இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
இது போன்ற சுடுமண் சிற்பங்களை நீங்கள் எங்கு பார்த்தீர்கள் நண்பர்களே? கருத்தில் பகிருங்கள்.
- ஆறகழூர் பொன். வெங்கடேசன்
சுடுமண்சிற்பங்கள் #Terracotta #தமிழர்கலை #ஐயனார்_கோயில் #சிறுபாக்கம் #வரலாற்றுத்தேடல் #ஆறகழூர்



