செந்தில் பாலாஜியிடமே ‘முறைத்து’ கொண்ட திமுக மாணவர் அணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா…?? அக்கப்போர் நாளிதழ் akkappore.news

செந்தில் பாலாஜியிடமே ‘முறைத்து’ கொண்ட திமுக மாணவர் அணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா…?? அக்கப்போர் நாளிதழ் akkappore.news

திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும், சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு வந்தவருமான ராஜீவ் காந்தி, திடீரென மாணவர் அணி மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இதற்கு பதிலாக ‘கொள்கை பரப்பு இணைச் செயலாளர்’ என்ற முக்கியத்துவம் குறைந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் பெண் விவகாரங்கள் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்களுடன் ஏற்பட்ட மோதல் போக்குகளே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவர் திமுகவுக்கு ஆதரவாக மேடையில் பிரச்சாரம் செய்து வந்தார். உதயநிதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு நெருக்கமாக இருந்த அவர், மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல கூட்டங்களை நடத்தினார். இருப்பினும், நாளடைவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இணக்கமான சூழலை அவர் பேணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆரம்பத்தில் காட்டிய அந்தத் தீவிரமான உழைப்பு, போகப்போகக் குறைந்துவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி, அங்கு நடைபெறும் அரசுப் பணிகள் மற்றும் டெண்டர்களில் அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ராஜீவ் காந்தி, சமீபகாலமாக கோவையிலேயே முகாமிட்டிருந்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவையின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டதே அவருக்குச் சிக்கலாக மாறியது.

கோவை மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணக்கமாகச் செல்லாமல், “எனக்கான தொகுதியை நானே மேலிடத்தில் பேசி வாங்கிக்கொள்வேன்” என்று தன்னிச்சையாகச் செயல்பட்டது செந்தில் பாலாஜி தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடமும் புகார்கள் கொண்டு செல்லப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, ராஜீவ் காந்தி தொடர்பான சில தனிப்பட்ட விவகாரங்களை பாஜகவினர் கையில் எடுத்துள்ளதாகத் தலைமைக்குத் தகவல் கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினுடன் தனக்குள்ள நெருக்கத்தை வைத்து இதையெல்லாம் சமாளித்துவிடலாம் என ராஜீவ் காந்தி நம்பினார்.

ஆனால், புகார்கள் எல்லை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் சூழல் உருவானதாலும், அவரது பதவியைப் பிடுங்கத் தலைமை முடிவெடுத்தது.

முழுமையாக நீக்கினால் அது பொதுவெளியில் சர்ச்சையாகும் என்பதால், அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

“பெரிய அளவில் வளர வேண்டியவர், அவசரப்பட்டுத் தனது அரசியல் எதிர்காலத்தைச் சிதைத்துக் கொண்டாரே” என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இவர் கடந்த முறை சில தேர்தல்களில் கூட உதயநிதியின் செல்வாக்கை பயன்படுத்தி சீட் வாங்க முயற்சித்ததாக சில பேச்சுகள் எழுந்தன.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top