திரைக்கதை மன்னன் பாக்கியராஜுக்கு காட்சி அமைப்பு, உணர்வு, நுட்பங்களை பட்டியலிட்டு சேலம் எம் ரவிச்சந்திரன் (செங்கதிர் நிலவன்) வித்தியாசமான அஞ்சலி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அனைவருக்கும் இனிய வணக்கம் என்று என்னால் இந்த பதிவில் கூறவில்லை.

காரணம் மனதில் அவ்வளவு வருத்தம் துக்கம் என்றும் சொல்லலாம்.

அண்மையில் மறைந்த இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் அவர்களின் உடைய இழப்பு .

நான் முதன் முதலில் பார்த்த பாக்கியராஜ் படம் ஒரு கை ஓசை.

சேலம் சங்கம் தியேட்டரில் அந்த படம் வெளியானது.

எங்கள் குடும்பம் சிவாஜி கணேசன் படங்களுக்கு முதலிடம் .

மற்றவை எல்லாம் அதற்கு பின்பு தான்.

ஆனால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சேலம் சங்கம் தியேட்டரில் ஒரு படம் வந்திருக்கிறதாம்.

அதில் ஊமையாக ஒருவர் நடித்திருக்கிறாராம் நன்றாக இருக்கிறதாம் என்று சொன்னதன் பேரில் அந்த படம் சென்றோம்.

எனக்கு அந்த வயதில் அந்த படமானது ஏதோ ஒரு நல்ல செய்தியை சொல்லியது.

அதில் முக்கியமாக கடைசியில் வரும் டைட்டில் கார்டில்

ஊமையாக இருக்கும் பொழுது பேச ஆசைப்பட்டான்

பேச்சு வந்த பொழுது ஊமையாக இருக்கவே ஆசைப்படுகிறான்

என்று.

மிகவும் நல்ல படம்.

தனது அம்மாவை மையமாக வைத்து அந்த படத்தில் அஸ்வினியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது பின்னால் தெரிந்து கொண்டேன்.

அந்த படத்தினை நீயும் வாத்தும் ஒன்று என்ற அந்த ஒரு வசனத்தினை வாத்தினை கையில் வைத்து சொல்வது ரொம்ப நன்றாக இருக்கும்.

அதேபோல் நிறைய காட்சிகள்.

.அப்போது மனதிற்குள் உள்ளே வந்த திரை கதை மன்னர் அதன் பிறகு எந்த காலகட்டத்திலும் வெளியே செல்லவே இல்லை

அதன் பிறகு விடியும் வரை காத்திரு.

அற்புதமான க்ரைம் திரில்லர்.

முக்கியமாக அந்த ரயிலில் அவர் கராத்தே மணி வருவதற்கு ஐந்து வினாடி முன்னால் இவர் வந்து அமரும் காட்சி.

நிறைய காட்சிகள் அந்த படத்தில் அவ்வளவு நன்றாக இருக்கும்.

அதன் பிறகு ஒரு அற்புதமான படம் தூறல் நின்னு போச்சு.

அந்தப் படம் கொண்டு சேர்க்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருந்தது.

முக்கியமாக பெண்ணை பார்க்க வரும் காட்சிகள்இடம

அனைவருக்கும் மாப்பிள்ளை காபி கொடுப்பது

பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மா சிவராமனை பார்த்து என்னையா துணை மாப்பிள்ளை கூட்டி வந்திருக்கிறாய்.

கொஞ்சம் கூட நல்லா இல்ல. அவன் மூக்கு முழியும் என்று சொல்வது

அப்பொழுது கதை திரைக்கதை வசனம் பாக்கியராஜ் என்று டைட்டில் வரும்

இப்படி எல்லாம் செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் அது இவரிடம் நன்றாகவே இருந்தது

இவையெல்லாம் நன்கு ரசிக்கத்தக்க காட்சிகள்

வீட்டில் யாரும் இல்லாத பொழுது சுலக்சனாவிடம் அவர் கடலை போடும் காட்சிகள்

அதே போல் செந்தாமரைக்கு அவர் அளித்த முக்கியத்துவம்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதன் பிறகு மௌன கீதங்கள்.

குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி தகராறு

ஒரு சாதாரணமான பிரச்சனை (தற்காலத்தில் அது சாதாரணமாக போய்விட்டது அப்பொழுதெல்லாம் அது மிகப்பெரிய பிரச்சனை.)

அதை வைத்து மிக நன்றாக அந்த படத்தினை செதுக்கியிருந்தார்.

அதிலும் சரிதாவை மிக நன்றாக பணி செய்ய வைத்திருந்தார்.

பாடல்கள் நடனம் என்று அனைத்து விதத்திலும் அந்த படமானது அவ்வளவு நன்றாக இருக்கும்.

அதன் பிறகு எவர்கிரீன் பிலிம் என்று சொல்லக்கூடிய இன்று போய் நாளை வா.

இந்த காலத்திலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அந்த படத்தினை பார்த்தால் மிகவும் விரும்புவார்கள்.

ஏன் இன்னும் 20 வருடங்கள் கழித்து அந்த படத்தை பார்த்தால் கூட அனைவரும் விரும்புவார்கள்.

அந்த அளவிற்கு இளமையான ஒரு படம் என்று அந்த படத்தினை சொல்லலாம்.

முக்கியமாக குடுகுடுப்பைகாரணை அடிப்பது

ராதிகாவிற்காக மூவரும் பணி செய்வது

கடைசி காட்சியில் பெண்களைப் பார்த்தால் ஸ்கூட்டர் நின்று விடும் என்று

ஒரு கிழவியை பார்த்தவுடன் ஸ்கூட்டர் தானாக ஆப் ஆகி விடுவது

வாத்தியார் ஹிந்தி சொல்லிக் கொடுப்பது என்று

ஒவ்வொரு காட்சியிலும் மிக அழகாக சித்தரித்து இருப்பார்.

பொய் சாட்சி

மிக நல்ல எனக்கு பிடித்த ஒரு படமாக பொய்சாட்சி சொல்லலாம்.

அப்புறம் அந்த ஏழு நாட்கள்

ஒரு மலையாள பாஷையை வைத்து அப்போதைய காலகட்டத்தில் தமிழ் படத்தினை ஒரு தரமான அற்புதமான படமாக மாற்றிய பெருமை திரைக்கதை மன்னருக்கு இருந்தது.

மிகவும் நல்ல படம் அந்த 7 நாட்கள்.

அதன் பிறகு அனைவருக்கும் பிடித்தமான முந்தானை முடிச்சு.

முந்தானை முடிச்சு படத்தினை நான் பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டரில் பார்த்தேன்.

பொள்ளாச்சியில் நகரத்தில் 200 நாட்கள் ஓடுகின்ற படம் அங்கே 100 நாள் தான் ஓடும்.

100 நாட்கள் நகரத்தில் ஓடுகின்ற படம் அங்கே 25 நாள்தான் ஓடும்.

காரணம் கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை என்று எல்லா இடங்களிலும் படம் வெளியிடப்படுவதால் பொள்ளாச்சியில் அந்த அளவிற்கு ஓடாது.

ஆனால் முந்தானை முடிச்சு 100 நாட்கள் அங்கு அற்புதமாக ஓடியது.

காரணம்
அற்புதமான திரைக்கதை அமைப்பு.

குடும்ப சண்டையை நடுவீதிக்கு கொண்டு வருவது

அந்த இடத்தில் படித்தவன் தானே உனக்கு அறிவில்லையா என்று நாலு பேர் சொல்லும்படி வைப்பது

வணக்கம் வைக்கும் பொழுது வருகின்ற அந்த விமர்சனம்

வியாபாரத்திற்காக தீபா டீச்சர் பாத்திரம் வைக்கப்பட்டிருந்தாலும் அதிலும் ஒரு பன்ச் .

இத்தனைக்கு மேல் இளையராஜாவின் அற்புதமான இசை

இவ்வளவும் சேர்ந்து படத்தினை எங்கோ கொண்டு சென்று விட்டது

எல்லா சித்திகளும் கொடுமைகாரர்கள் அல்ல

இந்த ஒரு லைன் தான் முந்தானை முடிச்சு .

அப்படி ஒரு கமர்சியல் ஹிட் என்பது அதன் பிறகு கரகாட்டக்காரன் படத்தில்தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

அதன் பிறகு தாவணிக் கனவுகள்

நான்கு தங்கைகளை வைத்துக்கொண்டு
வேலையில்லாமல்படும் பாடு

,அதில் நடிகர் திலகத்திற்கு ஒரு அருமையான பாத்திரம்.

பார்த்திபனுக்கு ஒரு நல்ல தபால்காரர் வேடம்.

பாரதிராஜாவின் பகுதி.

சினிமா தியேட்டரில் ஆபாச காட்சிகள் வரும் பொழுது 50 பைசா காசை கீழே போட்டுவிட்டு தங்கைகளை எடுக்க சொல்லி பின்னர் அவர்கள் தானாக புரிந்து கொள்ள செய்த ஒரு அற்புதமான காட்சி

இறுதியில் பணம் மட்டுமே முக்கியமல்ல

குணம் மட்டும்தான் முக்கியம் என்று மாப்பிள்ளைகளை தேர்வு செய்து கல்யாணம் செய்து வைத்த ஒரு மனநிலை.

அத்தனையும் மிக அழகாக சொல்லி இருப்பார்.

வழக்கம்போல் இளையராஜா பின்னிப் பெடல் எடுத்திருப்பார்.

அடுத்ததாக சின்ன வீடு .

பெண்டாட்டி எப்படி இருந்தாலும் அடுத்த பெண்களிடம் செல்வது என்பது மாபெரும் தவறு என்ற ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு மிக அற்புதமாக ஒரு படத்தினை கொடுத்திருக்கிறார்.

இதில் கல்பனா அவர் தகப்பனார் ஜெய்கணேசனுடைய பாத்திரம் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் .

ஒரு ஆண்மகன் தேவை இல்லாமல் ஒரு தொடர்பை வைத்துக்
கொண்டால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு
நல்ல உதாரணம் சின்ன வீடு படம்.

அதனாலயே இப்படிப்பட்ட பெயர் வைத்து கூட தாய்மார்கள் நன்றாக ஆதரித்தார்கள்.

அதன் பிறகு எங்க சின்ன ராசா

சித்தி எவ்வளவு கொடுமை செய்தாலும்

எவ்வளவு கெடுதல் செய்தாலும்

என்னுடைய அம்மா முக்கியம் என்று இறுதி வரையில் கொண்டு சென்ற திரைக்கதை.

மிக அருமையான படம் எங்க சின்ன ராசா

அதே போல் பாடல்களும் மிக நன்றாக கை கொடுத்து அனைவரும் பாராட்டினார்கள்.

அதன் பிறகு இது நம்ம ஆளு

பார்ப்பன கதையை வைத்துக்கொண்டு மிக நன்றாக செய்திருப்பார்.

ஸ்வாஹ மந்திரம் சொல்வதில் ஆரம்பித்த அந்த திரைக்கதையானது இறுதியில் பிராமணன் என்பவர் யார் என்று அதற்கு விளக்கம் சொல்வதில் சென்று முடியும் .

சாதிய பாகுபாட்டை எல்லாம் மிக சாதாரணமாக கடந்து சென்றிருப்பார்.

இதில் இசை அவரே செய்திருப்பார்.

அனைத்து பாடல்களும் மிக நன்றாக இருந்தது.

அடுத்ததாக சுந்தரகாண்டம்.

கல்லூரி ஆசிரியரை ஒரு மாணவி காதலித்தால் எப்படி இருக்கும்?

என்னென்ன
விளைவுகள்
ஏற்படும்
என்பதனுடைய
தொகுப்பு தான் சுந்தர காண்டம் .
மிக நல்ல படம்.

அதேபோல் ராசுக்குட்டி

அப்பா அம்மா சம்பாதித்து வைத்து சொத்தினை அனுபவித்துக் கொண்டு ஊரை சுற்றிக்கொண்டு இருந்தால் எப்படி வரும் என்பதற்கு உதாரணம் ராசுகுட்டி.

கல்யாண் குமார் மனோரமா செம்புலி ஆகியோரை மிக நன்றாக பயன்படுத்தியிருப்பார் .

அதன் பிறகு ஆராரோ ஆரிரரோ.

ஒரு மனநிலை மருத்துவமனையில் எடுக்கப்பட்ட படம்.

அதற்குரிய அம்சங்களுடன் மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கும்.

முக்கியமாக முதலிரவில் பானுப்பிரியா பாடும் பாடல் அனைவருக்கும் அவ்வளவு சிரிப்பை வரவழைக்கும்.

அதன் பிறகு பவுனு பவுனுதான்

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருப்பார்.

ரோகிணி கதாநாயகி

படம் நன்றாக இருக்கும்.

இத்தனை படங்களிலும் உள்ள சிறப்பு என்னவென்றால் திரைக்கதையானது தனித்தன்மையுடன் நிற்கும் .

எந்த இடத்திலும்
வசனமும் சரி
திரைக்கதையும் சரி
தொய்வே இருக்காது.
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படமானது அவ்வளவு நன்றாக இருக்கும்.

பாக்கியராஜ் என்பவர் திரைக்கதை மன்னர் திரைக்கதை ராஜா திரைக்கதை ஞானி வசனத்தில் இவரை விட்டால் ஆள் இல்லை என்றெல்லாம் சொல்வதற்கு மேல் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் நமது குடும்பத்தில் ஒருவர் .

நமது வீட்டில் பெரியப்பா.

சிறிய குழந்தைகளுக்கு அவர் சிற்றப்பா.

வயது வந்த பிள்ளைகளுக்கு அவர் மூத்த அண்ணன்.

சிரமப்படும் அக்காக்களுக்கு அவர் உதவி செய்யும் தம்பி .

நம்பி வந்த பெண்ணிற்கு நல்ல கணவன் .

அதே சமயம் சமுதாயத்தில் இருக்கக்கூடிய சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் என்ற அக்கறையுள்ள ஒரு இளைஞன் என்ற ஒரு பிம்பத்தை நமது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மனதிலும் உருவாக்கியவர்.

பாக்கியராஜ் படம் என்றால் எல்லாருமே பார்க்கலாம்.

அதற்கு மாற்று கருத்து கிடையாது.

அவர் படம் நன்றாக இல்லை என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டவர்
அவர் எந்த கட்சியில் இருந்தாலும் அவர் படத்திற்கு மட்டும் எந்த கட்சியும் கிடையாது
அனைத்து கட்சிகளுக்கு தொண்டர்களுமே ஒன்றாக அமர்ந்து அவர் படத்தினை ரசிப்பார்கள்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்று

தாய்மார்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றவர் அப்போதைய காலகட்டத்தில் இவர்தான் என நினைக்கிறேன்

அவர் சொல்லக்கூடிய கருத்துக்களை நகைச்சுவையுடன் எப்படி நமது மனதில் பதிய வைக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு பதிய வைத்து விடுவார்

அதே சமயம் அந்த நேரத்தில் அதன் ஆழமும் வீரியமும் நம்மால் உணர முடியும்

கடினமான கருத்துக்கள் அனைத்தையும் போகிற போக்கில் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்று விடுவார்.

அதற்கு நல்ல உதாரணம் இது நம்ம ஆளு படம்

இப்படி நமது மனதில் முத்திரை பதித்து விட்டு இவ்வளவு சீக்கிரம் கிளம்பி விட்டார்.

அதேபோல் இவருடைய படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கு ஒரு தனி பாத்திர அமைப்பு இருக்கும்.

இன்று போய் நாளை வா படத்தில் குஸ்தி வாத்தியார்

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் வாட்ச்மேன்

சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் தந்தை என அவருடைய பாத்திரங்கள் மிக நன்றாக இருக்கும்

அதிலும் பழமொழிகள் அவருக்கென்று தனியாக திரைக்கதை மன்னர் அவர்கள் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

உதாரணத்திற்கு சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் ஒரு படத்தில்

கண்ணடிச்சா வராத பொம்பள கைய புடிச்சு இழுத்தா
மட்டும் வந்திரவா போறா

என்று டைலர் கவுண்டமணி இடம் சொல்வார்.

அப்பொழுது சரியாக கல்லாப்பெட்டி சிங்காரத்தின் பின்னால் அவர் மனைவி காந்திமதி வந்து நிற்பார்.

அவர் வந்ததே கவனிக்காமல் மறுபடியும் அதே பழமொழியை சொல்வார்.

அந்த இடம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

இவருடைய படத்தில் கல்யாணம் என்றாலே அது அதில் ஒரு பிரச்சனை வரும்.

அந்தப் பிரச்சனை தீர்ந்து கல்யாணம் சுகமாக நடக்கும்.

அந்த பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து கல்யாணம் நடக்கும் வரை வருகின்ற காட்சிகள் அனைத்தும் மிக நன்றாக நகைச்சுவையாக இன்னமும் ஒரு 2 மணி நேரம் பார்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடிய வகையில் தான் இவர் தன்னுடைய திரைக்கதையை அமைத்திருப்பார்.

இவருடைய படங்களில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாக்கியராஜ் என்று டைட்டில் கார்டு முக்கியமான இடத்தில் தான் வரும் .

அந்த முக்கியமான இடம் என்பது திரைக்கதை மன்னர் அவர்கள் தன்னை தாழ்த்திக் கொள்ளும் இடமாக இருக்கும் .

அதை நாம் ரசித்து ஏற்றுக் கொள்வது போலவும் இருக்கும்.

அப்போதைய காலகட்டங்களில் வார இதழ்கள் மிக நன்றாக செயல்பட்டன.

அனைவருமே அதனை படிப்பார்கள்

அப்படி புதிய வார்ப்புகள் படத்தில் இதயம் பேசுகிறது குங்குமம் ஆகிய இரண்டு புத்தகங்களை வைத்து மிக நன்றாக வசனம் எழுதி இருப்பார்

ரதி
ஹாஜாஷெரீப்பிடம் என்னிடம் இதயம் மட்டுமே இருக்கிறது.
குங்குமம் இல்லை அவரிடம் இருந்தால் கேட்டு வாங்கி வா என்று தூதுஅனுப்புவார்

பாக்கியராஜ் இதயத்தை வாங்கி வந்தால் நான் குங்குமம் தருகிறேன் என்று சொல்வார்.

அதற்கு ரதி நான் யாருக்கும் இதயத்தினை கொடுத்ததில்லை.

உங்களுக்கு மட்டும்தான் கொடுக்கிறேன் என்று அவரிடம் போய் சொல் என்று இதயம் புத்தகத்தை கொடுத்து அனுப்புவார்.

மிக நல்ல காட்சி.

நல்ல வசனம்.

மனதை தொட்ட ஒரு காட்சியாக இதனை சொல்லலாம்.

இப்படி ஒவ்வொரு படத்திலும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தினையே உடைத்து இப்படியும் இருக்கலாம் என்று அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைத்தவர்.

அப்போதைய காலகட்டத்தில் ரஜினி கமல் விஜயகாந்த் சுதாகர் என்று யார் யாரோ இருந்தபோது கூட இவருடைய ஹீரோயிசமானது மிக நன்றாக எடுபட்டது.

நடனத்திற்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்றார்கள் ஆனால் முந்தானை முடிச்சு தாவணிக் கனவுகள் படங்களில் அற்புதமான நடனம் ஆடி அசத்திருப்பார்

சண்டை போடுவதற்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்றார்கள் ஆனால் தூறல் நின்னு போச்சு படத்தில் அற்புதமாக சிலம்பத்தை சுற்றி அடிப்பார்

கண்ணாடி ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்கள். கண்ணாடி தான் அவருடைய முகவரி என்று ஏற்றுக்கொள்ளும்படி செய்து விட்டார்.

குரல் ஒன்றும் சரியில்லை என்றார்கள்.

இவருடைய குரல் தான் இன்னும் 50 ஆண்டுகளுக்கு நூறாண்டுகளுக்கு ஒலிக்கும் .

அந்த குரல்தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது .

இப்படி எந்த ஒரு பலத்தையும் அதிகப்படியாகவும் எந்த ஒரு பலவீனத்தை பலமாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மிகப்பெரிய ஆளுமைத்தனம் மிக்க ஒரு மனிதராக இவரை சொல்லலாம்.

எந்த காலகட்டத்திலும் தன்னை அறிமுகப்படுத்திய குருவின் பெயரை சொன்னதே கிடையாது.

இயக்குனர் இயக்குனர் இயக்குனர் என்ற வார்த்தை மட்டும்தான்.

இறுதியில் இவ்வளவு விரைவாக குருநாதருடன் சென்று சேர்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை

இவருடைய படைப்புகள் என்றுமே அழியாதவை

25 படங்கள் என்றாலும் அதில் 20 படங்களுக்கு மேல் அற்புதமாக இருந்த படங்கள்.

இவர் இல்லையெனில் பார்த்திபன் பாண்டியராஜன் லிவிங்ஸ்டன் ஜி எம் குமார் ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள்.

எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு திரையுலகில் திரைப்பட சுவரொட்டி மூலமாக முதன்முதலாக விசிட்டிங் கார்டு இவர்தான் கொடுத்திருக்கிறார்.

இது நம்ம ஆளு படத்தில் நடிக்கவும் வாய்ப்பினை அளித்து இயக்கம் பாலகுமாரன் என்று பெயரையும் போட்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை உதவி இயக்குனராகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் நிறைய பேருக்கு நிறைய விதங்களில் உதவியிருக்கிறார்.

இன்று நினைத்துப் பார்த்தால் படத்திலும் சரி நேரிலும் சரி என்னால் முடிந்தது நான் செய்து என்னால் முடிந்த அளவிற்கு மேலே வந்துள்ளேன் நீங்களும் அது போல் வந்து விடுங்கள் நான் என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு உதவி செய்கிறேன் என்ற ஒரு உட்பொருளானது அவர் படத்தின் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் அவ்வாறே அவர் , நிஜத்திலும் நடந்து கொண்டு இருந்திருக்கிறார்

மிகவும் எளிமையான மனிதராகவும் இருந்திருக்கிறார்.

அதற்கு நான் நேரில் பார்த்த ஒரு உதாரணம்

சேலத்தில் எனது உறவினர் மற்றும் நண்பர் திரு தனதேவராஜன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்திற்காக இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்.

நாங்கள் எங்கே வரப்போகிறார் என்று நினைத்தோம்.

நண்பர் திரு தன தேவராஜன் ஏற்கனவே பாக்கியராஜ் ரசிகர் மன்ற தலைவராக சேலத்தில் இருந்தவர்.

அதெல்லாம் நடந்து முடிந்து தற்போது நீண்ட நாட்கள் ஆகிவிட்டன .

ஆனால் திருமணத்திற்கு சரியாக இவர் வந்து விட்டார் .

சேலம் புறவழிச் சாலையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் .

எங்கள் அனைவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

வந்தது மட்டுமல்லாமல் ஒன்றரை மணி நேரம் மண்டபத்திலேயே இருந்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு

(அன்று மட்டும் குறைந்தபட்சம 800 பேருக்கு மேல் இவருடன்nu புகைப்படம் எடுத்திருப்பார்கள்)

நன்றாக சிரித்துப் பேசி

திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு

அடுத்த நாள் காலையில இருந்து முகூர்த்தம் பார்த்துவிட்டுதான் கிளம்பினார்.

அவையெல்லாம் நேரில் இருந்து பார்த்தவுடன் இவர் மேல் இன்னும் எக்கச்சக்க மரியாதை அதிகமாகிவிட்டது.
அதற்கு அடுத்தபடியாக ஒரு பள்ளி நிகழ்விற்காக சேலம் வந்திருந்தார்.

அப்பொழுது பேசிக் கொண்டிருந்த பொழுது மிக சாதாரணமாக தான் பெரிய இயக்குனர் என்றோ

எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் தனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் என்ற ஒரு எண்ணம் கூட அதிகப்படியாக வைத்துக் கொள்ளாமல் வந்திருந்த அனைவரிடமே மிக நன்றாக பேசி சரியான ஒரு பதிலை கூறி

என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அந்த அளவிற்கு மிக பண்பாளராக இருந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் என்னுடைய அருமை நண்பர், உறவினர் நீண்ட காலங்கள் பாக்கியராஜ் ரசிகர் மன்ற தலைவராக சேலத்தில் இருந்தவர்,

இரண்டு தடவை சேலத்திற்கு திரைக்கதை மன்னர் வந்த பொழுது

என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று (இழுத்து சென்று) சந்திக்க வைத்து எனக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி, 40 ஆண்டு கனவினை நிறைவேற்றிய

திரு. தன.தேவராஜன்

அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் வந்து விட்டு சென்றவுடன் நாங்கள் அனைவரும் இவருடைய 50 ஆண்டு திரையுலகம் வாழ்வினை மிகப்பெரிய விழாவாக சேலத்தில் கொண்டாடலாம் என அவரிடம் அனுமதி கேட்டு நிச்சயம் பார்க்கலாம் என்றும் அனுமதி வழங்கி இருந்தார்

தேதி பின்னர் அதை சொல்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் காலன் என்னுடைய சபையில் வந்து 50 ஆண்டு விழாவை கொண்டாடு நான் உனக்கு விழா எடுக்கிறேன் என்று யாரிடமும் அனுமதி கேட்காமல் அவரிடமும் அனுமதி கேட்காமல் அழைத்து சென்று விட்டான்.

அடுத்ததாக இவர் ஆரம்பித்த பாக்யா வார இதழ் .

அதன் முதல் இதழில் பாலகுமாரன் பட்டுக்கோட்டை பிரபாகர் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தொடர்களுடன் இவரும் தொடர் எழுதினார். நான் படித்த திரைக்கதை மன்னர் எழுதிய தொடர்கள் அவசர போலீஸ் 100 பவுனு பவுனுதான் இது தவிர எனக்கு இரு தொடர்கள் தலைப்பு மறந்து விட்டது.

இவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதற்கு மிகப்பெரும் சான்று அந்த தொடர்கள்

அதற்கு மேல் ஒரு சிறப்பம்சம் கேள்வி பதில் பகுதி.

எங்கிருந்துதான் இவர் கதைகளை பிடிப்பார் என்றே தெரியவில்லை.

அப்போது மிகப்பெரிய ஒரு ஆச்சரியமாகவே இருந்தது.

கேள்வி பதில்
புத்தகம் ஐந்து ஆறு
பாகங்களாக
வெளியிட்டார்

எல்லா விஷயங்களுக்கும் கதையாக பதில் சொல்வார்.

கேள்வி பதில் பகுதியிலேயே அந்த காலகட்டத்தில் எந்த வார இதழிலும் மாத இதழிலும் வராமல் பின்பற்றப்படாமல் இருந்த ஒரு கதை சொல்லும் முறையை இவர் கொண்டு வந்து ஒரு புரட்சி செய்தார் என்றே சொல்லலாம்

மிக நன்றாக இருந்தது .

பாக்யா வார இதழானது ஆரம்பத்தில் மூன்று ரூபாய் என நினைக்கிறேன்.
நல்ல விற்பனை. பாக்யா புத்தகத்தில் அட்டைப்படம் நன்றாக இருக்கும்.

உள்ளே வருகின்ற தொடர்களும் நன்றாக இருக்கும்.

முக்கியமாக பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் ஆரம்பத்தில் அப்படித்தான்

அதன் பிறகு வந்த அறியும் பருவம்

பாலகுமாரன் எழுதிய பந்தய புறா

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்.

அதன் பின்பு பிரபஞ்சன் எழுதிய ஆசை என்னும் வேதம்

என அனைத்துமே மிக நல்ல தொடர்கள்.

அத்தனைக்கும் மேல் கவிதைகள்.

நல்ல நல்ல கவிதைகள் அதில் வரும்

இன்று வரை என் நினைவில் நின்ற கவிதை

ஒட்டகத்தை விற்று ஓடம் வாங்கினேன்
நதி பாலைவனம் ஆகியது.

இவருடைய இழப்பானது ஈடு செய்ய முடியாத இழப்பாக தான் இருக்கிறது.

இன்னொரு
பாக்கியராஜ் வரப்போவதில்லை.

அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

எம் ரவிச்சந்திரன், சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed