தொடலாமா..? – நான் சந்தித்த நூறு பிரபலங்கள்….! கருணையே வடிவான ஶ்ரீ கௌதமானந்தா மகராஜ்…!! தொடர் 1 சிரிப்பானந்தா அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தகதகவென மின்னும் பொன் உடல். வசீகரிக்கும் புன்னகை.

சிறந்த ஞானம். கனிவான பார்வை. தனது இருபத்திரண்டாவது வயதிலேயே தன்னை ஆன்மீகப் பணியிலும் சமூகப் பணியிலும் இணைத்துக் கொண்டு அருந்தொண்டாற்றி வரும், சென்னை வாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான, கருணையே வடிவான ஶ்ரீ கௌதமானந்தா மகராஜ் அவர்களை சந்திக்க வாய்பேற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு கோடி வணக்கங்கள்!

உலகளவில் அமைந்திருக்கக்கூடிய ஓர் இயக்கமான ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைமை பீடத்தை ஒரு தமிழர் தலைவராக அலங்கரிக்கிறார் என்பது நாமெல்லாம் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒரு விஷயம்.

மும்பை, சென்னை ஶ்ரீ இராமகிருஷ்ண மடங்களில் தலைவராக பணியாற்றி தற்போது அதன் தலைமைப் பீடமான பேலூர் மடத்தில் தலைவராக ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.

அவரது மிகவும் எளிமையான பல சொற்பொழிவுகளை நான் கேட்டு ரசித்திருக்கிறேன்.

அத்தகைய உரைகள் பல்லாயிரக் கணக்கானோரை மிஷன் நோக்கி ஈர்த்திருக்கிறது. எனக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது

ஆனால் இத்தனை வயதாகியும் நேரடியான நல்லதொரு குரு அமையவில்லை என்று என் தந்தை அவரிடம் கேட்டபோது சற்றும் தாமதிக்காமல், “அதான் நான் வந்திருக்கிறேன்”, என்று பதிலுரைத்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒன்று.

பெரிய அறையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பேரரசர் போல அமர்ந்திருந்தார். அவரை மஹராஜ் என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது. கண்களை மேலிருந்து கீழாக அசைத்து என்னை அருகில் அழைத்தார்.

அருகில் சென்றேன். அவரது அருட்கடாக்ஷம் என்னுள் ஊடுருவி உடலெங்கும் ஒரு சிலிர்ப்பை உருவாக்கி இருந்தது.

விவேகானந்தரை ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது காலால் தீண்டிய அற்புத நிகழ்வு என் நினைவில் வர, “தங்களை நான் தொடலாமா?”, என்று தயக்கத்துடன் கேட்டேன்.

அதான் இதயத்தால் ஏற்கனவே தொட்டு விட்டாயே என்று சொல்வதுபோல் அவரது முக பாவனை இருந்தது.

தாராளமாக உன் விருப்பப்படியே ஆகட்டும் என்றார். மண்டியிட்டு அமர்ந்து அவரது முட்டிக் கால்களில் என் தலையை சாய்த்து என்னை மறந்து தியான நிலையில் சிறிது நேரம் இருந்தேன்.

ஆஹா!அது மறக்க இயலா ஓர் அற்புத அனுபவம்.

“சிரிப்பானந்தா என்பதில் எதுவும் விசேஷம் உண்டா?”, சற்று நேரம் சென்றபின் கேட்டார்,

“ஆமாம் சிரிப்பு யோகா சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் மஹராஜ்”, என்றேன்.

“நல்ல விஷயம் இன்றைய மக்களுக்கு மிகவும் தேவையான பணி. தொடர்ந்து சிரிக்க வை. எனக்கு ஒரு வேலை செய்,

இங்கே மடத்திலேயே சிலர் காவி கட்டிக்கொண்டு, முகத்தை ‘உர்ர்’ என வைத்தபடி பூனை போல இங்குமங்கும் சுற்றி வருவர்,

அவர்களுக்கு முதலில் சிரிக்கக் கத்துக் கொடு”, என்று சொல்லிச் சிரித்தார்.

நானும் அவரது சிரிப்பில் இணைந்து கொண்டேன்.

இறைவா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed