

பனியழகு…!! சிறப்பு கவிதை: கவிஞர் சு.வி.லட்சுமி, நாமக்கல். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
வெண்பனி முத்துத் தூறல்,
வெண்ணிற வைரம் போலே
மண்விளை பரந்த புல்லில்,
மந்திர நகையாய் மின்னும்!
கண்களில் கூச்சம் தோன்ற,
கவின்மிகு ரோசாக் கொத்தில்,
விண்ணொளி ஏற்றே ஏழு,
வண்ணவில் காட்டும் நீரே!
குளிர்ச்சியின் இன்பத் தாலே,
குதூகலம் கொள்ளும் உள்ளம்,
குளித்திடும் பூக்கள் கண்டால்,
குதித்திடும் பந்தாய் ஆடும்!
களிப்பினை எமக்குத் தந்த,
கலைமிகு பனியே நீயோ,
விளித்திடும் வெய்யோன் முன்னே,
விரைந்துமே மறைதல் நன்றோ?
- கவிஞர் சு.வி.லட்சுமி, நாமக்கல்



