
ரெண்டு காதுகளையும் வளர்த்து, தொங்கும் பாம்படம், பெரிய மூக்குத்தி, காதில் ஒன்னப்பத்தட்டு பல்லாக்குகள். இப்படி, சின்ன வயசில், வட்டிக்கு விட்டு வசூலிக்கும், ஆச்சிகளை மறுபடியும் பார்த்தது போலவே இருக்கிறார் ராதிகா.
ஊரில் இளந்தாரிகளே, தெறித்து ஓடுற ‘டெரர்’ கிழவி, பவுனுத்தாய். புருஷன், சரியா இல்லாட்டாலும், தனி மனுஷியா உழைச்சி, சுமை சுமந்து, கிடைக்கிற காச சிறுவாடு, தண்டல்னு போட்டு, ‘சேத்த பணத்த சிக்கனமா… செலவு செஞ்சி பக்குவமா… ஆற நூறா ஆக்குற..’ கேரக்டர்.
மூணு பவுன் போடனுமுன்னு மருமகன் சொன்னதால, மகளை வீட்டுக்கு அழைத்து வந்து, சொந்தக்காலில் நிற்க பக்குவப்படுத்துற ‘தில்’. ஊரே கரிச்சி கொட்டுற பவுனுத்தாய், ஆதரவற்ற கிழவிகளுக்கு கறி சோறு ஆக்கி போட்டு, அவங்களுக்கு தேவையானத செய்றதிலயும் ஈர மனசுக்காரி.
திடீர்னு பக்கவாதத்தில். படுக்கையில் விழ… பிரிஞ்சி போன மூணு மகன்களும் வந்து சேர… பக்கத்து வீட்டு பென்னி குயிக் என்கிற முனிஷ் காந்த், தாய் கிழவியோட மருமகன் இப்பிடி ஒவ்வொரு கேரக்டருமே நிறைவு.

கமல்ஹாசனோட தீவிர ரசிகரா, மைக் செட் உரிமையாளரா மூத்த மகன் சிங்கம் புலி… படம் முழுசும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏத்தமாதிரி கமல் பாட்டு, செம்ம… இப்பிடி, படம் முழுசும் ஒவ்வொரு கேரக்டருமே நிறைவு.
கிராமத்து காவல் தெய்வம் கருப்பு கிட்ட ஆவேசமா கோவிச்சிக்கிற கங்காரு அடிகளார்ங்கிற குடிகார ஆசாமி மொதக்கொண்டு… முனிஷ்காந்தோட போட்டோக்கள எடைக்கு போட்டு சேர் வாங்குனதா சொல்ற மேட்ரிமேனியல் காரர்… 160 பவுன் புதையல் சமாச்சாரத்தை கிளப்பி விட்டுட்டு போற இளவரசு வரை, ஒவ்வொருத்தரும் போற போக்குல சிரிக்க வைக்கிறாங்க.
இரண்டரை மணி நேரத்தில, மதுரை பக்கத்து கிராமத்த சுத்தி பார்த்து விட்டு வந்த உணர்வு. படம் ஆரம்பித்த அரை மணி நேரம், படம் முடியும் தறுவாயில் அரை மணி நேரம் என ஒரு மணி நேரம் தான் ராதிகாவின் ஆதிக்கம். மீதி படத்தை மற்றவர்கள் தான் சுவாரஸ்யமாக சுமந்து செல்கின்றனர், அவர்களில் ஒருவர் கூட, பிரபல நடிகர்கள் கிடையாது…!
அரிதாரம் இல்லாத அச்சு அசல் கிராமத்து மனிதர்கள், அவர்களின் உணர்வுகள் சண்டைகள், கிராமத்து கல்யாண கருமாதி நிகழ்வுகள், கிராம வீடுகள்… ஒவ்வொன்றும யதார்த்தம்.
பவுனுத்தாயின் இரண்டு அடுக்கு வீடு, வீட்டுக்குள் மரப்படிக்கட்டு, சுவர்களில் பிரேம் போட்ட கருப்பு வெள்ளை படங்கள், அந்தக்கால ரேடியோ, சாய்வு நாற்காலி எல்லாமே… நீண்ட காலத்துக்கு பின், பாரதிராஜா படத்தின் பிரதிபலிப்பு
‘படைக்கும் கடவுள், காக்கும் கடவுள்னு ஆண்களை படைச்சவங்க, அறிவுக்கும் பணத்துக்கும் பெண் கடவுள்களைத்தான் படைச்சிருக்காங்க. ஏன்னா, பொம்பள தான் பல மடங்கு பெருக்குவான்னு ஆம்பளைங்களுக்கும் தெரியும்’
‘ஏல… பொம்பளப்புள்ள பள்ளிக்கூடம் போறதுக்கு பத்து தலமுறை தேவைப்பட்டிருக்கு. ஒழுங்கா படி… ஏலேய்.. பொம்பள புள்ள கிட்ட என்னடா பேச்சி..’ன்னு பஸ்சில் ஒரே சீட்டில் கடலை போடுற பையன தொரத்தி விட்டுட்டு, ஸ்கூல் போற பொண்ணுக்கும் புத்திமதி சொல்றது…
‘எனக்கு சுயமா நிக்கிற துணிச்சலும், சுதந்திரமும் 60 வயசுல தான் கிடைச்சிது. என் மகளுக்கு 30 வயசுல சிடைச்சிருக்கு. என் பேத்திக்கு 18 வயசில கிடைக்குது. இனிமேல், பொறக்கும்போதே பொண்ணுக்கு துணிச்சலும் விடுதலையும் கிடைக்கணும். யாரு கையயும் எதுக்காகவும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது’
இப்பிடியாக போற போக்குல பவுனுத்தாய் பேசுற எல்லாமே, அந்த கேரக்டரை உசத்தி காட்டுது.
கூடவே, பவுனுத்தாயோட பொண்ணு ஒரு எடத்தில், ‘எனக்கு கல்யாணத்துக்கு முந்தின நாள் வரைக்கும், யாருக்கும் தெரியாம, பள்ளிக்கூடத்துக்கு ஆத்தா கூட்டிட்டு போச்சி. நிச்சயம் முடிஞ்ச பிறகு, ஏன்னு வாத்தியார் கேட்டதுக்கு, இந்த கூடுதல் நாட்கள்ல ஏதாவது நாலு கணக்கு கூடுதலா எம்பொண்ணு தெரிஞ்சிக்கிடுமேன்னு ஆத்தா சொல்லிச்சி. என் பையனுங்க விட்டாங்கன்னா, என் மருமகளுங்கள கூட, ஏதாவது படிக்க வச்சிருப்பேன்னு சொல்லும். நீங்கல்லாம், சோம்பேறியா இருந்தா ஆத்தா எதுக்கு திட்டும் தெரியுமா? நீங்களும் தனிச்சி சுயமா நாலு காசு சம்பாதிக்கலாமேங்கிறதுக்குத்தான்’னு தன்னோட அண்ணன் மனைவிகள்கிட்ட சொல்லும்போது, தாய் கிழவி, நிஜமான பவுனாக ஜொலிக்கிறார்.
160 பவுனுக்காக மூன்று மகன்களும் மருமகள்களும் கடன் வாங்கி, நகையை அடகு வைத்து, தன் உயிரை காப்பாற்றியதை அறிந்து, தான் சேர்த்து வைத்திருந்த 300 பவுன் நகைகளை மருமகள்கள், மகள் என பெண்களை மட்டுமே அழைத்து கொடுப்பது, பெண்களிடம் தான் சொத்து பத்திரமாக இருக்கும் என்பதை கூறாமல் கூறுகிறார்.
மாதம் ஒரு நாள் மதுரை டவுனுக்கு போய், கலர் கண்ணாடியை மாட்டி, கலர் குடித்துக் கொண்டு, தியேட்டரில் கை தட்டி ரசித்து படம் பார்த்து…. என பால்ய கால ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் பவுனுத்தாய்.. ஒவ்வொரு பெண்ணின் மனதையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
மூன்று பவுனுக்காக தன் மகளை துரத்தி விட்ட மருமகனை வெட்டி விட்டு, தன் மகளுக்கு சரியான மாப்பிள்ளையை மறுமணம் செய்து வைப்பதில், உயர்ந்து நிற்கிறார், பவுனுத்தாய்.ஈர மனம் கொண்ட வீரமான தாய் கிழவியை குடும்பத்துடன் ரசிக்கலாம்…!!
– நெல்லை ரவீந்திரன்.
