தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நண்பர்களுக்கு வணக்கம்…!!


சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன், உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன் நம்ம கே.பாக்யராஜ் அணி பெருமை மிகு வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை நம்ம கே.பாக்யராஜ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஒரு அணி அமைத்து களம் கண்டு வெற்றி காண்பதே அவரின் கடைசி மூச்சின் போதிருந்த விருப்பமாக இருந்தது.

அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்த வேட்பாளர்களுக்கும், முக்கியமாக தலைமைப் பொறுப்பேற்ற இயக்குநர் சேரன் அவர்களுக்கும்..
ஒருங்கிணைப்புக் குழுவில் ஆத்மார்த்தமாக முனைந்த அவர் போட்டு வைத்திருந்த பட்டியலில் இருந்தவர்களுக்கும், அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றி என்று சொல்வதை விடவும், கே.பாக்யராஜ் அவர்களின் ஆத்மா என்றென்றும் ஆசீர்வதிக்கும் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

எதிர் அணியிலிருந்தும் நிர்வாக மற்றும் செயற்குழுவுக்குத் தேர்வு பெற்றவர்களை வாழ்த்துகிறேன்.

இன்று சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான மதிப்பிற்குரிய திரு.வி.சி.குகநாதன் அவர்கள்.

தலைவர் சேரன் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் நலனுக்காக இணைந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று உரையாற்றினார்.

இனி இங்கு இரண்டு அணிகள் இல்லை, எல்லோரும் ஒரே அணி, சங்கத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையாக செயல்படுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார் திரு.வி.சி.குகநாதன்.

தேர்தலில் எதிரணியில் நின்றவர் என்று பார்க்காமல் வயது, அனுபவத்தை மதித்து திரு.சேரன் நேரில் சந்தித்து அன்புடன் அழைப்பு விடுத்ததால் இது சாத்தியமானது.

எந்தத் தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்து வந்து வாழ்த்திச் சென்ற திரு.வி.சி.குகநாதன் அவர்களின் பெருந்தன்மையும் பாராட்டுக்குரியது.

எங்கள் ஒற்றுமை காரணமாக ஜூ.வி போன்ற இதழ்கள் கற்பனைக் கட்டுரைகள் இனி எழுத இயலாமல் போய்விட்டதே என்கிற கவலையில் இருப்பதாகக் கேள்விப் படுகிறோம்.

  • எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed