

நினைவலைகள்…! மனம் நிறைய ரோஜா பூக்கள்… பள்ளி தோழி அகிலாண்டேஸ்வரியும்…!! சிறப்பு எழுத்தாக்கம் – எழுத்தாளர் தீபா ஸ்ரீதரன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, அகிலாண்டேஸ்வரி என்ற பெண் எங்கள் வகுப்பில் சேர்ந்தாள். வரிசையான பற்கள், வட்ட முகம்.என்னைவிட நல்ல உயரமாக இருந்தாள். சிறுவயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம் உண்டு. பள்ளியிலோ குடும்பத்திலோ கல்லூரியிலோ புதிதாக யாராவது ஒரு நபர் வந்து சேர்ந்தால் உடனே அவர்களுடன் உறவாடிக் கொள்ள முயற்சி செய்வேன். அவர்களுடைய புதிய பழக்க வழக்கங்கள், உடல் மொழிகளைக் கவனிப்பதில் எனக்கு ஒரு தீராத ஆர்வம் உண்டு. எனவே அவளுடன் நிறையப் பேச ஆரம்பித்தேன். இருவரும் வகுப்பில் பேசிக்கொண்டேயிருப்போம். ஒரு மாதத்திலேயே நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
ஒருநாள் அவள் மதிய உணவிற்குத் தன் வீட்டிலிருந்து மீன் குழம்பு கொண்டு வந்திருந்தாள். அவள் அந்த மீனை உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடுவதைப் பார்த்தபோது, எனக்கும் அதைச் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம். நான் அவளையே கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவள், எனக்கு ஒரு சிறிய மீன் துண்டைக் கொடுத்தாள். எனக்கு அதை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. அவள் முட்களை எடுத்துவிட்டுச் சிறு துண்டுகளாகப் பிட்டுக் கொடுத்தாள்.
அதில் ஒரு சிறிய துண்டை வாயில் வைத்தேன். எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாலும், அவள் சாப்பிடுகிறாளே என்பதற்காக நானும் ஆர்வத்தில் பாதி மீனைச் சாப்பிட்டு முடித்தேன். அதுவரை மாமிசம் எதுவும் நான் சாப்பிட்டிருக்கவில்லை. அதனால் என் உடலுக்குச் சேரவில்லை என்று நினைக்கிறேன். சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளேயே எனக்கு வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு, மூன்று முறை வாந்தி எடுத்ததால் அவள் பயந்து போய்விட்டாள். அன்று மாலை பள்ளி முடிந்ததும் என் வீட்டு வரை வந்து என்னை விட்டுச் சென்றாள்.

அவள் விடைபெற்றுச் செல்லும்போது, எங்கள் வீட்டின் எதிரே இருந்த ஒரு மாடி வீட்டைச் சுட்டிக்காட்டி, ஏய் “அதுதான் எங்கள் வீடு” என்று சொன்னாள். எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். தூத்துக்குடியில் நான் இருந்த இரயில்வே காலணியில், ஒரு பெரிய மதில் சுவர் இருக்கும். அதற்கு அந்தப் பக்கம் ஒரு சாலை அதன் மறு புறத்தில் வரிசையாக வீடுகளும் கடைகளும் இருக்கும்.
அங்குள்ள ஒரு மாடி வீட்டுப் பால்கனியில் பூத்திருக்கும் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, மற்றும் வெள்ளை நிற ரோஜாக்களைப் பார்த்து நான் எப்போதும் மகிழ்ந்திருக்கிறேன். அது அவளுடைய வீடுதான் என்று அன்று தெரிந்த போது அத்தனை மகிழ்ச்சி. அதைப் பற்றி அவளிடம் சொன்னேன். “எனக்கு வெள்ளை ரோஜா மிகவும் பிடிக்கும். நாளை பள்ளிக்கு வரும் போது ஒரு பூ கொண்டு வருகிறாயா?” என்று கேட்டேன். அவள் சரி என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் நடந்து போய்ச் சேர 20- 30 நிமிடங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். நான் என் வீட்டு வாசல் படியிலேயே உட்கார்ந்து அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் வீட்டிற்குச் சென்றதும் மாடியிலிருந்து கையை அசைத்து, என் பெயரைக் கத்திக் கூப்பிட்டாள். நாங்கள் மாறி மாறிப் பெயர்களை அழைத்துக் கேட்கிறதா என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டோம்.
அந்தப் பரவசம் சொல்லில் அடங்காதது. சிறுவயதில் ஏற்படும் பரவசம், கால்களை வருடிச் செல்லும் அலைகளைப் போன்றது. அத்தனை பெரிய நீர்ப்பரப்பு இருப்பினும், உயர்ந்தெழும் பேரலையொன்று நம் பாதங்களை வந்து சேருமா என்ற ஓர் உள்ளார்ந்த உண்மையான ஆர்வம். அது வந்து பாதங்களை உரசும் போது ஏற்படும் பேரானந்தம்.

அன்றிலிருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் நாங்கள் கத்தி கத்திப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோம். அடுத்த நாள் அவள் எனக்கு ஒரு வெள்ளை ரோஜாவைக் கொண்டு வந்தாள். பள்ளியில் பூ வைக்க அனுமதி இல்லாததால், அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வைத்திருந்தோம். பள்ளி முடிந்ததும் அந்த ரோஜாவைத் தலையில் சூடிக்கொண்டு வீடு திரும்பிய அந்த மகிழ்ச்சி இன்றும் நினைவிருக்கிறது.
ஐந்தாம் வகுப்பு வரை நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்தேன். அப்போது அகிலாண்டேஸ்வரியும் என்னுடன் அதே வகுப்பில் சேர்ந்தாள். அந்த வகுப்பில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் ஆங்கில வழிக் கல்வியிலிருந்து
வந்தவர்கள் என்பதால், எங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்தது. யாரும் சரியாகப் பேசமாட்டார்கள்.
ஒருநாள் சமூக அறிவியல் பாடவேளையில், புவியியல் பாடத்தை வாசிக்கும்படி ஆசிரியர் கூறினார். வரிசையாக அனைவரும் வாசித்து வந்தனர். என் முறை வந்தபோது, நான் ‘Island – ஐலேண்ட்’ என்ற சொல்லை ‘இஸ்லேண்ட்’ வாசித்துவிட்டேன். அவ்வளவுதான். ‘கொல்லென்று’
சிரிப்புச் சத்தம். ஆசிரியர் உட்படப் பல மாணவிகளும் ஏளனமாகச் சிரித்தார்கள். அது அப்போது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது.

வகுப்பு முடிந்ததும் ‘ஓ’வெனக் கதறி அழுதேன். அப்போது என் பக்கத்திலிருந்த அகிலாண்டேஸ்வரி, “வருத்தப்படாத, சீக்கிரம் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்து இவர்கள் வாயை மூடு” என்று தேற்றினாள். அந்த வகுப்பில் ஜெசிந்தா என்ற மற்றொரு மாணவியும் இருந்தாள். தெற்றுப்பல், சுருள் முடி. ஸ்டைலாக இருப்பாள். அவள் ஐந்தாம் வகுப்பு வரை கான்வென்ட் பள்ளியில் படித்திருந்தாள். வகுப்பில் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடுவாள். அன்று மற்றவர்கள் சிரித்தபோதும் அவள் சிரிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் என் அருகில் வந்து, “தினமும் என்னிடம் ஒரு பக்கம் வாசித்துக் காட்டு, தவறுகள் இருந்தால் நான் திருத்துகிறேன்” என்றாள். அன்றிலிருந்து அவளும் எனக்கு நெருங்கிய தோழியானாள்.
தூத்துக்குடியில் நான் ஆறாம் வகுப்பை 5 மாதங்கள் மட்டுமே படித்தேன். பிறகு அப்பாவின் வேலை மாற்றத்தால் திருச்சிக்கு வந்து படிப்பைத் தொடர்ந்தேன். தூத்துக்குடியிலிருந்து கிளம்பும்போது ஜெசிந்தா எனக்கு ஒரு ‘ஹீரோ’ (Hero) பேனாவைப் பரிசளித்தாள். அது கொஞ்சம் உடைந்து மை ஒழுகிக் கொண்டிருந்தது. அவள் வீட்டில் புதிய பேனா வாங்கிக் கொடுத்துவிட்டதால், பழையதை எனக்குத் தந்தாள். அப்போதெல்லாம் எனக்கு ஹீரோ பேனா வாங்க வேண்டும் என்று மிகவும் ஆசை, ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் வீட்டில் வாங்கித் தரவில்லை. அதனால் அவள் கொடுத்த உடைந்து போன பேனாவைப் பொக்கிஷமாக வைத்துப் பல நாட்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதெல்லாம் கை முழுக்க மை கறை இருக்கும். வீட்டிற்கு வந்து துவைக்கும் கல்லில் விரல்களைத் தேய்த்து தேய்த்துச் சோப்பு போட்டுக் கழுவிக் கொள்வேன் . கையில் பேனாக்கறைப் படியப் படியப் படிக்கும் நாட்கள் இப்பொழுதும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

அகிலாண்டேஸ்வரியும் ஒரு மஞ்சள் ரோஜாச் செடி தொட்டி ஒன்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தாள். வீட்டில் அம்மா அப்போது நிறையக் குரோட்டன்ஸ் செடிகளை வைத்திருப்பார். அதனால் பல தொட்டிகளை இரயிலில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி விட்டோம். அதில் அந்த மஞ்சள் நிற ரோஜாச் செடியும் எங்களுடனே வந்து சேர்ந்தது.
ஜெசிந்தா கொடுத்த ஹீரோ பேனாவைப் பல வருடங்கள் வைத்திருந்தேன். எனக்குத் திருமணமாகி நான் மஸ்கட் சென்ற வேளையில் வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது என்னுடைய அண்ணன் பழைய பொருட்கள் நிரம்பிய என் டப்பா ஒன்றை அப்படியே தூக்கி எறிந்து விட்டதாக அப்பா பின்னொரு காலத்தில் எனக்குச் சொன்னார். அதில் பச்சை நிற, கொஞ்சம் உடைந்து போன அந்த ஹீரோ பேனாவையும் வைத்திருந்தது எனக்கு நினைவிலிருந்தது.

இன்றும் ரோஜாக்களைப் பார்க்கும்போது அகிலாண்டேஸ்வரியின் நினைவு வரும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நான் ஆங்கிலத்தில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தபோது, அகிலாண்டேஸ்வரியும்ஜெசிந்தாவும் மீண்டும் மனத்திற்குள் வந்து போனார்கள்.
அதுபோல இப்போதும் ஆங்கிலத்தில் கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதும்போது ஜெசிந்தாவின் முகம், விரலில் ஒழுகி, கல்லில் உரசியும் நீங்காமல் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் படிந்த மை கறையைப் போல் நினைவிற்கு வரும். ஆனால் அவள் மனத்தில் கடத்திய மகிழ்ச்சியும் நம்பிக்கையும், ஹீரோ பேனாவைக் கையிலேந்தியபோது கிடைத்த மகிழ்ச்சியில் ஒளிர்ந்த என் கண்களைப் போலப் பளிச்சிடும்.
இரண்டு வருடங்களுக்கு முன் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தேன். (சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு) உடைந்து போன என் வீட்டு வாசலிலிருந்து எதிரே பார்த்தேன். மனம் நிறைய ரோஜாப் பூக்கள், அகிலாண்டேஸ்வரியும்….




