காற்றில் கலந்த கீதம் ஜானகி அம்மா…!! சேலம் எம் ரவிச்சந்திரன் (எ) செங்கதிர் நிலவன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

\

வாரம் ஒரு கண்ணீர் அஞ்சலி எழுதுவது போல் ஆகிவிட்டது. நம்மை பாதித்தவர்கள் உலகினை விட்டு பிரியும் பொழுது நம்மால் முடிந்த நன்றி கடன் அவர்கள் நமக்குள் ஏற்படுத்திய பாதிப்பினை ஏதோ ஒரு வடிவில் வெளிப்படுத்துவது தான்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படக்கூடிய திருமதி எஸ் ஜானகி. ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் நிறைந்து கர்நாடகாவில் மறைந்து விட்டார்

அன்னக்கிளியாக தமிழ்நாட்டிற்கு ராசாவே உன்ன நம்பி என வந்து என் மச்சான பாத்தீங்களா மலைவாழை தோப்புக்குள்ளே தேடிக் கொண்டிருந்தவரை முத்துச்சம்பா பச்சரிசியில் தலைவாழை இலை போட்டு விருந்தே வைத்து விட்டார்கள்.

தமிழக ரசிகர்கள். செந்தூரப்பூக்களுடன் ஆயிரம் தாமரை மொட்டுக்களோடு சிங்காரவேலனே தரிசிக்க வந்தவர் இன்று காற்றினில் கலந்த கீதம் ஆகிவிட்டார்.

வசந்தம் பாடி வந்து வைகையில் ஓடி வந்து அந்த வைகை நதி ஓரத்தில் ஆகாய கங்கையை செந்தேன் மலர்ச்சோலைக்குக் கொண்டு வந்து நம் அனைவரையும் அழகிய கண்ணே உறவுகள் நீயே எனவும் நினைக்க வைத்தவர். பூவரசம் பூவை கையில் எடுத்து கிழக்கே போகும் ரயில் ஏறி மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றியவர்.

ஆசை அதிகம் வைக்காமலேயே மேகம் என்ற காகிதத்தில் காதல் கடிதம் எழுதலாம் என்று ஒட்டகத்தை கட்டிக்கொண்டு நம்மை உணர செய்தவர். ஜெர்மனியின் செந்தேன் மலருக்கு ஆசைப்பட்ட ஒரு அழகான பெண்ணின் கையில் பட்டு வண்ண ரோசாவை கொடுத்து ஆத்து மேட்டிலேயே நல்ல பாட்டினை கேட்க வைத்தவர்.

எம் எஸ் வி யில் ஆரம்பித்து அனிருத் வரை கடந்து வந்தவர். அவருடைய சமகாலமான லீலா சுசீலா, அதன் பின்னர் வந்த ஷைலஜா, சசிரேகா, சுவர்ணலதா, சித்ரா, வாணி ஜெயராம் ஆகியோருடனும் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மேனன், சுனந்தா என்று 5 தலைமுறை பாடகர்களை கடந்து அவராகவே போதும் என நிறுத்திக் கொண்டவர் .

17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி நான்கு மாநிலங்களில் 33 விருதுகளை பெற்றவர். நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றவர். அதில் இரண்டு தமிழ் பட பாடல்களுக்கு கிடைத்தது. 80-களில் ஸ்ரீதேவி, ராதிகா ஆரம்பித்து அம்பிகா ராதா, ரேவதி, அமலா என கடந்து கௌதமி, பானுப்பிரியா, ரேகா, ஷோபனா, குஷ்பூ என நடந்து ஏன் சிம்ரனுக்கும் இவருக்கு குரல் பொருந்துமாறு பாடியவர்.

இவர் பாடி கொண்டிருந்தால் நிக்கி கல்ராணிக்கும், பவானி சங்கருக்கும் கூட பொருத்தமாக பாடியிருப்பார். எனக்கு இவர் ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோருக்கு பாடிய பாடல்கள் பிடித்தாலும் ரேவதிக்காக இவர் பாடிய வைதேகி காத்திருந்தாளில் அழகு மலராட மௌன ராகத்தில் சின்ன சின்ன வண்ணக்குயில் வான் மேகம் பூ பூவாய் தூவும் சின்ன பசங்க நாங்க படத்தில் பாடும் மானமுள்ள பொண்ணு ஆகிய பாடல்கள் மிகவும் பிடித்தது.

முக்கியமாக ரேவதிக்கு இவருடைய குரல் அப்படியே அவருடைய பாத்திரத்தை பிரதிபலிக்கும் படி இருக்கும். எஸ் பி பாலசுப்ரமணியம்- எஸ் ஜானகி மலேசியா வாசுதேவன்-எஸ் ஜானகி இளையராஜா-எஸ் ஜானகி கே ஜே ஜேசுதாஸ்- எஸ் ஜானகி பி பி ஸ்ரீநிவாஸ்-எஸ் ஜானகி மேலும் எஸ் ஜானகியின் தனிப்பாடல்கள் என்று பாட்டு அரசியாக தனி ராஜாங்கமே நடத்தினார்.

இளையராஜாவிற்கு மிக்க பக்க பலமாக அவர் எவ்வாறு நினைக்கிறாரோ அவ்வாறு தனது குரலால் மிகச் சிறப்பாக செய்தார். அதற்கு உதாரணம் 16 வயதினிலே படத்தில் வரும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடலில் வயதான குரல் மௌன கீதங்கள் படத்தில் வரும் டாடி டாடி ஓ மை டாடி சிம்புவிற்காக பாடிய ஐயாம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் ரங்கா படத்தில் பாடிய டூத் பேஸ்ட் இருக்கு, பிரஷ் இருக்கு, எழுந்திரு மாமா ஆகியவை குழந்தைகள் பாடுவது போலவே இருக்கும்.

அந்த அளவிற்கு குரலை மாற்றிப் பாடினார். பாடல்களைப் பாடும் பொழுது அதில் நிறைய வித்தியாசத்தங்களை காட்டுவார். அது இவருடைய சிறப்பு என சொல்லலாம். பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா வேறுரகம் பொன்மேனி உருகுதே வேறுரகம் மூக்குத்தி பூ மேலே வேறுரகம் பறந்தாலும் விடமாட்டேன் வேறு ரகம்.

இப்படி மிக நன்றாக பாடியவர். நிறைய பாடல்கள் ஜானகி அம்மாவிற்காகவே நான் கேட்டதுண்டு. அவர் யாருடன் பாடினாலும் அவருக்காகவே அந்த பாடலை நான் கேட்பேன். அந்த அளவுக்கு மனதினை கவர்ந்தவர். நிறைய கற்பனைகளை உதிக்கச் செய்தவர். மனதிற்கு உற்சாகம் வேண்டும் என்றால் இவர் பாடிய பாடல் கேட்கலாம்.

மிகுந்த உற்சாகமாகிவிடும். சங்கர் கணேஷ், இசையாக இருந்தாலும் சரி சந்திரபோஸ் இசையாக இருந்தாலும் சரி இளையராஜாவாக இருந்தாலும் சரி. இமான் இசையாக இருந்தாலும் சரி எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இவருடைய பாடல் மிக நன்றாக இருக்கும் இவர் குரல் அப்படிப்பட்ட ஒரு குரல்.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீங்கள்தான் எனநினைக்க வைத்து தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என சொல்ல வைத்து விட்டது. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் என்று இவர் பாடிய அந்த பாடல் இறுதியில் அவரை நோக்கி நாம் பாடும்படி அமைந்து விட்டது. இசையரசியின் ஆன்மா சாந்தி அடையட்டும்..!!

  • சேலம் எம் ரவிச்சந்திரன் (எ) செங்கதிர் நிலவன் புனைப்பெயர்: செங்கதிர் நிலவன் முன்னாள் தலைமைச் செயலர் திரு வெ.இறையன்பு இ ஆ.ப அவர்கள் இந்த வருடம் மே மாதம் 11-ம் தேதி எனக்கு வைத்தது.
  • செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed